தொடர்ந்து பந்தாடப்படும் நேர்மையான அதிகாரிகள்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதயச்சந்திரனைத் தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் அமுதாவின் அதிகாரமும் குறைக்கப்பட்டிருப்பதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கை:

தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்த அமுதா நேற்று திடீரென அந்த பணியிலிருந்து மாற்றப்பட்டிருக்கிறார். அதற்கு பதிலாக புதிய பொறுப்பு எதுவும் வழங்கப்படாமல், ஏற்கனவே கூடுதல் பொறுப்பாக அவரிடம் இருந்து வந்த உணவுப் பாதுகாப்பு ஆணையராக பணியாற்றும்படி அவர் பணிக்கப்பட்டிருக்கிறார்.

உணவுப் பாதுகாப்பு ஆணையர் பணி என்பது இளநிலை இ.ஆ.ப. அதிகாரிகளால் கவனிக்கப்படும் பொறுப்பு ஆகும். இதற்கு அமுதா போன்ற முதன்மைச் செயலர் நிலையில் உள்ள அதிகாரி தேவையில்லை. அதே நேரத்தில் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை என்பது முதன்மைச் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரியால் கையாளப் பட வேண்டிய பணி ஆகும்.

அந்தப் பணியிலிருந்து அமுதாவை மாற்றிய தமிழக ஆட்சியாளர்கள், அப்பொறுப்பை ஏற்கனவே சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையை கவனித்து வரும் முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மாவிடம் கூடுதல் பொறுப்பாக தமிழக ஆட்சியாளர்கள் ஒப்படைத்துள்ளனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையை கவனிக்கவே அத்துறையின் செயலாளருக்கு நேரம் இருக்காது எனும் போது மற்றொரு பெரிய துறையை கூடுதல் பொறுப்பாக அவரிடம் ஒப்படைப்பது இரு துறைகளின் சீரழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும்.

இத்தனை பாதிப்புகளையும் கருத்தில் கொள்ளாமல் இ.ஆ.ப அதிகாரி அமுதாவை இடமாற்றம் செய்திருப்பதற்குக் காரணம் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறையில் அவர் நீடிக்கக்கூடாது என ஆட்சியாளர்கள் துடித்தது தான். ஆட்சியாளர்களின் ஊழலுக்கு அமுதா தடையாக இருப்பார் என்பதால் தான் அவரை மாற்ற ஆட்சியாளர்கள் விரும்பினர்.

தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தொழில் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள 329 இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்பத் தீர்மானித்து அதற்கான அறிவிக்கை 12.01.2016 அன்று வெளியிடப்பட்டு, 21.02.2016 அன்று எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அதன் முடிவுகள் 01.03.2016 அன்று வெளியிடப்பட்டு, அடுத்தக்கட்டமாக முதன்மைத் தேர்வின் ஓர் அங்கமாக செய்முறை மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படவிருந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதாலும், இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதித்ததாலும் அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.

தேர்தல் முடிந்த பிறகும் உயர்நீதிமன்றத் தடை நீடித்ததால் முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடை கடந்த 12.07.2017 அன்று நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நேர்காணலை மிகவும் நேர்மையான முறையில் நடத்த தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் அமுதா திட்டமிட்டிருந்தது அத்துறையின் அமைச்சர் நிலோபர் கபிலுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இளநிலை பயிற்சி அலுவலர் வேலைக்கு ரூ.15 லட்சம் வரை அமைச்சர் தரப்பு வசூலித்திருப்பதாகவும், அவர்களை நியமிக்கும் வகையில் நேர்காணலில் முறைகேடுகளை செய்ய அமுதா முட்டுக்கட்டை போட்டது தான் இடமாற்றத்திற்குக் காரணம் என்று பேசப்படுகிறது.

மாநிலத்தை ஆள்வது அரசியல்வாதிகள் என்றாலும், நிர்வாகத்தை இயக்குபவர்கள் அதிகாரிகள் தான். அதிகாரிகள் நேர்மையாக செயல்படும் போது அவர்களை ஆட்சியாளர்கள் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். ஆனால், தமிழகத்திலோ கமிஷன் வாங்கித் தரும் அதிகாரிகளுக்கு உயர்ந்த பொறுப்புகள் வழங்கப்படுவதும், நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.

பள்ளிக் கல்வித்துறையில் சீர்திருத்தங்களை செய்ததற்காகவும், ஊழலை ஒழித்ததற்காகவும் அதன் செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரம் பறிக்கப்பட்டது. அதேபோல், தொழிலாளர் நலத்துறையில் ஊழலை ஒழிக்க முயன்றதற்காக அத்துறையின் முதன்மைச் செயலாளர் அமுதாவின் அதிகாரம் குறைக்கப்பட்டிருக்கிறது.

அமுதா எவ்வளவு நேர்மையான அதிகாரி என்பது அவரது கடந்த காலப் பணிகளை அறிந்தவர்களுக்கு தெரியும். நேர்மையான அதிகாரிகளை ஊழல் ஆட்சியாளர்களை பழிவாங்குவதை விட பெருங்கொடுமை உலகில் எதுவும் கிடையாது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அமுதாவின் பணியிட மாற்றத்தை உடனடியாக ரத்து செய்வதுடன், முக்கியமான துறைகளின் செயலாளர்களாக நியமிக்கப்படுபவர்கள் குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் அப்பணியில் நீடிப்பதை ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

52 secs ago

தமிழகம்

3 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

7 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்