அதிமுக ஆட்சியின் ஊழலை மறைக்க காவல்துறையால் கூட முடியாது: கருணாநிதி

By செய்திப்பிரிவு

அதிமுக ஆட்சியின் ஊழல்களைத் திரை போட்டு மறைக்க காவல் துறையினராலும் முடியாது; காவல் துறையினருக்குத் தலைமை தாங்கி, அதிமுக ஆட்சியைத் தாங்கிக் காப்பாற்றுகின்ற முயற்சியிலே ஈடுபட்டுள்ள காவல் துறையின் ஆலோசகராலும் முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் கடித வடிவில் எழுதியுள்ள அறிக்கையில் கூறியதாவது: ''அதிமுக ஆட்சியில் ஊழல், ஊழல் எனக் கொடி கட்டி உயர உயரப் பறக்கிறது. எந்த ஊழலை எடுத்துச் சொல்வது, எந்த ஊழலை வேண்டாம் என விடுவது என்றே தெரியவில்லை. ஏடுகளைப் பிரித்தால், பக்கம் பக்கமாகத் தமிழக அரசின் ஊழல்கள்தான்.

ஊழலிலும் முந்திக் கொண்டு முதல் இடத்திலே இருப்பதுபொதுப்பணித் துறை தான். முதல் அமைச்சரின் பொறுப்பிலே இருப்பதல்லவா? அதனால் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சென்னை மாநகரில், அரசு அலுவலகங்கள் குவிந்திருக்கும் இடம் எழிலகம் பகுதி. கடற்கரைச் சாலையில் உள்ள அந்த எழிலகத்தின் வாசலிலே ஒரு மிகப் பெரிய டிஜிட்டல் பேனர்வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பேனரை யாரோ பெயர் இல்லாமல் கொண்டு வந்து இரவோடு இரவாக வைத்துவிட்டுப் போய் விடவில்லை.

தமிழ்நாடு பொதுப்பணித் துறைப் பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கம், சென்னை என்றே குறிப்பிட்டு, அவர்கள் சார்பில் அந்தப் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பேனரின் தலைப்பு என்ன தெரியுமா? தமிழகப் பொதுப் பணித் துறையில் 2014-2015இல் மாபெரும் ஊழல் செய்தமுதல் பொறியாளர் யார் என்பதுதான்!

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மிகப் பெரிய செலவினத்தைக் கொண்டிருப்பது பொதுப் பணித் துறை. அந்தத் துறையின் மூலமாகத்தான் அரசுக் கட்டிடங்கள், மருத்துவமனைகள், அணைகள், கால்வாய்கள் சீரமைப்பு, ஏரி-குளங்கள் பராமரிப்பு என கோடிக் கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது.

அந்தப் பணிகளை நிறைவேற்றுகின்ற ஒப்பந்ததாரர்கள் தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். சென்னை நகரிலே மட்டும் 600 ஒப்பந்ததாரர்கள் உள்ளார்கள். அந்த ஒப்பந்ததாரர்களிடமிருந்து 35 சதவிகிதம் முதல் 45 சதவிகிதம் வரை கமிஷனாக ஆளுங்கட்சி தரப்பினரால் உயர் மட்டத் திலிருந்து அடி மட்டம் வரை அவரவர் பங்குக்கு வாங்கப்படுகிறது என்று புகார் கூறப்பட்டும், எழுதப்பட்டும் வந்தது.

ஆனால் அந்தச் செய்தியை உறுதிப்படுத்துகின்ற வகையில் எழிலகம் வாசலில், பொதுப் பணித் துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பிலேயே, "மாபெரும் ஊழல் செடீநுத முதல் பொறியாளர் யார்?" என்று டிஜிட்டல் பேனர் வைக்கப்படுகிறது என்றால் இதைவிட வேறு எந்த அவமானமாவது அல்லது தலைகுனிவாவது இந்த ஆட்சிக்குத் தேவையா?

