5% ஜிஎஸ்டி வரிவிதிப்பால் கடலை மிட்டாய் தொழிலுக்கு நெருக்கடி: முழு விலக்கு அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்

By ரெ.ஜாய்சன்

ஜிஎஸ்டியில் 5 சதவீதம் வரி விதிக் கப்பட்டுள்ளதால், கோவில்பட்டியில் கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். முற்றிலும் குடிசைத் தொழிலான கடலை மிட்டாய்க்கு ஜிஎஸ்டி யில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க அவர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

அல்வாவுக்கு திருநெல்வேலி, மக்ரூ னுக்கு தூத்துக்குடி, போளிக்கு கடம்பூர், பால்கோவாவுக்கு வில்லிபுத்தூர், காரசேவுக்கு சாத்தூர் என ஒவ்வொரு தின்பண்டத்துக்கும் ஒரு ஊர் சிறப்புற்று விளங்கும். இந்த வரிசையில் கோவில் பட்டி என்றவுடன் கடலை மிட்டாய்தான் ஞாபகத்துக்கு வரும்.

குடிசைத் தொழில்

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு தனிச் சுவை உண்டு. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு கடலை மிட்டாய் தயாரிப் புத் தொழில் நடந்து வருகிறது. படித்த இளைஞர்கள்கூட சில தொழிலாளர் களை வைத்து கடலை மிட்டாய் தயாரிப்பை குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனர். இந்தத் தொழிலை நம்பி கோவில்பட்டியில் மட்டும் சுமார் 1,500 தொழிலாளர்கள் உள்ளனர்.

கடலை மிட்டாய் தயாரிக்க வேர்க் கட லையை உடைக்கவும், தோல் நீக்கவும் மட் டுமே இயந்திரத்தை பயன்படுத்து கின்றனர். மற்றபடி பாகு தயாரிப்பது, வேர்க் கடலை பருப்பை கலப்பது, கிளறுவது, உலர்த்துவது, வெட்டுவது, பேக்கிங் செய்வது என அனைத்துமே கைகளால்தான் மேற்கொள்ளப்படுகிறது. கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெற கடந்த 4 ஆண்டு களாக தயாரிப்பாளர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

இதுவரை கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் வீடுகள், சிறிய தொழில் கூடங்களில் குடிசைத் தொழிலாக இதை தயாரித்து, தங்களது கடைகளில் வைத்து விற்பனை செய்தனர். இவர்களிடம் இருந்து சிறு வியாபாரிகள் வாங்கிச் சென்று தமிழகம் முழுவதும் விற்பனை செய்தார்கள். இதற்கு எந்த வரி விதிப்பும் கிடையாது.

5% ஜிஎஸ்டி வரி

ஆனால், தற்போது அமல்படுத்தப்பட் டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) கடலை மிட்டாய்க்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சாதாரண பெட்டிக் கடைகளில் விற்பனை செய்யப்படும் தேன் மிட்டாய், இஞ்சி மிட் டாய், சீனி மிட்டாய், எள் உருண்டை, கருப்பட்டி மிட்டாய் உள்ளிட்ட இதுவரை வரி விதிக்கப்படாத அனைத்து தின்பண் டங்களும் 5 சதவீத வரி விதிப்பின்கீழ் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் வி.வி. ராமச்சந்திரன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக கடலை மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். கடலை மிட்டாய் தயாரிப்பு முழுக்க முழுக்க குடிசைத் தொழில். கடந்த மாதம் வரை ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ.140-க்கு விற்பனை செய்தோம். ஜிஎஸ்டிக்கு பிறகு 5 சதவீத வரியை கணக்கிட்டு தற்போது கிலோ ரூ.150-ஆக உயர்த்தியுள்ளோம்.

விற்பனை சரிவு

ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த பிறகு கடலை மிட்டாய் விற்பனை குறைந்துள் ளது. எங்களிடம் இருந்து வியாபாரிகள் வாங்கிச் சென்று சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களுக்கு சப்ளை செய்யும்போதுதான் பிரச்சினை ஏற்படு கிறது. அவர்கள் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து பில் கேட்பதால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வியாபாரிகள் கடலை மிட்டாய் வாங்கி விற்பனை செய்யவே தயக்கம் காட்டி வருகின்றனர்.

கடலை மிட்டாய் சாதாரண ஏழை மக்கள் சாப்பிடும் சத்தான தின்பண்டம். இதன் தயாரிப்பு முழுக்க முழுக்க கைத் தொழிலை சார்ந்துள்ளது. எனவே, கடலை மிட்டாய்க்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. இதை மாநில அரசு, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையெனில் கோவில்பட்டி கடலை மிட்டாய் தனது பாரம்பரியத்தை இழக்கும் என்றார் அவர்.

கடலை மிட்டாய்க்கு கோவில்பட்டி பிரபலமானது எப்படி?

‘கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான கயத்தாறு, கழுகுமலை, எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதிகளில் மானாவாரி நிலங்கள்தான் அதிகம். இவற்றில் ஒரு காலத்தில் நிலக்கடலை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டது. கருப்பட்டி பாகுவில் நிலக்கடலையை கலந்து முதலில் கடலை மிட்டாய் தயாரிக்கப்பட்டது. பின்னர் அதுவே வெல்லம் பாகுக்கு மாறியது.

கரிசல் நிலம் என்பதால் இங்கு விளையும் நிலக்கடலைக்கு சத்து அதிகம். இதனால்தான் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு தனிச்சுவை உள்ளது. இந்த ஆண்டு கடும் வறட்சியால் கோவில்பட்டி பகுதியில் நிலக்கடலை சாகுபடி நடைபெறவில்லை. அருப்புக்கோட்டை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து நிலக்கடலை வாங்கி வருகிறோம்.

தினமும் 50 கிலோ அளவுக்கு மட்டுமே கடலை மிட்டாய் தயார் செய்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்கிறோம். மொத்தமாக தயாரித்து இருப்பு வைப்பதில்லை. தரமான சுத்தம் செய்யப்பட்ட நிலக்கடலை மற்றும் சுத்தமாக காய்ச்சிய வெல்லம் பாகு ஆகியவை தவிர வேறு எந்த ரசாயன பொருளும் இதில் கலப்பதில்லை. எனவே, உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது கடலை மிட்டாய்’ என்கிறார் கோவில்பட்டியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடலை மிட்டாய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள செல்வராஜ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்