சென்னை பல்கலையில் ரூ.300 கோடி ஊழல்; விசாரணைக்கு ஆணையிடுக: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ரூ.300 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும், அது குறித்த விசாரணை நடத்த ஆளுநர் ஆணையிட வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது:

''உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக திகழ்ந்த சென்னைப் பல்கலைக்கழகம் இப்போது ஊழல் புகழ் பெற்ற பல்கலைக் கழகமாக மாறி வருகிறது. அந்த அளவுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தாண்டவன் பணியாற்றியபோது 90 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு பணிக்கும் ரூ.30லட்சம் வீதம் லஞ்சம் பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த வகையில் மட்டும் ரூ.27 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. அதேபோல், 15 பேராசிரியர்களை நியமிப்பதற்காக ஒவ்வொருவரிடமும் தலா ரூ.55 லட்சம் வீதம் லஞ்சம் பெறப்பட்டிருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் உணவகம் நடத்துவதற்கு மாதம் ரூ.3 லட்சம் வீதம் 3 ஆண்டுகளில் ரூ.1 கோடிக்கும் மேல் கையூட்டு வாங்கப்பட்டிருக்கிறது.

மேலும், கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல், இணைப்புக் கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகளை தொடங்க அனுமதி அளிப்பதில் ஊழல் என 2013 முதல் 2016 வரையிலான 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.300 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஒரு பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளில் ரூ.300 கோடி அளவுக்கு, அதாவது ஆண்டுக்கு ரூ.100 கோடி ஊழல் நடப்பதை சகித்துக் கொள்ள முடியாது. சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் ஆண்டு நிதியின் அளவே ரூ.100 கோடிக்கும் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அதைவிட அதிகமாக ஊழல் நடந்திருப்பதைப் பார்த்தால், பல்கலைக் கழகத்திற்கு பிற வழிகளில் வரும் வருவாய், வங்கிகளில் செய்யப்பட்டிருந்த வைப்பீடுகள் ஆகியவற்றிலிருந்தும் பணம் எடுக்கப்பட்டு ஊழல் செய்யப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. துணைவேந்தராக இருந்த தாண்டவன் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஓய்வு பெற்றுச் சென்று விட்டாலும் ஊழல் மட்டும் ஓய்வுபெற மறுக்கிறது.

தாண்டவன் ஓய்வு பெற்ற பிறகு நானோ டெக்னாலஜி துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியிலிருந்து ரூ.5 கோடி முறைகேடாக எடுக்கப்பட்டு வேறு துறைகளின் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இதுதொடர்பாக தமிழக ஆளுநரை நேரில் சந்தித்துப் புகார் அளிக்க பேராசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். நானோ டெக்னாலஜி துறையின் நிதி, வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டது உண்மைதான் என பல்கலைக்கழக துணை வேந்தர் டேவிட் ஜவகர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதுதொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், சென்னைப் பல்கலைக்கழகம் தொடர்பான பல விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளும்படி தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், ஆனால், தாம் எந்த ஒரு விஷயத்திலும் வளைந்து கொடுக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதிலிருந்தே சென்னை பல்கலைக்கழகத்தில் பெருமளவில் ஊழல்கள் நடைபெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

சென்னை பல்கலைக்கழகத்தின் மீது ஊழல் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க துணைவேந்தர் இல்லை. அந்த பொறுப்பை கவனித்துக் கொள்ளும் தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திக் விடுப்பில் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. பல்கலைக்கழக பதிவாளரும் இன்னும் சில நாட்களில் ஓய்வு பெறப்போகிறார். தமிழக அமைச்சரவை பதவி விலகி விட்டதால் உயர்கல்வித்துறைக்கு அமைச்சரும் இல்லை.

இதனால் எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி ஊழல்கள் தொடர்கின்றன. இதேநிலை நீடித்தால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் எப்படி கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறதோ, அதேபோல் சென்னை பல்கலைக்கழகமும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்.

எனவே, இந்தப் பிரச்சினையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனடியாக தலையிட்டு, சென்னைப் பல்கலைக்கழக ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். அத்துடன் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை இம்மாத இறுதிக்குள் நியமிக்க வேண்டும்''.

இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

56 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

14 hours ago

மேலும்