ஊழல் செய்த முதல் பொறியாளர் யார் என்பதை விளம்பரப்பலகை மூலமாகவே தெரிவிப்பதாகச் சங்கத்தின் சார்பில் தைரியமாக முன்வந்து தெரிவிக்கிறார்கள் என்றால்அதற்கு என்ன பொருள்? இந்தத் துறைக்குப் பொறுப்பேற்றிருப்பவர், தமிழகத்தின் முதல் அமைச்சர். துமாத்திரமல்ல; பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் ஒருவரும், பொதுப் பணித் துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரியும் கொடுக்கல்-வாங்கல் பற்றித் தொலைபேசியில் பேசுகின்ற பேச்சும் வாட்ஸ்-அப் மூலமாகவும், ஏடுகள் வாயிலாகவும் அப்படியே வெளிவந்து கலக்கியுள்ளது.

பொதுப்பணித் துறையிலே அதிகமாக லஞ்சம் வாங்குகின்ற பத்து அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவோம் என்று பொதுப் பணித் துறைப் பொறியியல் ஒப்பந்ததாரர் சங்கத்தின் மாநிலத் தலைவர் குணமணி, பொருளாளர் குமார் ஆகியோர் பேட்டியே கொடுத்து, அந்தப் பேட்டியும் ஏடுகளில் வந்துள்ளது.

அவர்கள் அளித்த பேட்டியில், ''பொதுப்பணித் துறையில், ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ள 35 சதவிகிதக் கமிஷனை, தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், செயற் பொறியாளர், உதவிச் செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர், பணி ஆய்வாளர் உள்ளிட்டோருக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

இத்துடன் 5 சதவிகிதக் கமிஷனை துறையின் முக்கியப் புள்ளிக்குத் தர வேண்டும். இரண்டாண்டுகளாக துறையின் முக்கியப் புள்ளிக்கு மட்டுமின்றி, மருத்துவப் பணிக்கான கமிஷனை, அந்தத் துறையின் முக்கியப் புள்ளிக்குத் தர வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்துள்ளது.

இதற்குத் தனியாக 5 சதவிகிதம் கமிஷன் கேட்கின் றனர். மொத்தமாக 45 சதவிகிதம் கமிஷனாகக் கொடுப்பது மட்டுமின்றி வருமான வரிக்காக 2 சதவிகிதம், விற்பனை வரிக்காக 2 சதவிகிதம் செலுத்துகிறோம். மீதமுள்ள குறைந்த பணத்தைக் கொண்டு பணிகளை முறையாகச் செய்ய முடியாது என்று கூறியதால், புதுக்கோட்டையைச் சேர்ந்த நண்பர் ஒருவருக்கு மருத்துவத் துறையின் முக்கியப் புள்ளி ஒப்பந்தப் பணிகளை வழங்கி வருகிறார். எங்களுக்குப் பணிகள் வழங்காதது மட்டுமின்றி, 13 மாதங்களாகச் செய்த பணிக்கான பணத்தையும் தரவில்லை" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்கள்.

நடப்பது என்ன அரசாங்கமா? அரசாங்கம் என்ற பெயரில் நடைபெறும் பகல் கொள்ளையா? அரசு அலுவலகங்கள் என்ன வியாபாரக் கேந்திரங்களா அல்லது ஏல மையங்களா?இதிலே 5 சதவிகிதம் லஞ்சம் பெறும் முக்கியப் புள்ளி யார்? ஒப்பந்தப் பணிகளை பெறுகின்ற புதுக்கோட்டை நண்பர் யார்? 45 சதவிகிதம் லஞ்ச மாகப் பெறப்படுவது உண்மையா இல்லையா? ஒரு பணிக்கான மொத்தத் தொகையில் 45 சதவிகிதம் லஞ்சமாகவே தரப்பட்டு விட்டால், மீதித் தொகை யில் செய்யப்படும் பணிகளின் தரம் எவ்வாறு இருக்கும்? ஒப்பந்தங்களைப் பெறுகின்றவர் அந்தப் பணிகளை எந்த அளவுக்கு மோசமாகச் செய்வார்? ஐஸ் கட்டி கை மாறி கை மாறிப் பல கைகள் மாறிச் செல்லும் போது கடைசியில் மிஞ்சப் போவது ஒரு துளி கூட இருக்காதல்லவா?

இந்தக் கேள்விக்கெல்லாம் அதிமுக அரசின் பதில் என்ன?

