புதிதாக வந்தே மாதரம் பாடலை பாடச் சொல்வது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்: ஜவாஹிருல்லா

By செய்திப்பிரிவு

புதிதாக வந்தே மாதரம் பாடலை பாடச் சொல்வது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் வேண்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி.முரளிதரன் வந்தே மாதரம் பாடலை பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி அரசு, தனியார் அலுவலகங்கள், நிறுவனங்களிலும் வாரம் ஒரு முறை கட்டாயம் பாட வேண்டும்; எனினும் தகுந்த காரணத்தோடு பாட மறுப்பவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு தேவையற்றது. ஏற்கெனவே தேசீய கீதம் குறித்து உச்ச நீதிமன்றம் யெகோவாவின் சாட்சிகள் வழக்கில் வழங்கிய தீர்ப்பிற்கு முரணாகவும் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

நம் நாட்டில் ஜன கண மன என்ற தேசிய கீதம் நடைமுறையில் உள்ளது. இந்தப் பாடலே பள்ளி, கல்லூரி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பாடப்படுகிறது. எனவே புதிதாக வந்தே மாதரம் பாடலை பாடச் சொல்வது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும். மேலும் இந்த வழக்கு வந்தே மாதரம் பாட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கல்ல . வேறொரு கோரிக்கைக்காக தொடுக்கப்பட்ட வழக்கில் வழக்குக்கு தொடர்பில்லாத ஒரு தீர்ப்பை அளிப்பது நீதி பரிபாலனத்துக்கு உகந்ததன்று. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது.

யெகோவாவின் சாட்சிகள் என்ற மதப் பிரிவைச் சார்ந்த பள்ளி மாணவர்களின் உறவினர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தேசியப் பாடலை பாடச் சொல்லி நிர்பந்தம் அளிப்பது தனி மனித உரிமை மற்றும் மத சுதந்திரத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளித்துள்ளது. எனவே தேசிய பாடலான ஜன கண மன பாடலுக்கே நிர்பந்தம் இல்லை எனும் போது சர்ச்சைக்குரிய வந்தே மாதரம் பாடலை வாரத்தில் ஒரு நாள் பாடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது நியாயமானது அல்ல.

வந்தே மாதரம் பாடலை ஒரு போதும் முஸ்லிம்களால் பாட இயலாது. இப்பாடல் பக்கிம் சந்தர் சட்டர்ஜி 1875ல் எழுதிய ஆனந்த மடம் நாவலில் அதன் கதாநாயகன் சத்தியானந்த் முஸ்லிம்களை வெட்டிக் கொல்ல அழைக்கும் பாடலாகும். ஆங்கிலேயர்களை எதிர்ப்போருக்கு எழுச்சியூட்ட வேண்டும் என்ற நோக்கில் இந்த பாடல் எழுதப்படவில்லை. முஸ்லிம்களை முற்றாக அழிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த பாடல் எழுதப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சி ஆரோக்கியமானதும், அவசியமானதும் என்று ஆனந்த மடம் நாவல் கூறுவதாக ஆங்கிலேய அரசு குறிப்பு குறிப்பிடுகிறது. இது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் பாடல் என்று லண்டனுக்கு ஆங்கிலேய அதிகாரிகள் பரிந்துரைத்ததாக வரலாற்றாசிரியர் டி. ஞானைய்யா குறிப்பிடுகிறார்.

ஆனந்த மடம் நாவலில் முஸ்லிம்களை கொன்று பாடும் வெற்றி கீதமாக தான் வந்தே மாதரம் அமைக்கப்பட்டுள்ளது. தாய் என்று இந்த பாடலில் குறிப்பிடப்படுவது இந்திய தேசத்தை அல்ல. மாறாக காளிதான் இந்த பாடலில் வணங்கப்பட வேண்டிய தாயாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக விளங்கிய இந்திய அதிகாரியான பக்கிம் சந்தருக்கு ராவ் பகதூர் பட்டம் அளித்து ஆங்கிலேய அரசு கவுரவித்தது. பக்கிம் சந்தர் ஆங்கிலேய அரசுக்கு விசுவாசியாக இருந்தார். இவர் எழுதிய பாடல் தான் வந்தே மாதரம்.

இப்பாடலின் பின்னணியை காந்தியடிகள் 1937ல் தான் தெரிந்து கொண்டார். முஸ்லிம்களுக்கு கோபமூட்டும் அவமானப்படுத்தும் இப்பாடலை பாட வேண்டாம் என்று காந்தியடிகள் கூறினார். இப்பாடலின் பின்னணியை மகாகவி தாகூரிடம் கேட்டறிந்த பண்டிதர் ஜவஹர்லால் நேரு 'இது முஸ்லிம்களுக்கு எரிச்சலூட்டக் கூடியது' என்றார்.

வந்தே மாதரம் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை உமிழும் பாடல். இந்த வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் மட்டுமல்ல, மதவெறியற்ற சமூக நல்லிணக்கத்தையும் சக வாழ்வையும் விரும்பும் எவரும் பாட முன்வரமாட்டார்கள்.

ஜன கண மன என்ற தேசிய கீதத்தை தனிப்பட்ட முஸ்லிம்களும் பாடுகிறார்கள். முஸ்லிம் நிறுவனங்களிலும் பாடப்படுகிறது. இந்த சூழலில் ஏக இறைவனை தவிர வேறு யாரையும் வணங்காத முஸ்லிம்கள் ஒரு போதும் தங்கள் நிறுவனங்களிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ வந்தே மாதரத்தை பாட மாட்டார்கள்.

தமிழக அரசு உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்துள்ள இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தல் கூடாது என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன். சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்றி ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 secs ago

கல்வி

2 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

44 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

2 hours ago

மேலும்