ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் தமிழர்களுக்கான நீதியை அழிக்க சிங்கள அரசின் சதி: வைகோ அறிக்கை

By செய்திப்பிரிவு

ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் தமிழர்களுக்கான நீதியை அழிக்க சிங்கள அரசு சதி செய்வதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

மனிதகுல வரலாற்றில் பல்வேறு கட்டங்களில் பல நாடுகளில் நடைபெற்ற கோரமான இனப்படுகொலைகளின் பட்டியலில், 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத அரசால் நடத்தப்பட்ட ஈழத்தமிழ் இனப் படுகொலை மிகவும் கொடூரமானதாகும்.

சான்றாக ஒன்றைக் குறிப்பிடுகின்றேன்.

1958 ஆம் ஆண்டு, சிங்கள இதழாளர் தாசி வித்தாச்சி எழுதிய ‘அவசர காலச் சட்டம் 58’ என்ற நூலில், சிங்கள இனவெறியர்கள், பிள்ளைத்தாச்சியான ஒரு தமிழச்சியின் வயிறைக் கிழித்து, அவளது கருப்பையைக் குழந்தையோடு பிடுங்கி வெளியே எடுத்து, அந்தப் பச்சைக் குழந்தையைச் சுவரில் விசிறியடித்து ஒரு நொடியில் சாகடித்தார்கள் என்று கூறித் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்து ஆங்கிலத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.

2008 ஆம் ஆண்டின் இறுதியில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அனைத்து உதவிகளோடு சிங்களப் பேரினவாத அரசு உச்சகட்டமாக ஈழத்தமிழ் இனப்படுகொலையை நடத்திக் கொண்டு இருந்த நிலையில், ஈழத்தமிழ் இளைஞர்கள் எட்டுப் பேரை, சிங்கள இராணுவத்தினரால் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு ஆடைகள் களையப்பட்ட அம்மணக் கோலத்தில் ஒரு நாயை இழுத்து வருவதைப் போல் கயிறு கட்டி இழுத்து வந்து, முதுகில் எட்டி மிதித்து மண்டியிட வைத்து, ஒவ்வொரு இளைஞனின் பிடரியிலும் துப்பாக்கியால் சுட்டு, அவர்களின் கபாலம் சிதறி இரத்தம் பீறிட்டு மண்ணில் பாய துடிதுடித்து மாண்ட கோரக்காட்சியை சேனல் 4 ஒளிப்படப் பதிவு உலக நாடுகளில் மனசாட்சி உள்ளவர்களை அதிர வைத்தது.

அதேபோல, தமிழ்க்குலமகள், யாழ் மீட்டும் திறன் பெற்று இருந்த இசைப்பிரியாவை, 15 க்கும் மேற்பட்ட சிங்கள இராணுவ மிருகங்கள் கொடூரமாகக் கற்பழித்துக் கொலை செய்து, ஆடைகள் எதுவும் இன்றி வீசி எறிந்த கொடுமையை அதே சேனல் 4 ஒளிப்படம், மனித குல மனசாட்சியை உலுக்கியது.

இந்தக் காட்சியை அரங்கில் அமர்ந்து பார்த்த அமெரிக்க, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணீர் சிந்திய செய்திகள் வெளியாகின.

ஆனால் சேனல் 4 தொலைக்காட்சியின் பிரதிநிதியான கேல்லம் மேக்ரே இந்தியாவுக்குள் நுழைவதற்கே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தடை விதித்தது.

இந்தக் கோரக் காட்சிகளை எல்லாம் பதிவு செய்து, ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம் என்ற குறுந்தட்டினைத் தமிழிலும், ஆங்கிலத்திலும், இந்தி, மராட்டி ஆகிய மொழிகளிலும் நான் தயாரித்து வெளியிட்டேன்.

ஆங்கிலக் குறுந்தட்டினை 158 நாடுகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைத்தேன். சில நாடுகளின் அதிபர்கள் குறுந்தட்டு கிடைத்தது என்ற பதிலையும் அனுப்பி இருந்தார்கள்.

ஐ.நா.வின் பொதுச்செயலாளராக இருந்த பான் கி மூன், இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனக்கொலை குறித்து விசாரணை ஆய்வு செய்வதற்காக, மார்சுகி தாருஸ்மன் தலைமையில் அமைத்த மூவர் குழுவின் 191 பக்க ஆய்வு அறிக்கையில், ஆயுதம் ஏந்தாத அப்பாவித் தமிழர்கள், நடக்க இயலாத நோயாளிகள், முதியவர்கள், தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள் பீரங்கிக் குண்டுகளாலும் விமானக் குண்டுவீச்சுகளாலும் படுகொலை செய்யப்பட்டதையும், மருத்துவமனைகளின் மீது வீசப்பட்ட குண்டுகளில் பலியானதையும், உணவு இன்றிப் பட்டினியால் மடிந்ததையும், ஆணித்தரமான ஆவணச் சான்றுகளுடன் அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையை மையமாக வைத்து, 2011 ஜூன் 1 ஆம் தேதி, பெல்ஜியம் நாட்டுத் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் மாநகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் இருக்கின்ற அரங்கத்தில், பல நாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஈழத்தமிழர் பிரச்சினை கருத்து அரங்கத்தில் ஆற்றிய எனது உரையில் மேற்கோள் காட்டிப் பேசினேன்.

