விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை இந்தியாவிலும் நீக்க வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது கடந்த 26 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை செல்லாது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 26 நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது செயல்படுத்தப்பட்டு வந்த தடை நீக்கப்படும். இது வரவேற்கத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டிருப்பது கடந்த 3 ஆண்டுகளில் இது மூன்றாவது முறையாகும். கடந்த 2005-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்ட தடையை லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீக்கியது.

அதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அளித்த தீர்ப்பில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தது. அதற்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டு விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல... அது விடுதலைக்காக போராடும் இயக்கம் என்று இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும். உரிமையும், அதிகாரமும் கோரி இலங்கைத் தமிழர் நடத்திவரும் அறவழிப் போராட்டத்திற்கு உலகின் ஆதரவை திரட்ட இது உதவும். விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்தியது உரிமைப் போராட்டமே தவிர பயங்கரவாதம் அல்ல என்று உலகின் பல்வேறு நீதிமன்றங்கள் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இது உலகத் தமிழருக்கு கிடைத்த வெற்றியாகும்.

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்திருந்தன. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து இங்கிலாந்து தவிர ஐரோப்பிய ஒன்றியத்தில் அடங்கியுள்ள 26 நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்படும். தொடர்ந்து கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தடை உடைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இலங்கைத் தமிழர்களுக்கு தாயகத்தை அமைப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல இந்தத் தீர்ப்பு பெரிதும் உதவியாக இருக்கும்.

உலகில் எந்த நாடும் விடுதலைப் புலிகளால் நேரடியாக பாதிக்கப்பட்டு அந்த இயக்கத்தை தடை செய்யவில்லை. மாறாக, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு திட்டமிட்டு செய்த பரப்புரையால் தான் தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் அதை பின்பற்றி அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளும் தடைகளை விதித்தன.

விடுதலைப் புலிகள் மீது முதன்முதலில் தடை விதித்தது இந்தியாதான். விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் கூறியுள்ள காரணங்கள் அனைத்தும் இந்தியாவுக்கும் பொருந்தும். எனவே, இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது கடந்த 26 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காகவும், உதவியதாகவும் கைது செய்யப்பட்ட அனைவரையும் அரசு விடுதலை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, ராஜிவ் கொலை வழக்கில் தவறுதலாக கைது செய்யப்பட்டு 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் நிபந்தனையின்றி விடுவிக்கவும் அரசுகள் முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

உலகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்