தமிழக காவல்துறைக்கு ரூ.444.15 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் காவல்துறைக்காக ரூ.444.15 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள், புதிய காவல் மற்றும் தீயணைப்பு நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது, குற்றங்களை கண்டுபிடிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, போக்குவரத்தை சீரமைப்பது, இயற்கை இடர்பாடுகளின்போது மீட்புப் பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகளை காவல்துறை செய்துவருகிறது. இப்பணிகள் மேலும் சிறக்க புதிய காவல் நிலையங்கள் தோற்றுவித்தல், சொந்த கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டுதல், ரோந்து வாகனங்கள் வாங்குதல் போன்ற நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தவகையில், மதுரை மாநகர் ஆயுதப்படை வளாகத்தில் 226 குடியிருப்புகள் உட்பட தமிழகம் முழுவதும் காவல்துறைக்காக ரூ.423.50 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா கடந்த 24-ம் தேதி தலைமைச் செயலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்துவைத்தார்.

மதுரை ஆயுதப்படை வளாகத்தில் தரை மற்றும் 3 தளங்களுடன் ரூ.20.65 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 226 குடியிருப்புகள், சென்னை எழும்பூரில் 31,335 சதுர அடியில் அனைத்து நவீன வசதிகளுடன் தரை மற்றும் 4 தளங்களுடன் ரூ.8.06 கோடியில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும கட்டிடம், சென்னை (மதுரவாயல் மற்றும் மடிப்பாக்கம்), மதுரை (விளக்குத்தூண்), ராமநாதபுரம் (சாயல்குடி) உட்பட 26 மாவட்டங்களில் ரூ.31.12 கோடியில் கட்டப்பட்ட கடலோர காவல் நிலையங்கள் உள்ளிட்ட 68 காவல் நிலையங்கள் ஆகியவற்றை முதல்வர் திறந்துவைத்தார்.

சென்னை மருதம் வளாகத்தில் அமைந்துள்ள தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு கூடுதல் தளம், ராஜரத்தினம் விளையாட்டு மைதான வளாகத்தில் பயிற்சி மையம் மற்றும் தங்குமிடங்கள், திருச்சி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஆயுதப்படைக்கு நிர்வாக அலுவலகங்கள், புழல், மதுரை, கமுதியில் காவலர் தங்குமிடங்கள், அரியலூர், கோவை, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அங்காடி கட்டிடங்கள் என ரூ.50.27 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதுதவிர காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் ரூ.11.38 கோடியில் 130 தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்பு கட்டிடங்கள், தஞ்சையில் 8,344 சதுர அடியில் ரூ.1.30 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வட்டார தடய அறிவியல் ஆய்வக கட்டிடம் என மொத்தம் ரூ.444.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

காவல் நிலையங்கள்

சென்னை மாம்பலம் மற்றும் திருவான்மியூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 2 ரயில்வே காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர், ஈரோடு மாவட்டம் சென்னிமலை, திருப்பூர் மாவட்டம் அவிநாசி, கோவை மாவட்டம் அன்னூர், நாகை மாவட்டம் திருமருகல், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் 7 புதிய தீயணைப்பு மீட்பு நிலையங்கள், சென்னை கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் ஆகியவற்றையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேலும், சென்னை மாநகர காவல்துறையின் பயன்பாட்டுக் காக 52 ஜீப்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு அனைத்து இடங்களிலும் இலகுவாக செல்லும் 12 வாகனங்கள் என ரூ.5.03 கோடியில் வாங்கப்பட்ட 64 வாகனங்களை ஒப்படைப்பதற்கு அடையாளமாக 5 காவல்துறை ஓட்டுநர்களிடம் வாகனங்களுக்கான சாவியை முதல்வர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், கே.ராமானுஜம், உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா, டிஜிபி அசோக்குமார், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ், தீயணைப்புத்துறை இயக்குநர் ஆர்.சி.குடாவ்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

உலகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்