ஈழத்தமிழர் இனப் பிரச்சினைக்கு, இறையாண்மையுள்ள சுதந்திரத் தமிழ் ஈழ தேசம்தான் ஒரே தீர்வு;

அந்தத் தீர்வை எட்டுவதற்கு, சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு இலங்கையின் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட வேண்டும்;

அதற்கு முன்னதாக சிங்கள இராணுவமும் போலீசும், சிங்களக் குடியேற்றங்களும் தமிழர் தாயகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும்;

சிறைப்படுத்தப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்துத் தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்;

இலங்கைத் தீவில் மட்டும் அன்றி, இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், நோர்வே, ஜெர்மனி, அமெரிக்காக, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடத்தில், அந்தந்த நாடுகளிலேயே பொது வாக்கெடுப்பு நடத்தவும் வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபை தானே முன்வந்து செய்ய வேண்டும் என்றும் நான் முழங்கியதை, உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் குறிப்பாக விடுதலைப்புலிகள் நெஞ்சார வரவேற்றனர்.

1976 மே 14 ஆம் நாள், வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்ட இறையாண்மை உள்ள சுதந்திர தமிழ் ஈழ தேசம் என்ற இலக்கை நோக்கி, உலகத்தின் பல்வேறு தேசிய இனங்கள், ஆயுதப் போராட்டத்தின் மூலம் விடுதலை பெற்றதைப் போல, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தலைமையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் சிங்களப் படைகளை முறியடித்து, வான்படை கடல்படை தரைப்படை அமைத்து தமிழ் ஈழ தேசத்தை அறிவிக்க இருந்த வேளையில், இந்திய வல்லாண்மை அரசு செய்த துரோகத்தால் களத்தில் புலிகள் தோற்றனர்.

ஈழத்தமிழர்களின் வரலாற்றில், பொது வாக்கெடுப்பு என்ற கோரிக்கை, 2012 ஜூன் 1 ஆம் தேதி வரை, ஈழத்தமிழர் அமைப்புகளாலோ, உலகில் உள்ள வேறு எந்தத் தமிழ் அமைப்புகளாலோ முன்வைக்கப்படவில்லை. 52

ஆண்டுக்கால எனது பொது வாழ்க்கையில், என் மனம் நிறைவு அடைகின்ற விதத்தில் இந்தக் கடமையைச் செய்து இருக்கின்றேன்.

ஆனால் தற்போது பல நாடுகள் மேற்கொண்டு இருக்கின்ற நிலைமை மிகவும் கவலை தருகின்றது. கடந்த ஆண்டு ஜெனீவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் நடைபெற்ற கூட்டத்தில், மார்ச் மாதத்தில் தந்திரமாக இலங்கை அரசு ஆறு மாதத் தவணை கேட்டு, செப்டெம்பரில் இதுபற்றி முடிவு எடுப்போம் என்றது.

அனைத்துலக நாடுகளின் நீதிபதிகளைப் பிரதிநிதிகளாகக் கொண்டு, இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் நிகழ்ந்த கொடுமைகள் குறித்துப் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்ற ஜெனீவாவின் தீர்மானத்தை சிங்கள அரசு ஏற்கவில்லை. அயல்நாட்டுப் பிரதிநிதிகள் எவரையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற மைத்ரிபால சிறிசேனாவும், ரணில் விக்கிரமசிங்கேயும் திமிராக அறிவித்தனர்.

அது மட்டும் அல்ல; மின்சார நாற்காலியில் அமர வைத்துச் சாகடிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்த மகிந்த ராஜபக்சேவை நாங்கள் காப்பாற்றி இருக்கின்றோம் என்றும் பேசினர்.

வருகின்ற 2017 பிப்ரவரி 27 இல் தொடங்கி, மார்ச் 27 வரை ஜெனீவாவில் நடைபெற இருக்கின்ற மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தொடரில், ஈழத்தமிழர் படுகொலைப் பிரச்சினையை நிரந்தரமாக ஆளப் புதைக்கும் அக்கிரம நோக்கத்தோடு, சிங்கள அரசு மிகத் தீவிரமான ஏற்பாடுகளைத் தற்போது வேகமாகச் செய்து வருகின்றது.

அண்மையில், ஐ.நா. மன்ற வளாகத்தில் இந்திய சிங்கள அரசுகள் இணைந்து நடத்திய கூட்டத்தில் 60 நாடுகள் பங்கேற்றுள்ளன. அந்தக் கூட்டத்தில் சிங்கள அரசு நஞ்சைக் கக்கியுள்ள கருத்துகள் பின்வருமாறு:

1. இலங்கையில் தற்போது அமைதி நிலவுகின்றது.

2. போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு, சுதந்திரமாக வாழ்கின்றார்கள்.

3. இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் தரப்பே எதிர்க்கட்சியாக இருக்கின்றது.

