வேறு ரத்தப் பிரிவு சிறுநீரகம் பொருத்தி சிகிச்சை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சாதனை

By செய்திப்பிரிவு

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுநீரகங்கள் செயலிழந்த மகனுக்கு, வேறு ஒரு ரத்தப் பிரிவை சேர்ந்த தாயின் சிறுநீரகத்தைப் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் வினோத் பாபு (21). சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்துள்ள இவரது உடல்நிலை சில மாதங்களுக்கு முன் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வினோத் பாபு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்திருப்பது தெரியவந்தது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வினோத்பாபு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்தினர் அவரை கடந்த ஜனவரி 20-ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் திட்டமிட்டனர். வினோத் பாபுவுக்காக அவரது தாய் ஆண்டாள் தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக கொடுக்க முன்வந்தார். இதனைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சையின் மூலம் அவரது சிறுநீரகத்தை எடுத்து மகன் வினோத் பாபுவுக்கு வைத்தனர்.

இதுதொடர்பாக கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரத்த சொந்தம் உள்ள உறவினர்கள் மட்டுமே சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முடியும். அதுவும், சிறுநீரகத்தை பெறுபவர் மற்றும் சிறுநீரகத்தை தானம் கொடுப்பவரின் ரத்த பிரிவு ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் சிறுநீரகத்தை பொருத்த முடியும். வேறு ரத்த பிரிவை சேர்ந்த சிறுநீரகத்தை பொருத்தினால், ரத்தத்தில் உள்ள எதிர்ப்பு அணுக்கள், தானம் பெற்ற சிறுநீரகத்தை அழித்துவிடும்.

வினோத் பாபுவுக்கு வேறு ஒரு ரத்த பிரிவை சேர்ந்த சிறுநீரகத்தை அறுவைச் சிகிச்சையின் மூலமாக பொருத்தியுள்ளோம். பிளாஸ்மா சுத்திகரிப்பு முறையின் மூலம் ரத்த எதிர்ப்பு அணுக்களை அழித்துவிட்டோம்.

மேலும் எதிர்ப்பு அணுக்களை கட்டுப்படுத்த நவீன மருந்துகளை கொண்டு சிகிச்சை அளித்துள்ளோம். இந்த அறுவைச் சிகிச்சையை ஒரு சவாலாக எடுத்து வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலேயே முதல் முறையாக, இந்த மருத்துவமனையில் இதுபோன்ற அரிய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவைச் சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு சுமார் ரூ.10 லட்சம் செலவாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

இந்தியா

30 mins ago

சினிமா

47 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

மேலும்