கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி: பாஜகவைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டம்; கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்பு செய்யும் பாஜகவை கண்டித்து தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் வரும் 13 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்கும் வகையில் மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைந்த முதற்கொண்டு அதை சீர்குலைக்கிற வகையில் மத்திய அரசு மூலமாகவோ, கர்நாடக ஆளுநர் மூலமாகவோ பல்வேறு உத்திகளை பாஜகவினர் கையாண்டு வருகின்றனர்.

மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களை குதிரை பேரத்தின் மூலம் விலை பேசுகிற மலிவான அரசியலை பாஜகவினர் மேற்கொண்டனர்.

ஆனால் இதையெல்லாம் முறியடிக்கிற வகையில் கர்நாடகத்தில் அமைந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களில் 13 பேரை பாஜகவினர் பல்வேறு உத்திகளை கையாண்டு ராஜினாமா கடிதத்தை கர்நாடக சபாநாயகருக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கடிதங்களின் அடிப்படையில் ராஜினாமாவை ஏற்க முடியாது, நேரில் கடிதம் கொடுத்து விளக்க வேண்டுமென்று சபாநாயகர் தெளிவாக கூறிவிட்டார்.

இந்நிலையில் 13 சட்டப்பேரவை உறுப்பினர்களை பெங்களூருவில் இருந்து தனி விமானத்தின் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்று நட்சத்திர ஹோட்டலில் மகாராஷ்டிர பாஜக அரசின் காவல்துறையினரின் பாதுகாப்போடு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அடைத்து வைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள் அழைத்ததன் பேரில் அவர்களை சந்திக்க நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

பல மணி நேரம் நட்சத்திர ஹோட்டலுக்கு வெளியே அவர் காத்திருந்தும் சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்திக்க காவல்துறையினர் அவருக்கு அனுமதி தரப்படவில்லை. இதைவிட ஒரு ஜனநாயக படுகொலை வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஏதோ ஒருவகையில் பாஜகவின் ஆட்சி அமைய வேண்டுமென்ற எதேச்சதிகார, ஜனநாயக விரோதப் போக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. இன்றைக்கு கர்நாடகாவிலே ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை செய்து வருகிற பாஜக அடுத்து இதே முயற்சியை மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிற மாநிலங்களிலும் தங்கள் கை வரிசையை காட்டுவதற்கு தயாராகி வருகிறார்கள்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருக்கக் கூடாது, மத்தியிலும், மாநிலங்களிலும் பாஜக கட்சி மட்டுமே ஆட்சி செய்ய வேண்டுமென்கிற சர்வாதிகார போக்கில் நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது. ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே கொடி, ஒரே கொள்கை, ஒரே கலாச்சாரம் என்கிற பாசிச தத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவை சர்வாதிகாரப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு பாஜக திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி அரசை குதிரை பேரத்தின் மூலம் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் மூலம் ஜனநாயக படுகொலை செய்து வருகிற பாஜகவை கண்டித்து தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் வருகிற 13.7.2019 சனிக்கிழமை காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

எனவே, இந்தியாவில் பாஜகவின் சர்வாதிகாரம் வீழ்த்தப்படுவதற்கும், ஜனநாயகம் காப்பாற்றப்படுவதற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்", என, கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்