ஓட்டுனர், நடத்துனர்களை நீதிமன்ற வழிகாட்டுதல்படி நியமிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தேர்வு, தேர்வாணையத்தின் மூலமாகவோ அல்லது போக்குவரத்துக் கழக பணியாளர் தேர்வாணையம் மூலமாகவோ நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் விரைவுப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஓட்டுனர்கள், நடத்துனர்கள், பொறியாளர்கள் என சுமார் 7,500 பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பித்து காத்திருப்போரை கவலையில் ஆழ்த்தியிருக்கின்றன.

அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்களும், நடத்துனர்களும் இதுவரை வேலைவாய்ப்பக பதிவு மூப்பு மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர். இதனால், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நியமனங்களில் பெரிய அளவில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கப்பட்டது.

ஆனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் பட்டியலைப் பெறுவது மட்டுமின்றி, பொது அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்களைப் பெற்றும் ஆட்களை தேர்வு செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் ஆணையிட்டது.

போக்குவரத்து பணியாளர்கள் நியமனத்தை நேர்மையாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்திருந்தால் உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருக்க வேண்டும்; ஏற்கனவே இருந்த நடைமுறையையே தொடரச் செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், இவற்றையெல்லாம் செய்யாத தமிழக அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, போக்குவரத்துப் பணியாளர்கள் நியமனத்தை விருப்பம்போல நடத்திக் கொண்டிருக்கிறது. பொது அறிவிப்பு கொடுத்து விண்ணப்பங்களைப் பெற்று பணியாளர்களை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதன் நோக்கமே, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யாத திறமையானவர்களுக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பது தான்.

ஆனால், தமிழக அரசோ விண்ணப்பித்தவர்களின் திறமையை மதிப்பீடு செய்யாமல், வேறு சில அம்சங்களை மதிப்பீடு செய்து அதனடிப்படையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

ஒரே நாளில் ஆயிரக்கணக்கானவர்களை நேர்காணலுக்கு அழைக்கும் அதிகாரிகள், அவர்களிடம் ஒரு சில நிமிடங்களிலேயே நேர்காணலை முடித்து அனுப்பி விடுகின்றனர். இவ்வளவு குறுகிய கால அவகாசத்தில் ஒருவரின் திறமையை அதிகாரிகளால் எப்படி மதிப்பிட முடியும்? என்பது தெரியவில்லை.

போக்குவரத்துக் கழக பணியாளர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் கடந்த 12 ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஹரிபரந்தாமன்,‘‘ 10 அல்லது 12 ஆம் வகுப்பு கல்வித்தகுதியின் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் போது, அந்த வகுப்புத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்றவகையில் தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் அல்லது எழுத்துத் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

10 ஆம் வகுப்பு அல்லது அதற்கும் குறைவான கல்வித்தகுதி அடிப்படையில் ஆட்களை நியமிக்கும் போது எழுத்துத் தேர்வு மூலம் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இத்தேர்வை நடத்தலாம் அல்லது இதற்காக ஓர் தேர்வாணையத்தை போக்குவரத்துக் கழகங்கள் கூட்டாக ஏற்படுத்தலாம். இதற்கு மாறாக ரகசிய நேர்காணல் மூலம் மட்டும் பணியாளர்களை தேர்ந்தெடுப்பது சட்டவிரோதம்’’ என அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதலுக்கு மாறாக ரகசிய நேர்காணலின் மூலமாகவே அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழிகாட்டுதல் ஏற்கனவே செய்யப்பட்ட ஆட்தேர்வுக்கு பொருந்தாது என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதை பயன்படுத்தி அனைத்து ஆட்தேர்வுகளும் நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பாக செய்யப்பட்டது போன்று காட்ட போக்குவரத்துக் கழகங்கள் முயலுகின்றன.

ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நியமனங்களில் முறைகேடு நடப்பதற்கும், ஆளுங்கட்சியினர் பரிந்துரையின் பேரில் தகுதியில்லாதவர்கள் நியமிக்கப்படுவதற்கும், தகுதிகள் இருந்தும் பணம் இல்லாதவர்கள் தொடர்ந்து வேலையின்றி வாடுவதற்கும் மட்டுமே போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் வழி வகுக்கும்.

இதை உணர்ந்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை கடந்த வாரம் உறுதி செய்ததுடன், அதை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளது.

எனவே, அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தேர்வு நடைமுறையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். அதன்பின் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ அல்லது போக்குவரத்துக் கழக பணியாளர் தேர்வாணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலமாகவோ ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட போக்குவரத்துக்கழக பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

விளையாட்டு

16 mins ago

வாழ்வியல்

25 mins ago

ஓடிடி களம்

35 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்