ஒப்பந்தக்காரர் சங்கத்தினர் பேட்டியிலே அதை மட்டுமா கூறியிருக்கிறார்கள்? மேலும், அந்தப் பேட்டியில்,"லஞ்சப் பணத்தில் அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி என்று

வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்கின்றனர். கடந்த 2014-15இல் மருத்துவமனை உள்ளிட்ட கட்டிடங்கள் பராமரிப்புச் செலவிற்காக 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தப் பணம் முழுவதும் செலவிடப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் முறையாக எங்கும் பணிகள் நடக்கவில்லை.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டிட நிதியிலும் முறைகேடு நடந்துள்ளது. பொறுத்தது போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டோம். அதிகம் லஞ்சம் வாங்கிய பத்து அதிகாரிகளின் பெயரை வெளியிட முடிவு செய்துள்ளோம். இன்று ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவில், இதுகுறித்து புகார் செய்யவுள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிடில், பெயர்ப் பட்டியலை வெளியிடுவோம்"" என்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் எந்த அளவுக்கு விரக்தியில் மனம் நொந்து போயிருப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறதல்லவா?

லஞ்சப் பணத்தில் ஒரு சில அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றிருக்கிறார்கள் என்றால் அந்த அதிகாரிகள் யார்? பராமரிப்புச் செலவுக்காக அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட பணம் செலவிடப்பட்டதாக அதிகாரிகள் கூறிய போதிலும், அந்தப் பணிகள் முறையாகவோ, முழுமையாகவோ எங்கும் நடக்கவில்லை என்று ஒப்பந்ததாரர்களின் சங்கத்தினரே தெரிவிக்கிறார்கள் என்றால், மக்கள் தந்த வரிப் பணம் எப்படியெல்லாம் அதிமுக ஆட்சியில் விரயமாகியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?

ஓமந்தூரார் மாளிகையில் தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம் உருவாக வேண்டும் என்பதற்காக நான் பொறுப்பிலே இருந்த போது ஒவ்வொரு நாளும் அங்கே சென்று பணிகளை நேரடியாகப் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கி வந்தேனே, அந்தக் கட்டிடத்திலே முறைகேடு நடந்ததாகக் கூறி எங்கள் மீது அதிமுக அரசு பொத்தாம் பொதுவில் பழி தூற்றி வழக்கு போட்டது; ஆனால் உண்மையில் அந்த வளாகத்திற்குள் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை கட்டட நிதியிலும் முறைகேடு நடந்துள்ளதாக பொதுப்பணித் துறை பொறியியல் ஒப்பந்ததாரர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பிலே உள்ளவர்களே தெரிவித்திருக்கிறார்களே, இதற்கு அதிமுக அரசின் பதில் என்ன?

ஆனால் இவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு தரப்பிலே ஈடுபட்டு, இந்த ஒப்பந்ததாரர்களை அழைத்து கட்டிடங்கள் பிரிவிலே உள்ள முக்கிய அதிகாரி ஒருவர் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றெல்லாம் அமைதிப் படுத்தி மூடி மறைத்திட முயன்றிருக்கிறார்.

இந்த ஊழலுக்குச் சான்று பகர்வது போல பொதுப்பணித் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரிஒப்பந்ததாரருடன் ஆற்றிய தொலைபேசி உரையாடல் முழுவதும் அப்படியே ஏடுகளில் வெளிவந்துள்ளது.

அந்த உரையாடலில், அதிகாரி ஒப்பந்ததாரரிடம் ஏன் பேசியபடி பணத்தைக் கொடுக்கவில்லை என்றும், தாமதத்திற்கு என்ன காரணம் என்றும், தன் சொந்தப் பணம் 90 ஆயிரத்தைக் கொடுத்திருப்பதாகவும், தன் வயிறு எரிகிறது என்றும், தன் காசு கிடைக்கா விட்டால் என்ன செய்வது என்று தெரியாது என்றும், தன் வாழ்க்கையும் முத்துக்குமாரசாமி கதையாக ஆகி விடும் என்றும், கார்த்திக், லெனின் போன்ற வர்கள் எல்லாம் முறையாகத் தரவில்லையா என்றும் நீண்ட நேரம் பேசியிருக்கிறார்.

