2006-ம் ஆண்டிலேயே கூட்டணி ஆட்சிக்கு கருணாநிதி தயாராக இருந்தார்: தமாகா மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தகவல்

By எம்.சரவணன்

கடந்த 2006-ல் கூட்டணி ஆட்சிக்கு கருணாநிதி தயாராக இருந்தும் காங்கிரஸ் மேலிடம் அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என தமாகா மூத்த துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

ஒரு அரசியல் விமர்சகராக தமிழகத்தின் இன்றைய அரசியலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் பள்ளி மாணவனாக இருந்த போது, ‘தேர்தல் பாதை திருடர்கள் பாதை’ என இடதுசாரிகள் பிரச்சாரம் செய்வார்கள். அது உண்மையோ என்று நினைக்கிற அளவுக்கு இன்றைய தமிழக அரசியல் நிலைமை உள்ளது. வாக்களிக்க பணம் கொடுப்பவருக்கு மட்டுமல்ல, வாங்கும் வாக்காளர்களுக்கும் வெட்கம் இல்லை. இது மிகவும் ஆபத்தானது.

இந்த நிலையை மாற்ற என்ன செய்வது?

அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுநல சிந்தனை உடையவர்கள் இதற்கு எதிராக போராட வேண்டும். சர்வாதிகார ஆட்சி நடக் கும் நாடுகளில்கூட மக்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர். ஆனால், தமிழகத்தில் போராடும் மனநிலையே இல்லை. தேர்தல் வரை காத்திருப்பதுதான் புத்திசாலித் தனம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிகள் எப்படி அமையும்?

தமிழக வரலாற்றில் 2016 சட்டப் பேரவைத் தேர்தல் எதிர்பாராத பல திருப் பங்களை ஏற்படுத்தும். வாக்கு வங்கி கூட்டல், கழித்தல் கணக்குகளைத்தான் அனைவரும் போட்டுக் கொண்டிருக்கின்ற னர். இது மிகவும் விபரீதமானது.

அதிமுக ஆதரவு மனநிலையில் ஜி.கே.வாசன் இருப்பதாக பேசப்படுகிறதே?

ஊழல், மதவாதம் இரண்டையும் ஒருசேர எதிர்க்கும் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவுக்கும் நாங்கள் வரவில்லை.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற கருத்தை முன்வைத்து திருமாவளவன் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டீர்கள். இது நடைமுறையில் சாத்தியப்படுமா?

அரசியலில் சாத்தியமில்லாதது எதுவும் இல்லை. திமுக, அதிமுகவுக்கு மக்கள் 50 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்துவிட்ட னர். காங்கிரஸ் செய்யாத எதனை, இரு திராவிடக் கட்சிகளும் செய்து விட்டன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

2006-ல் திமுக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுவதை நீங்கள் தடுத்ததாக குற்றம்சாட்டுகிறார்களே?

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்தான் இந்தக் குற்றச்சாட்டை கூறியிருந்தார். அதில் துளியும் உண்மை இல்லை. அந்த நேரத்தில் என்னையும், அன்றைய காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவர் சுதர்சனத்தையும் அழைத்த திமுக தலைவர் கருணாநிதி, ‘‘காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க தயார். ஆனால், காங்கிரஸ் மேலிடம் அதுபற்றி எதுவும் கேட்கவில்லையே’’ என கூறினார். இதற்கு நானே சாட்சியாக இருக்கிறேன்.

கருணாநிதி தயாராக இருந்தால் காங்கிரஸ் மேலிடம் ஏன் தடுக்க வேண்டும்?

தமிழகத்தில் இனி ஒருபோதும் காலூன்ற முடியாது என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து பல ஆண்டு கள் ஆகிவிட்டது. அதனால்தான் கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் முடிவெடுக்கும் எந்த பதவியும் தமிழர்களுக்கு அளிக்கப்பட வில்லை. ப.சிதம்பரத்தை அரசு நிர்வாகத் தில் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, அரசியல் முடிவெடுக்கும் இடத் துக்கு அருகில்கூட அவரை அனுமதிக்க வில்லை.

காங்கிரஸ் மட்டுமல்ல பாஜகவும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது என்பதை குறுகிய காலத்தில் உணர்ந்து விட்டது. அதனால்தான் தமிழகத்தை அனைத்து விவகாரங்களிலும் புறக்கணிக்கின்றனர்.

தமாகா - பாஜக கூட்டணிக்கான வாய்ப்பே இல்லை என்று கூற முடியுமா?

மதவாத அரசியலோடு ஒரு போதும் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். 1999-ல் பாஜகவுக்கு ஆதரவு அளித்திருந்தால் மூப்பனார் துணைப் பிரதமர் ஆகியிருப்பார்.

காங்கிரஸில் இருந்தபோது பலமுறை மாநிலத் தலைவர் பதவிக்கு உங்கள் பெயர் அடிபட்டதே?

காங்கிரஸ் பொதுச்செயலாளராக கமல்நாத் இருந்தபோது எனது பெயர் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது. அவர் என்னை தனியாக அழைத்து, நீங்கள் கிறிஸ்தவர் என்பதால் எதிர்ப்பு வருகிறது என்றார். சாதி, மதம் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அரசியலில் தகுதிகள் இருந்தும் சிறுபான்மையினருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது.

மோடி அரசின் ஓராண்டு பற்றி?

இந்திய ஜனநாயக அமைப்பில் இருந்து அடித்தட்டு மக்கள் வெளியேற்றப்பட்டு பணக்காரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படு கிறது. ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து நேரடியாக அரசு நிர்வாகத்துக்கு வந்தவர்கள் எல்லா வற்றையும் இந்துத் துவ கண்ணாடி கொண்டு பார்க்கின்றனர். இதனால் சிறுபான் மையினருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை இந்துக்கள் மதவாத அரசியலை ஏற்கமாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

மோடி அரசில் பாராட்டும்படியான அம்சங்களே இல்லையா?

காங்கிரஸ் கூட்டணி அரசின் கடைசி சில ஆண்டுகள் கதவில்லாத வீடுபோல இருந்தது. யார் வேண்டுமானால் வரலாம். எதையும் எடுத்துச் செல்லலாம் என்ற நிலை இருந்தது. இப்போது அந்த நிலை மாறியுள்ளது. மத்திய அமைச்சர்களின் அலுவலகங்கள் முன்பு எப்போதும் நிற்கும் ஏஜென்ட்களை இப்போது காண முடிவதில்லை.

இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

க்ரைம்

20 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

28 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்