மீண்டும் முதல்வர் பதவி: நிதானம் காட்டுகிறாரா ஜெயலலிதா?

By செய்திப்பிரிவு

கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி, ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முற்றிலுமாக விடுவித்து தீர்ப்பளித்திருக்கிறார். ஆனாலும், மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொள்வதற்கு ஜெயலலிதா அவசரம் காட்டவில்லை.

தீர்ப்பு வெளியாகி 3 நாட்கள் ஆகியும் அமைச்சரவை ராஜினாமா, எம்எல்ஏக்கள் கூட்டம் என எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. ஜெயலலிதா எப்போது பதவியேற்பார் என்று தெரியாததால் ஆளுக்கொரு தேதியை பரப்பி வருகின்றனர்.

தீர்ப்பு வெளியான நாளில் அதிமுகவைச் சேர்ந்த 151 எம்எல்ஏக்களும் சென்னைக்கு வந்துவிட்டனர். கூட்டத்துக்கான அழைப்பு எப்போது வருமோ என்று அவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் கட்சி மேலிடத்திடம் இருந்து எந்தத் தகவலும் வராததால் 3 நாட்களாக தவிப்பில் உள்ளனர்.

அவர் இன்று பதவியேற்பார், நாளை ஏற்பார் என ஊகிப்பவர்களுக்கு ஆளுங்கட்சி வட்டாரமும், அரசு அதிகாரிகள் வட்டாரமும் தெரிவிப்பது என்னவென்றால் "இந்த வாரம் ஜெயலலிதா பதவியேற்பு இருக்காது" என்பதே.

ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டும், மீண்டும் முதல்வராக வேண்டும் என அதிமுக தொண்டர்கள் தவம் கிடந்த நிலையில் இந்த தாமததுக்குப் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

தற்போது வெளியாகி இருக்கும் தீர்ப்பின் நகலில் பிழைகள் இருப்பதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சட்ட ஆலோசனைகளை பெற்றுவருகிறார். அதானாலேயே அவர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவசரம் காட்டவில்லை எனத் தெரிகிறது.

மேலும், இது தொடர்பாக ஜெயலலிதா விரைவில் அவரது வழக்கறிஞர்களை நேரில் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கட்சியின் சில மூத்த நிர்வாகிகள் கூறும்போது, சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறதா என்பதற்காக ஜெயலலிதா காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி 2 நாட்களுக்குப் பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை போயஸ் தோட்டம் இல்லத்தில் ஜெயலலிதா நேற்று (புதன்கிழமை) சந்தித்தார்.

முதலில் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அமைச்சர்களை தனித்தனியாக சந்தித்ததாகவும், நடந்துவரும் பணிகள் குறித்து துறைவாரியாக கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படுவது, முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பது ஆகியவை குறித்து எதுவும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

மே-11 தீர்ப்பு வெளியானது. காலை 11.02 மணியளவில் தீர்ப்பு தெரியவந்தது. உடனடியாக கொண்டாட்டங்கள் களை கட்டின. ஆனால், மதியம் 2.00 மணியளவில் இருந்தே அதிமுக கட்சி அலுவலகத்துக்கு அருகேயும் சரி, போயஸ் தோட்டத்திலும் சரி கொண்டாட்டங்கள் நின்றிருந்தன என பேசிக்கொள்ளப்படுகிறது. தனது வீட்டின் முன் குவிந்த அடிமட்டமட்ட தொண்டர்களுக்குக்கூட ஜெயலலிதா கையசைத்து மகிழ்ச்சியைப் பகிரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

அதற்குள்ளதாகவே ஜெயலலிதாவுக்கு தீர்ப்பில் இருந்த சட்ட சிக்கல் தெரிய வந்திருக்க வேண்டும் அதனாலேயே அவர் பொதுமக்களையோ, பத்திரிகையாளர்களையோ சந்திக்க தவறி இருக்க வேண்டும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தத்தில், அதிமுக தரப்பில் நிலவும் அமைதிக்கும், தாமதத்துக்கும், தயக்கத்துக்கும் காரணமாக இருப்பது தீர்ப்பில் வெளிப்படையாக தெரியும் தவறான மதிப்பீடுகளே எனத் தெரிகிறது. தீர்ப்பு குழப்பத்தால் அதிமுக வட்டாரம் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுகிறது.

முன்னதாக, சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பில் கணக்குத் தொடர்பான பிழைகள் உள்ளிட்டவை இருப்பதாகக் குறிப்பிட்டு, இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் திமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து ஓரிரு நாட்களில் சட்ட ரீதியான முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தாரமையா நேற்று தெரிவித்தார்.

இந்த நிலையில், மேல்முறையீடு தொடர்பான கர்நாடக அரசின் அணுகுமுறையையொட்டியே, ஜெயலலிதா தனது இறுதி முடிவு மேற்கொள்வார் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

45 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்