அந்தப் பேச்சில், அந்த ஒப்பந்ததாரரை விளிக்கும்போது கிருஷ்ண மூர்த்தி என்று பெயர் சொல்லிப் பேசியிருக்கிறார். யார் அந்தக் கிருஷ்ணமூர்த்தி? அவருடன் பேசிய அரசு அதிகாரி யார்? எதற்காகப் பணம் கேட்கிறார்? யாருக்குக் கொடுக்க வேண்டுமென்கிறார்? எந்தப் பணிக்காக பணம் கேட்கிறார்? இதுபற்றிய உண்மைகள் என்ன? இதற்கெல்லாம் அதிமுக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டும்.

அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் இது போன்ற ஊழல்தான் மண்டிக் கிடக்கிறது. ஆனால் இப்போதுதான் வெளிப்படையான சான்றுகளுடன் வெளிவரத் தொடங்கியுள்ளது. அமைச்சர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்? ஆட்சி இன்னும் ஓராண்டுதான்; அதற்குள் முடிந்த வரை சுரண்டியது இலாபம் என்ற அளவில்தானே பணியாற்றுகிறார்கள்.

அமைச்சர்கள் இப்போது ஆற்றுகின்ற பணி எல்லாம் ஒவ்வொரு கோயிலாகச் சென்று யாகம் என்றும், தேர் இழுப்பது என்றும், தீ மிதிப்பது என்றும் வேண்டுதலிலேதான் ஈடுபட்டுள்ளார்கள். சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவின் விடுதலைக்காக அவற்றையெல்லாம் செய்வதாக அவர்கள் கூறிக்கொண்டாலும், உண்மையிலே விசாரித்தால் ஒவ்வொருவரும் தங்களின் அமைச்சர் பதவி போய்விடக் கூடாது, தாங்கள் எதிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் அந்தக் கோவில் திருப்பணிகளிலே ஈடுபடுகிறார்களாம்.

ஜெயலலிதாவின் விடுதலைக்காக அந்தப் பணிகளைச் செய்வதாகக் கூறிக் கொண்டு நடத்தப்படுகின்ற பூஜை, புனருத்தாரணங்களில் எத்தனை கலெக்டர்கள் கலந்து கொள்கிறார்கள்? அவர்கள் எல்லாம் யார்? ஐஏஎஸ் அதிகாரிகளா? அல்லது ஆளுங்கட்சியின் எடுபிடிகளா? அவர்கள் மீதெல்லாம் தலைமைச் செயலாளரோ, ஆளுநரோ இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

இன்றைக்கு வேண்டுமானால் இந்த அதிகாரிகள் தப்பித்துக் கொள்ளலாம், ஆனால் வருங்காலத்தில் இவர்கள் எல்லாம் விசாரணைக் கமிஷன் முன்னால் நின்று பதில் சொல்ல வேண்டிய நிலைமை நிச்சயம் உருவாகும்.

எழிலகம் வாசலில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருக்கின்ற செய்தி கிடைத்ததும், உடனடியாக காவல் துறை அங்கே வந்து அந்தப் பேனரை அகற்றுகின்ற முயற்சியிலே ஈடுபட் டுள்ளது. அதை மட்டும் அகற்ற சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், காவல் துறையினர் அந்தப் பகுதியிலே உள்ள அனைத்து பேனர்களையும் அகற்றுவதாகக் கூறி இந்தப் பேனரை அகற்ற முனைந்திருக்கிறார்கள். ஆனால் இப்படியெல்லாம் செய்து இந்த ஆட்சியினரின் ஊழல்களைத் திரை போட்டு மறைக்க காவல் துறையினராலும் முடியாது; காவல் துறையினருக்குத் தலைமை தாங்கி, அதிமுக ஆட்சியைத் தாங்கிக் காப்பாற்றுகின்ற முயற்சியிலே ஈடுபட்டுள்ள காவல் துறையின் ஆலோசகராலும் முடியாது. சிலரை பல நாள் ஏமாற்றலாம்; பலரை சில நாள் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது.

அதிமுக ஆட்சியின் ஊழல்கள் பற்றிய உண்மைகள் அனைத்தையும் மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இனியும் அவர்களை '' செய்வீர்களா?செய்வீர்களா?" என்று கேட்டுத் திசை திருப்ப முடியாது'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

56 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வலைஞர் பக்கம்

28 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்