‘விசில்’ அடிக்கும் வரையாடுகள் : வேகமாக அழிந்து வரும் தமிழகத்தின் மாநில விலங்கு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

இயற்கையின் அபூர்வ படைப்பான வரையாடுகள் தற்போது வேகமாக அழிந்துவருவதாக வனவிலங்கு ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

உலகிலேயே மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக, கேரள வனப்பகுதியில் மட்டுமே வரையாடுகள் காணப்படுகின்றன. இவற்றை ‘நீலகிரி தார்’ என்றும் அழைப்பர். வரையாடுகள் தமிழகத்தின் மாநில விலங்கு. பயந்த சுபாவம் கொண்டவை. மனிதர்கள், மற்ற வனவிலங்குகள் எளிதில் நெருங்க முடியாத இடங்களில் தங்கள் வாழ்விடத்தை அமைத்துக்கொள்கின்றன. இந்த வரையாடுகள், தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 1,200 முதல் 2,500 மீட்டர் உயரமான செங்குத்தான பாறைகளில் வசிக்கின்றன.

வரையாடுகளின் நடமாட்டம்

களக்காடு அருகே முத்துக்குளி வயல், மேகமலை ஹைவேவிஸ், ஆனைமலை, நீலகிரி மலை, வால்பாறை, கேரளத்தில் இரவிக்குளம் பகுதியில் இந்த வரையாடுகள் நடமாட்டத்தை நேரில் பார்க்கலாம்.

வனவிலங்குகள் கணக்கெடுப் பில், தமிழகத்தில் 2,500 வரை யாடுகள் வரை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வரையாடுகள் மாமிசத்துக்காக வேட்டைக் கும்பலால் வேட்டை யாடப்படுவதால், தமிழகத்தில் இவை அழிவின் விளிம்பில் உள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.

வரையாடுகளுக்கு எதிரிகள்

இதுகுறித்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் வெங்க டேஷிடம் கேட்டபோது அவர் கூறியது: “வரையாடுகளுக்கு இயற்கையான எதிரிகள் சிறுத்தை, புலிகள் மற்றும் மனிதன். செங்குத்தான பாறைகளில் வரையாடுகள் பயமின்றி ஏறிச் செல்லும். அங்கு நின்று ஒன்றுடன் மற்றொன்று சண்டை போடும். தாவி குதித்துச் செல்லும். குரங்கினங்களுக்கு அடுத்தபடியாக, இந்த வரையாடுகளுக்கு மட்டுமே செங்குத்தான பாறைகளில் நடக்கக்கூடிய பாத அமைப்பு உள்ளது.

காலையும், மாலையும் மட்டுமே மேய்ச்சலுக்கு செல்லும். பகல் பொழுதில் ஓய்வெடுத்துக் கொள் ளும். இரவில் வரையாடுகளுக்கு பார்வை தெரியாது. அதிகமான மழைப்பொழிவு, செழிப்பான பிரதேசங்களில் மட்டுமே இவை வசிக்கின்றன. இவை சாதாரண ஆடுகளைபோல ‘மே’ எனக் கத்துவது இல்லை. இதன் குரல் ‘விசில்’ அடிப்பதுபோல இருக்கும்.

ஆபத்தான காலத்தில், ஒரு வரையாடு ‘விசில்’ அடித்தால் மற்றவை பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடி மறைந்துகொள்ளும். இனச்சேர்க்கையில் ஈடுபடும்போதும் ‘விசில்’ அடிக்கும் பழக்கம் கொண்டவை.

பெற்றோர், குழந்தைகளை பராமரிப்பதுபோல, வரையாடு தமது குட்டிகளை பாதுகாப்பாக பராமரிக்கும். தாய் வரையாடு மேய்ச்சலுக்கு சென்றால் அதன் குட்டிகளை மற்றொரு வரையாடு அது வரும்வரை பத்திரமாக பாதுகாக்கும். வரையாடுகள் 7 முதல் 12 ஆண்டுகள்வரை உயிர் வாழும். ஆண் வரையாடுகள் தனியாகவும், பெண் வரையாடுகள் கூட்டமாகவும் வசிக்கின்றன.

ஆண் வரையாடுகளில் யார் தலைவன் என்ற போட்டியில் சாகும்வரை சண்டை நடக்கும். இயற்கையின் அரிய படைப்பான இந்த வரையாடுகள் செயற்கையாக அழிந்துவருவது வேதனை அளிக்கிறது. தமிழகத்தின் மாநில விலங்கினமான இந்த வரையாடுகளை அழிந்துபோகாமல் பாதுகாப்பது நமது கடமை” என்றார்.

வனவிலங்குகள் கணக்கெடுப்பில், தமிழகத்தில் 2,500 வரையாடுகள் வரை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இவை அழிவின் விளிம்பில் உள்ளதாக கூறப்படுகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

விளையாட்டு

47 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

4 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்