தமிழகத் தலைவர்களுக்கு தேச பக்தி தேவை: ஞானதேசிகன்

By செய்திப்பிரிவு

தமிழக அரசியல் தலைவர்கள் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றுமை, இறையாண்மையை கருத்தில் கொண்டு, தேச பக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் பேசும்போது, "ராஜீவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரில், நளினிக்கு மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. நளினியின் நிலை குறித்து மத்திய அரசுக்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதினார்.

அதில், கணவனை இழந்து வாடும் துன்பம் எனக்கும், தந்தையை இழந்து வாடும் துன்பம் என் பிள்ளைகள் ராகுல் மற்றும் பிரியங்காவுக்கும் தெரியும். இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினிக்கு குழந்தை இருப்பதாக அறிகிறேன். எனவே, நாங்கள் பட்ட துன்பம் அவருக்கோ, அவரது பிள்ளைக்கோ வர வேண்டாம். எனவே அவரது தண்டனையை குறையுங்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தமிழக அரசியல் தலைவர்கள் இந்த, உண்மையை புரிந்து கொள்வரா?

ஏழு பேரையும் குற்றவாளிகள் இல்லை என்று, உச்ச நீதிமன்றம் கூறவில்லை. இவர்களுக்காக குரல் கொடுக்கும் சில தலைவர்களை கேட்கிறேன், இவர்கள் கொலையாளிகள் இல்லை என்றால் உண்மையான கொலையாளிகள் யார் என்று சொல்லுங்கள். பாக்கியநாதன், பத்மா, நளினி ஆகியோர் ராயப்பேட்டையில் இருந்தார்கள். பேரறிவாளனும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். இவர்களுக்காக பரிந்து பேசினால் கூட ஏற்கலாம்.

ஆனால், தமிழ்நாட்டுக்கு தொடர்பில்லாத சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ் உள்ளிட்டோருக்கும், ராஜீவ் கொலையில் சம்பந்தம் இல்லை என்று வைகோ கூறுகிறார். அப்படியானால் வெளிநாட்டைச் சேர்ந்த அவர்களைப் பற்றி அவர் ஏற்கனவே அறிந்தவரா? அவருக்கு ஏற்கனவே அவர்களுடன் தொடர்புள்ளதா? எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும், நாட்டின் ஒருமைப்பாட்டை, ஒற்றுமையை, இறையாண்மையை கருத்தில் கொண்டு, தேச பக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

ராஜிவ் கொலை சாதாரணமானதல்ல, அரசியல் படுகொலை. பல நாடுகளில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு கொலையாளிகளுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை. அங்கு கட்சி பேதமின்றி அரசியல் கட்சித் தலைவர்கள், ஒட்டு மொத்தமாக குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டுமென்று குரல் கொடுக்கின்றனர். எந்த நாட்டிலும் அரசியல் படுகொலை செய்தவர்களுக்கு மன்னிப்பு அளித்ததில்லை.

எனவே, ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவு சட்ட விரோதமானது. அதை ஏற்க முடியாது.

உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் முன்பே, தமிழக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முதல்வர் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு, இந்த முடிவை அவர் எடுத்தால் தமிழக மக்களிடம் அன்பை பெற முடியும்" என்றார் ஞானதேசிகன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

19 mins ago

சினிமா

29 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்