தமிழரை அடையாளப்படுத்தும் பண்பாட்டு அருங்காட்சியகம்: மதுரை உலக தமிழ் சங்கத்தில் அமைக்க திட்டம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

உலக தமிழர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் வகையில் மதுரை உலக தமிழ் சங்கத்தில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தின் தொன்மையான நகரம் மதுரை. மக்கள் தொகை, நகர்ப்புற பரவல் அடிப்படையில் மாநிலத்தின் மூன்றாவதும், இந்திய அளவில் 31-வது பெரிய நகரம். வைகை கரையோரம் அமைந்துள்ள இந்த நகரம், இங்குள்ள மீனாட்சி யம்மன் கோயிலுக்காக உலக அளவில் பிரசித்தம். பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் வசிக்கும் மதுரையில் 1981-ம் ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர், மதுரையில் உலக தமிழ் சங்கம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதைத் தொடர்ந்தே மதுரை சட்டக்கல்லூரி அருகே தல்லாகுளம் பகுதியில் 14.5 ஏக்கரில் 87 ஆயிரம் சதுர அடியில் ரூ.100 கோடியில் உலக தமிழ் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டது. இங்கு பன்னாட்டு கருத்தரங்கக் கூடம், ஆய்வரங்கம், நூலகம், பார்வையாளர் அரங்கு இடம் பெற்றுள்ளன.

உலக நாடுகளில் இயங்கிவரும் அனைத்து தமிழ் சங்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள், தமிழ் ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனங்கள் பற்றிய விவரங்களை தொகுத்து பாதுகாத்தல், உலகம் எங்கும் இயங்கும் தமிழ் அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கட்டமைத்தல், தமிழர் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளுக்கு ஆய்வாளர்களை அனுப்பி தமிழ் மொழி, பண்பாடுகளை ஆய்வு செய்தல் போன்ற பல்வேறு தமிழ் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது உலக தமிழ் சங்கத்தின் முக்கிய நோக்கம். உலக தமிழ் சங்கத்திற்கு பிரம்மாண்ட கட்டிடம் திறக்கப்பட்டாலும், இன்னும் முழுமையான செயல் பாட்டுக்கு வராததால் தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தியில் இருந் தனர்.

இந்நிலையில் உலக தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தையும், மதுரையின் பாரம்பரியத்தையும் அறிவதற்கும், பிரதிபலிக்கும் வகையிலும் உலக தமிழ் சங்கத்தில் உலக தமிழர் பண்பாட்டு கலாச்சார அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து உலக தமிழ் சங்க உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மதுரையைப் போல வேறு எந்த நகருக்கும் இலக்கியச் சிறப்பும், மொழிச் சிறப்பும் கிடையாது. புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற பல இலக்கியங்கள் மதுரையின் சிறப்பை கூறுகின்றன. இலக்கியங்களில், ஆவணங்களில், வாழ்வியலில் மதுரையை பற்றியும், தமிழர் பற்றியும் பல்வேறு கருத்துகள், தகவல்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக உள்ளன. இவற்றையெல்லாம் தொகுத்து, உலக தமிழ் சங்க கட்டிடத்தில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஆதி மனிதனின் 40 அடி பிரம்மாண்ட சிலை, கண்ணகி சிலை, ஜல்லிக் கட்டு காளையை மாடுபிடி வீரர்கள் அடக்குவது, விவசாய நிலத்தை உழுவது போன்ற சிற்பங்கள் அமைக்கப்பட உள்ளன.

அதுபோல அவ்வையார், திருவள்ளுவர், தொல்காப்பியர், சீத்தலை சாத்தனார், இளங்கோவடிகள், கம்பர் போன்ற பழந்தமிழ் கவிஞர்கள், சங்க கால கடையேழு வள்ளல்களான அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான், முல்லைக்க்கு தேர் தந்த பாரி, யாழ் மீட்டும் பாணர்களுக்கு நாட்டையே வழங்கிய ஓரி போன்ற மன்னர்களின் உருவங்களை சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும், காணொலிக் காட்சிகளாகவும், அசைவுப் படங்களாகவும் காட்சிப்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரையையும், உலக தமிழர் களையும் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய வரலாற்று நூல்கள் இந்த அருங்காட்சியகத்தில் அமைகிறது. மதுரை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி களையும், மாணவர்களையும், தமிழ் அறிஞர்களையும் ஈர்க்கும் வகையில் இதுபோன்ற பல சிறப்புகள் உலக தமிழ் சங்க அருங்காட்சியகத்தில் அமைய உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்