நீட் தேர்வு தொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்திக்க 6 அமைச்சர்கள் டெல்லி பயணம்: முதல்வர் பழனிசாமியும் இன்று செல்கிறார்

By செய்திப்பிரிவு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்துவதற்காக தமிழக அமைச்சர்கள் 6 பேர் நேற்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் 2 சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டன. அதற்கு இதுவரை குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கவில்லை.

எனவே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீதம், சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவால் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த 20-ம் தேதி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தனர். அப்போது, நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்றுத் தருமாறு வலியுறுத்தினர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர்களைச் சந்திப்பதற்காக தமிழக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேற்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர்களுடன் நிதியமைச்சர் டி.ஜெயக்குமாரும் சென்றுள்ளார். மத்திய அமைச்சர்களிடம் நீட் தேர்வு தொடர்பான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த உள்ளனர்.

இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் நாளை பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் கே.பழனிசாமி இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் செல்ல இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

அதே விழாவில் பங்கேற் பதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

5 hours ago

மேலும்