ஜெயலலிதா விடுதலை: கருணாநிதி கருத்து

By செய்திப்பிரிவு

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, இது இறுதி தீர்ப்பு அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா குறித்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவையும் மற்றவர்களையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறியிருக்கிறார். இந்த நேரத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்பு இதே நீதிபதி குமாரசாமி என்னென்ன சொன்னார் என்பது தான் நினைவுக்கு வருகிறது.

29-1-2015 அன்று விசாரணையின் போது, நீதிபதி குமாரசாமி சசிகலாவின் வழக்கறிஞரைப் பார்த்து, "சொத்துக் குவிப்பு வழக்கை முழுமையாக விசாரணை நடத்திய தனி நீதி மன்ற நீதிபதி; குற்றவாளிகள் தவறு செய்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் தனது தீர்ப்பில் 150 முடிச்சுகள் போட்டுள்ளார். மேல்முறையீட்டு மனு விசாரணையில் அந்த முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து உரிய ஆதாரங்களுடன் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இதுவரை இந்த முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சியை நீங்கள் யாரும் மேற்கொள்ளவில்லை. அதற்கான ஆதாரங்களையும் காட்டவில்லை" என்று கூறினார்.

நீதிபதி குமாரசாமி தெரிவித்த அந்த முடிச்சுகள் இப்போது அவிழ்க்கப்பட்டு விட்டனவா?

16-2-2015 அன்று ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமார் "இது அரசியல் ரீதியாக பழி வாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டுள்ள பொய் வழக்கு" என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சி.ஆர். குமாரசாமி, "இது பொய் வழக்கு, பொய் வழக்கு என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கிறீர்கள். ஆனால், குற்றவாளிகள் மீது கூறியுள்ள புகார் உண்மையில்லை என்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் முழுமையாகக் காட்டாமல், வாய் வழியாக பொய் வழக்கு என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

அரசுத் தரப்பில் 259 சாட்சிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். புகார் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் 2 ஆயிரத்து 341 ஆவணங்கள் தாக்கல் செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகள் தரப்பில் 99 சாட்சிகளும் 385 ஆவணங் கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளீர்கள். அதிலும் அரசுத் தரப்புக் குற்றத்தை முறியடிப்பதற்கான ஆதாரங்கள் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை" என்றார்.

அரசுத் தரப்புக் குற்றச்சாட்டினை முறியடிப்பதற்கான ஆதாரங்கள் நீதிபதி குமாரசாமியிடம் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக எந்தத் தகவலும் இல்லை!

மீண்டும் ஒரு முறை நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களிடம், "தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த சாட்சியங்களோடும் ஆதாரங்களோடும் 82 - 92 சதவிகிதம் நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் இதுவரை சாட்சிய ஆதாரங்களை காட்டவும் இல்லை. 30 - 35 சதவிகிதம் வரை தான் வாதிட்டி ருக்கிறீர்கள் என்றார். அப்போது ஜெயலலிதா வழக்கறிஞர், "35 மார்க் எடுத்தாலே பாஸ் தான்" என்றார். அதற்கு நீதிபதி குமாரசாமி "பள்ளிக் கூடத்தில் 35 மார்க் எடுத்தால் பாஸாக இருக்கலாம். ஆனால் நீதி மன்றத்தில் எதிர் தரப்பை விட அதிக மார்க் வாங்கினால் தான் பாஸ் பண்ண முடியும். அப்படிப் பார்த்தால் உங்களை விட அவர்கள் 65 மார்க் அதிகமாக வாங்கியிருக்கிறார்கள். அதனால் அவர்கள் தான் பாஸ்" என்று பதிலளித்தார்.

தற்போது ஜெயலலிதா தரப்பினர் 100 மார்க் வாங்கிவிட்டதாக நீதிபதி குமாரசாமி முடிவுக்கு வர என்ன நடைபெற்றது? எங்கே நடைபெற்றது?

இதற்கெல்லாம் விடை காணத் தான் கர்நாடக அரசின் சார்பில் அண்மையில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆச்சார்யா இன்று தீர்ப்பு வெளியானதும் "இதுவே இறுதி தீர்ப்பல்ல; இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா அரசு உச்ச நீதி மன்றத்தில் "அப்பீல்" செய்யும்" என்று கூறியிருக்கிறார்.

எனவே இன்று சொல்லப்பட்டிருப்பது இறுதி தீர்ப்பல்ல. "நீதி மன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதி மன்றம் ஒன்று இருக்கிறது. அது தான் மனச்சாட்சி என்ற நீதி மன்றம். அது அனைத்து நீதி மன்றங்களுக்கும் மேலானது" என்று அண்ணல் காந்தியடிகள் கூறியதைத் தான் இப்போது எல்லோருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்