இந்து கோயில்களை இடித்த ராஜபக்சவுக்கு திருப்பதி கோயிலை தரிசிக்க அனுமதியா? - வைகோ கேள்வி

By செய்திப்பிரிவு

இலங்கையில் ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இடித்த ராஜபக்சவை திருப்பதி கோயிலை தரிசிக்க அனுமதிப்பது ஏன்? என்று வைகோ கேள்வி எழுப்பினார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகமான தாயகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முந்தைய பாஜக ஆட்சியில் என்எல்சி நிறுவனத்தை தனியார்மய மாக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அப்போது பிரதமர் வாஜ்பாயை நேரில் சந்தித்து முறை யிட்டேன். எனது கோரிக் கையை ஏற்று என்எல்சி தனியார்மயமாக்கப் படாது என்று வாஜ்பாய் உறுதி அளித்தார். அத்தகைய அணுகு முறை தற்போதைய பிரதமர் மோடி யிடம் இல்லை.

முந்தைய பாஜக ஆட்சியின் போது குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. கூட்டணிக் கட்சிகளின் யோசனைகளை எல்லாம் கருத்தில்கொண்டார்கள். ஆனால், அத்தகைய அணுகுமுறை மோடி அரசிடம் இல்லை.

பாஜகவுடன் கூட்டணி ஏற்பாடுகள் நடந்தபோது இலங்கை தமிழர் விவகாரம் உட்பட மதிமுகவின் அனைத்து நிலைப்பாடுகளையும் தெளிவாகச் சொன்னோம். இலங்கை தமிழர் பிரச்சினையில் முந்தைய காங்கிரஸ் அரசு செய்த தவறுகளை பாஜக அரசு ஒருபோதும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தினோம்.

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்து இனப்படுகொலை நிகழ்த்தியவர் ராஜபக்ச. அவருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் ஒருவர் கூறுகிறார். குழந்தைகளை, பெண்களை படுகொலை செய்தவருக்கு பாரத ரத்னா விருதா? அவரது கருத்தை பிரதமர் மோடியோ, பாஜக தலைவர் அத்வானியோ கண்டிக்க வில்லையே, தமிழர்களை கொலை செய்தால் பாரத ரத்னாவா?

வாஜ்பாய் பாதையில் மோடி செல்வார் என்று நினைத்தோம். அது நடக்கவில்லை. என்னை திமுகவிலிருந்து நீக்கியபோது எந்த அளவுக்கு வேதனைப்பட்டேனோ, அதே வேதனையை பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்ச கலந்துகொண்டபோது அனுபவித்தேன்.

காத்மாண்டில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்துகொண்ட மோடி, ராஜபக்ச மீண்டும் வெற்றிபெற்று இலங்கையின் அதிபராக வரவேண்டும் என்று வாழ்த்து சொல்கிறார். எந்த அடிப்படையில் இந்த வாழ்த்தைச் சொன்னார் மோடி? மீண்டும் தமிழர்களை படுகொலை செய்யவா?

குஜராத்திகளை படுகொலை செய்தவருக்கு பாரத ரத்னா கொடுக்கச் சொல்வார்களா? அவரை குஜராத்தில் உள்ள கோயில்களை தரிசிக்க விட்டு விடுவார்களா? இலங்கையில் 1750-க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களை இடித்த ராஜ பக்சவுக்கு, கோயில் சிற்பிகளை கொன்றவருக்கு திருப்பதி கோயிலை தரிசிக்க அனுமதியா?

சுதேசி பேசிய பாஜக இன்று குடிசைத் தொழில்களை அழித்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை வரவேற்கிறது. தமிழக மண்ணில் இந்துத்துவத்தை திணிக்க முயற்சி செய்கிறார்கள். இது திராவிட பூமி. தமிழ்நாட்டில் இந்துத்துவம் காலூன்ற விட மாட்டோம். அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணம் திராவிட கட்சிகளுக்கு தானாக ஏற்படும். அதில் அரசியலுக்கே இடமே இல்லை.

முந்தைய காங்கிரஸ் அரசு செய்த தவறுகளை பாஜக அரசு செய்யாது என்ற நம்பிக்கையில் அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந் தோம். ஆனால் நம்பிக்கை மோசம்போய்விட்டோம்.

மதிமுகவைப் பொறுத்த வரையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான எண்ணிக் கையில் வாக்குகளைப் பெற்றது. பொதுமக்கள் குறிப்பாக இளைஞர் களின் ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கிறது.

இவ்வாறு வைகோ கூறினார்.

பிப்ரவரி 1-ல் பொதுக்குழு

மதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பது போல, மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை தேசிய நதிகளாக அறிவிக்க வேண்டும். நதி நீர் பிரச்சினை தொடர்பாக டெல்டா மாவட்டங்களில் வரும் 12-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திக்க உள்ளேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு நடைபெறும் இந்த சுற்றுப்பயணத்தில் எங்கும் கட்சிக் கொடிகளைக் கட்டக்கூடாது என்று தொண்டர்கள், நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளேன். என் காரில்கூட கட்சிக் கொடி இருக்காது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

32 secs ago

விளையாட்டு

9 mins ago

சினிமா

10 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

44 mins ago

சினிமா

50 mins ago

இந்தியா

31 mins ago

கருத்துப் பேழை

40 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்