நீட் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற போர்க்கால நடவடிக்கை மேற்கொள்க: ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

நீட் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஒரு நாடு - ஒரே தேர்வு என்ற வல்லாதிக்க எண்ணத்தோடுத் திணிக்கப்பட்ட நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற அவர்களது கனவுக்கு மத்திய அரசும் தமிழக அரசும் வேட்டு வைத்திருக்கின்றன.

நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறுவதில் தமிழக அரசு பெரும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. மத்திய அரசு இழைத்த அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்திருக்க வேண்டிய அரசு, அதற்கு எதிராக ஒரு முணுமுணுப்பைக்கூட காட்ட அஞ்சுகிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்ததன் விளைவாக, உரிமைக்குக் குரல் கொடுக்காமல் துரோகம் இழைத்துவிட்டது. தனது தவறை மறைப்பதற்காக, அடுத்தடுத்து பொய்யான வாக்குறுதிகளையும் தவறுகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யும் வகையில் ஓர் அரசாணை வெளியிட்டு, தமிழக மாணவர்களின் நலன்களைப் பாதுகாத்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டது. அந்த அரசாணை, சட்டவிரோதமானது என்று கூறி உயர் நீதிமன்றத்தால் இன்று ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகுந்த வேதனை அளிக்கக்கூடியது.

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவுகளில் வெந்நீரைக் கொட்டி இருக்கிறது. கிராமப்புற மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கிறது என்று நீதிமன்றம் சொன்னாலும், அதன் தீர்ப்பு ஒடுக்கப்பட்ட, ஏழை மாணவர்களின் எதிர்காலத்துக்குப் பாதகம் விளைவிப்பதாக அமைந்திருக்கிறது.

மாநில அரசு, பொருத்தமான சட்ட வல்லுநர்களைக் கொண்டு உரிய வகையில் வாதாடியதா? பாடத்திட்டத்தில் சமத்துவம் இல்லாத நிலையில், மாணவர் சேர்க்கையில் மட்டும் எப்படி சமத்துவம் என்ற வாதம் சரியாகும்? என்ற நியாயமான கேள்விகளை நீதிமன்றத்தின் முன்னால் வைத்ததா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் இருக்கிறது.

சமூக நீதி உணர்வுக்கு மாறான, கிராமப்புற - அடித்தட்டு மாணவர்களைப் பாதிக்கக் கூடிய இந்தத் தீர்ப்பு திருத்தி எழுதப்பட வேண்டும். அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த அரசாணையை அரசு வெளியிட்டபோதே, இதனால் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் அபரிதமான மதிப்பெண்களைப் பெற்றுச் சாதித்து, நீட் தேர்வில் சொற்ப மதிப்பெண்களை மட்டுமே பெற்ற மாணவர்களுக்கு எந்தவகையிலும் இது பயன் அளிக்கப்போவது இல்லை என்ற எனது கருத்தை அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்திருந்தேன்.

85 சதவீத எம்பிபிஎஸ், மற்றும் பிடிஎஸ், இடங்கள், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டாலும், நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே அவை நிரப்பப்படும். நீட் தேர்வுக்கென சிறப்புப் பயிற்சிப் பெறாத, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இதனால் பயன் இல்லை என்பதுதான் எங்கள் நிலை.

நீட் தேர்வு தமிழகத்துக்குப் பொருந்தாது என்றும், நீட் மதிப்பெண்களைத் தமிழக அரசு கவனத்தில் கொள்ளாது என்றும் தொடக்கம் முதலே மாணவர்களுக்கு பொய்யான வாக்குறுதியைத் தந்த தமிழக அமைச்சர்கள், இப்போது அந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை என்றும், மாநில பாட மாணவர்களுக்கு ஒதுக்கீடு என்பதும் ஏமாற்று வேலை. தங்கள் தவறை மறைப்பதற்காக, தெரிந்தே செய்யும் மோசடி.

நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்றால், ஏறத்தாழ 50 சதவீத அளவிலான இடங்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த மாணவர்கள் தட்டிச் செல்வார்கள். பொதுப்பிரிவிலும்கூட, தங்கள் விகிதாசாரத்தை விட பலமடங்கு அதிகமான இடங்களை முன்னேறிய வகுப்பினர் அபகரித்துக் கொள்ளும், சமூக அநீதிக்கு தமிழக அரசு உடந்தையாகப் போகிறதா?

மீண்டும் மீண்டும் பொய்யான நம்பிக்கைகளைத் தந்துகொண்டு இருக்கின்ற தமிழக அரசு, பரிதவித்துக் கொண்டிருக்கிற மாணவர்களின் இதயங்களில் வேல் பாய்ச்சி வருகிறது. எப்போதும் இல்லாத பெரும் அச்சத்தையும் அவநம்பிக்கையையும் மாணவர்கள் நெஞ்சிலும் பெற்றோரிடத்திலும் ஏற்படுத்தியதற்குத் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்தக் குளறுபடிகளுக்குக் காரணமான மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்தி, போதிய அழுத்தம் தந்து, இனியும் காலங்கடத்தாமல், நீட் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், தமிழக மக்கள் இந்த மன்னிக்க முடியாத துரோகத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

18 mins ago

கல்வி

32 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

44 mins ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்