தினகரன் கூட்டத்துக்கு கட்சி நிர்வாகிகள் செல்வார்களா? - அதிமுகவில் நடக்கும் கடைசி நேர குழப்பங்கள்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாவட்டம், மேலூரில் நாளை தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலாளர்களும், தொண்டர்களும் பங்கேற்க செல்வதை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என முடிவெடுக்க முதல்வர் பழனிசாமியின் உத்தரவுக்காக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் காத்திருக்கிறார்கள்.

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் நாளை மேலூரில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். கடந்த வாரம் வரை முதல்வர் பழனிசாமியும், தினகரனும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரே அணியில் இருந்தனர். அதனால், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் சிறை சென்றபோது தினகரனுக்கு ஆதரவாக, மதுரை உட்பட பல மாவட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கு யாரையும் செல்ல வேண்டாம் என முதல்வர் அணி தரப்பினர் தடுக்கவும் இல்லை. கட்டுப்படுத்தவும் இல்லை. அதனால் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏ-க்களை தவிர நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

மேலூரில் நடத்த காரணம்

அதனால், அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில், இதற்கு முன் இதே மேலூரில் தினகரனுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டனர். தற்போதும் அதுபோல் கூட்டம் திரளும் என்ற எதிர்பார்ப்பிலேயே தினகரன் தான் பங்கேற்கும் முதல் கூட்டத்தை மேலூரில் அறிவித்தார். ஆனால், அதிமுகவில் தலைகீழான மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் ஒரு கோஷ்டியாகவும், தினகரன் தரப்பினர் மற்றொரு கோஷ்டியாகவும் வெளிப்படையாக ஒருவரை ஒருவர் வசைபாடி எதிரும், புதிருமாக செயல்படுகின்றனர்.

தினகரன் மீது அனுதாபம்

இந்நிலையில் தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மேலூர் முன்னாள் எம்எல்ஏ சாமி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கட்சியின் கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி, தேனி மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏ உள்ளிட்ட தினகரனின் ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர்.

எனினும், இந்தக் கூட்டத்தை முதல்வர் தரப்பு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏ-க்கள் புறக்கணிப்பார்கள் எனக் கருதப்படுகிறது. ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலாளர்கள், அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முன்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதுபோல் பங்கேற்பார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

ஆனால், இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தினகரன் சிறை சென்றதை, கட்சிக்காகவே சென்றதாக தொண்டர்கள் அவர் மீது அனுதாபத்தில் உள்ளனர் என்றும், அதனால், அவர்கள் கண்டிப்பாக பங்கேற்பார்கள் எனவும் தினகரன் ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

முதல்வரிடம் ஆலோசனை

இதுகுறித்து மதுரை மாநகர் செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூவிடம் கேட்டபோது, ‘‘இதுவரை கட்சி நிர்வாகிகள் தினகரனின் மேலூர் கூட்டத்தில் பங்கேற்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முதல்வரிடம் ஆலோசித்துவிட்டு நாளை (இன்று) தகவல் தெரிவிப்போம்’’ என்றார்.

தினகரன் கூட்டம் நடக்கும் மேலூருக்குட்பட்ட மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் விவி.ராஜன்செல்லப்பா எம்எல்ஏவிடம் கேட்டபோது, ‘‘கூட்டத்துக்கு போக வேண்டாம் என யாருக்கும் எந்த உத்தரவும் இடவில்லை. எல்லோரும் புரிந்து கொள்வார்கள்’’ என்றார்.

அமைச்சர், மாவட்டச் செயலாளர் தரப்பிலேயே குழப்பம் இருப்பதால் மதுரை மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் முதல்வரை நம்பி போவதா? சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளரை நம்பி போவதா என குழப்பத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்