மின் வாரியத்தில் ரூ.1 லட்சம் கோடி ஊழல்: சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கக் கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு மின்சாரத் துறையில் ரூ.1 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் தங்களது நிலைப்பாட்டை 4 வாரங் களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சென்னை உள்ளகரத்தை சேர்ந் தவர் சி.செல்வராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:

1970-களில் நாட்டிலேயே மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் இருந்தது. இப்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது. பல மணி நேர மின்வெட்டு காரணமாக தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. மின்துறை அதி காரிகள் நீண்டகாலமாக செய்த முறைகேடுகளால் ரூ.1 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது.

2003-ம் ஆண்டு நாடாளு மன்றத்தில் மின்சார சட்டம் இயற்றப்பட்டது. இதன் அடிப் படையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்படுத்தப்பட்டது. அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள பல அலகுகள் (யூனிட்) மூடப்பட்டு, மின் உற்பத்தி தடை செய்யப்பட்டது. இவ்வாறு செயற்கையாக மின் தட்டுப்பாடு ஏற்படுத்தி, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப் பட்டது.

அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.3 செலவாகும். ஆனால், அந்த ஒரு யூனிட் மின்சாரத்தை, தனியாரிடம் இருந்து ரூ.15-க்கு வாங்கியுள்ளனர். இதன்மூலம் அரசுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.12 இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக செயற்கையான மின் தட்டுப்பாடு ஏற்படுத்தி, அதிகாரிகள் அறிவியல் பூர்வமாக ஊழல் செய்துள்ளனர். மொத்தத்தில் தமிழ்நாடு மின் வாரியத்தில், கடந்த ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி வரை ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். இந்திய முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வினோத்ராய் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து, தமிழக மின்சாரத் துறையில் நடந்துள்ள ரூ.1 லட்சம் கோடி ஊழல் குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

2003-ம் ஆண்டு மின்சார சட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்து, இதன் நிர்வாகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று மனுவில் கூறப் பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் இந்த மனுவை நேற்று விசாரித்தனர். தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் கோரியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க விரும்பினால் 4 வாரத்துக்குள் தெரிவிக்கலாம். வழக்கு விசாரணை பிப்ரவரி 26-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்