தமிழக மீனவர்கள் கடத்தல்காரர்களா?- மத்திய அரசு மன்னிப்புக் கேட்க ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தொடர்ந்து மீனவ விரோதப் போக்குடன் நடந்துவரும் மத்திய அரசு மீனவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்தியக் கடல் படையின் கப்பல்களை முக்கியக் கடலோரங்களில் நிறுத்தி வைத்து இந்திய மீனவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க ஆணையிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவுக்கு, இந்தியக் கடலோர காவல்படையின் துணை இயக்குனர் ஜெனரல் கே.ஆர்.பாட்டியால் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தமிழக மீனவர்கள் கடத்தல்காரர்கள் என்றும், தங்கம், போதைப் பொருளைக் கடத்துகிறார்கள் என்றும் குறிப்பிட்டு தமிழக மீனவர்களைக் கொச்சைப்படுத்தியுள்ளார்கள்.

இது நரேந்திர மோடி அரசின் மீனவ விரோதப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

வங்கதேசம், பாகிஸ்தான், மாலத்தீவு போன்ற அண்டை நாடுகள் கூட சொல்லாத, ஏன் இலங்கை அரசு கூட கூறாத ஒன்றை இந்திய உயர் அதிகாரி கூறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

போதைப் பொருள் கடத்தியதாக ஐந்து மீனவர்களை இலங்கை அரசு வழக்குப் பதிந்து கைது செய்த காலக்கட்டத்தில் கூட அவர்கள் போதைப் பொருள் கடத்தவில்லை என்றே காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு கூறியது.

தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான அரசு கார்பரேட் கம்பெனிகளின் ஏஜண்டாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரம்பரிய மீனவர்களின் தொழிலை நசுக்கும் விதத்தில் இந்தியக் கடல் எல்லையில் ராட்சச அயல்நாடு மீன்பிடி கப்பல்கள் மீன்பிடிப்பது, கடலுக்கு மேலேயே விற்பனை செய்வது போன்றவற்றிற்கு வழிவகுக்கும் மீனாகுமாரி அறிக்கையை அமுல்படுத்திட நரேந்திர மோடி அரசு முனைப்புக் காட்டி வருகிறது.

இந்த மீனவ விரோதச் செயலுக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டிவரும் வேலையில் மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த பதில் மனு அமைந்துள்ளது.

இந்தியக் கடலோரக் காவல்படையின் துணை இயக்குனர் ஜெனரல் கே.ஆர்.பாட்டியால் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும், தொடர்ந்து மீனவ விரோதப் போக்குடன் நடந்துவரும் மத்திய அரசு இதற்காக மீனவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்