மக்கள் போராட்டத்தை ஒடுக்கக்கூடாது; மணல் குவாரிகளை மூட வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரிகளை மூட வேண்டும்; மக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் புதிதாக திறக்கப்படும் மணல் குவாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் மீது தமிழக அரசு ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒடுக்குமுறை மூலம் சாதிக்கத் துடிக்கும் தமிழக அரசின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த 38 மணல் குவாரிகளில் பெரும்பாலானவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் அனுமதி காலாவதியானதைத் தொடர்ந்து அவை சில வாரங்களுக்கு முன்பு மூடப்பட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில், மூடப்பட்ட மணல் குவாரிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக திறக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி, ஏற்கனவே செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் தவிர புதிதாக 70 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. மணல் தட்டுப்பாட்டைப் போக்க புதிய மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சரும் அறிவித்துள்ள நிலையில், புதிய மணல் குவாரிகள் அமைக்கப்படவுள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அரசின் முடிவுக்கு எதிராக அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக பொதுமக்களை அச்சுறுத்தும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. உதாரணமாக நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த ஒருவந்தூரில் காவிரி ஆற்றில் மணல் எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கு எதிராக அப்பகுதி மக்களும், உழவர்களும் மணல் குவாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தை ஒடுக்க நினைத்த அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தாகக் கூறி வழக்குப் பதிவு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி, மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்றும், அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தால் அனைவரையும் கைது செய்து எதிர்காலமே இல்லாமல் ஆக்கிவிடுவோம் என காவல்துறையினர் மூலம் மிரட்டல் விடுத்து வருகிறது.

ஆனாலும், அதற்கு பணியாத பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி வைக்கும் போராட்டம், கால்நடைகளையும், குடும்ப அட்டைகளையும் அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் ஆகியவற்றை நடத்த தீர்மானித்துள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டிருப்பதை எதிர்த்தும் தொடர்போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, கரூர் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மணல் குவாரிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அவ்வாறு போராட்டம் நடத்தும் மக்களை தனிப்பட்ட முறையில் அச்சுறுத்துவது, பொய்வழக்குப் பதிவு செய்வது உட்பட பலவழிகளில் அடக்குமுறைகளை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு ஏவி வருகிறது. இது மனித உரிமை மீறிய செயலாகும்.

மணல் குவாரிகள் விஷயத்தில் தமிழக அரசின் சொல் ஒன்றாகவும், செயல் ஒன்றாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் இப்போதுள்ள மணல் குவாரிகள் அனைத்தும் அடுத்த 3 ஆண்டுகளில் மூடப்படும் என்றும், அதன்பின் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் மணல் எடுக்க தடை விதிக்கப்படும் என்றும் சில வாரங்களுக்கு முன் மதுரையில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அடுத்த 3 ஆண்டுகளில் ஆறுகளில் மணல் எடுக்கத் தடை விதிக்கப்படும் என்றால் இப்போதுள்ள மணல் குவாரிகள் படிப்படியாக மூடப்பட வேண்டும்.

ஆனால், புதிது புதிதாக மணல் குவாரிகளை திறப்பது இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் செயலாகவே அமையும். மணல் குவாரிகள் உள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், கடல்நீர் உட்புகுதல் உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், புதிய குவாரிகளைத் திறந்து தமிழகத்தை பாலைவனமாக்கிவிடக் கூடாது.

பணத்தை வாரி இறைத்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ள பினாமி அரசு, மணல் குவாரிகள், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்தும் மக்களை அடக்குமுறை மூலம் முடக்கி விடலாம் என நினைக்கிறது. இந்திய வரலாற்றில் மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயன்ற சர்வாதிகாரிகள் தான் மண்ணை கவ்வியிருக்கிறார்களே தவிர, மக்கள் போராட்டம் ஒருபோதும் வீழ்ந்ததில்லை.

இவ்வரலாற்றை உணர்ந்து தமிழகம் முழுவதும் புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரிகளை மூட வேண்டும்; மக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டும்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

10 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

12 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

43 mins ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

மேலும்