4. மீள் கட்டமைப்புப் பணிகளை இராணுவமே முன்னின்று செய்கின்றது.

5. இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பகுதி நிலம், மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது.

6. மாவீரர் நாள் நிகழ்ச்சியும் அனுமதிக்கப்படுகின்றது.

(இது அப்பட்டமான பொய். 2016 நவம்பர் மாதம் மாவீரர் நாள் கொண்டாட முயன்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேரைச் சுட்டுக் கொன்றனர்).

7. கடந்த அரசை விட இப்போது தமிழர் விவகாரங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

8. பொறுப்புக் கூறலுக்கான செயற்திட்டங்களை மேற்கொண்டு இருப்பதால், வருகின்ற மார்ச் மாதம் முதல் மேலும் 18 மாதங்கள் அவகாசம் தேவை. நிதி உதவிகளும் தேவை.

இதை ஆதரித்து, 30 க்கும் மேற்பட்ட சிங்கள அமைப்புகள் அறிக்கை தாக்கல் செய்து, தீவிரம் காட்டி வருகின்றன. அந்த அமைப்புகளில் கணிசமான தமிழர்களும் (துரோகிகள்) இடம் பெற்றுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், வடக்கு மாகாணத்தின் முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள், தமிழ் ஈழ மக்களுக்கு நீதி கிடைக்கவும், விடியலுக்கான முதல் படிக்கட்டை அமைக்கவும் துணிச்சலோடு முயன்று வருகின்றார். வடக்கு மாகாண சபையில் அவர் நிறைவேற்றிய தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவுகின்ற ஒரு ஆவணம் ஆகும்.

அதுபோலவே, 2012 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதியன்று நான் அன்றைய முதல் அமைச்சர் சகோதரி ஜெயலலிதா அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து விரிவான அறிக்கை தந்தேன். சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது

வாக்கெடுப்பு நடத்துவதற்குத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு கோரிக்கை வைத்தேன்.

எனது அறிக்கையின் கருத்துகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அதில் இருந்த பல வாசகங்களையும் பயன்படுத்தி, 2012 மார்ச் 27 ஆம் தேதியன்று, தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு எனும் தீர்மானம், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் போல வரலாற்று ஆவணம் ஆகும். ஐ.நா. மன்றத்திலும் ஜெனீவா கவுன்சிலிலும் நமக்குக் கேடயமாகப் பயன்படும் என்பதால், அந்தத் தீர்மானம் நிறைவேறிய ஒரு மணி நேரத்திற்குள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரலாறு பொன் மகுடம் சூட்டும் என்று அறிக்கை தந்தேன்.

வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் கனடாவுக்குச் சென்று அங்கே பல ஆண்டுகளாகப் பிரிந்து கிடந்த ஈழத்தமிழர்கள் ஒன்றாகச் சேர்ந்து நடத்துகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றார். ஆனால், அவர் கனடாவுக்குச் செல்லக்கூடாது என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்துகொண்டே ஈழத்தமிழர்களுக்குக் குழி பறிக்கின்ற வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை தந்துள்ளார்.

தமிழ் இனத்தின் சாபக்கேடே இந்த துரோகம்தானே?

தற்போது, உலகெங்கும் உள்ள ஈழ உணர்வாளர்களும் தன்மானத் தமிழர்களும் ஒரு முக்கியமான கடமையை விரைந்து செய்ய வேண்டும். அந்தந்த நாடுகளில் உள்ள சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுக வேண்டும்.

அவர்களையும், மனித உரிமைத் தொண்டு அமைப்புகளையும், ஜெனீவாவில் உள்ள மனித உரிமை மன்றத்தின் ஆணையருக்கும், ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளருக்கும், சிங்கள அரசு நடத்திய தமிழ் இனப்படுகொலை குறித்தும், அதுகுறித்து சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை வேண்டும்

என்பதையும், ‘நடைபெற்றது போர்க்குற்றம் அல்ல; இனப்படுகொலைதான்’ என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற வேண்டும் என்பதையும்,

தமிழர் தாயகத்தில் இருந்து சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும்;

சிங்கள இராணுவமும் போலீசும் வெளியேற்றப்பட வேண்டும்;

சிறைகளில் அடைக்கப்பட்ட விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்;

சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழர் தாயகத்தில் நடத்தப்பட வேண்டும்;

உலகின் பல நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடம், ஏதிலிகளாக உள்ள அகதிகளிடம், அந்தந்த நாடுகளிலேயே பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. மன்றம் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, தக்க ஆதாரங்களுடன் மனித உரிமை ஆணையத்திற்கும் ஐ.நா. மன்றத்திற்கும் ஜனவரி மாத இறுதிக்குள்ளாகவே அனுப்பி வைக்க உடனடிச் செயல்பாட்டில் இறங்க வேண்டும்.

கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில், மொரீசியஸ் நாட்டைப் பங்கேற்க விடாமல் தடுத்து, நீதிக்கு உதவிய மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள், தலைவர் பிரபாகரன் அவர்களது வேண்டுகோளின்படி, தமிழ் ஈழத்தின் இடைக்கால நிர்வாகம் குறித்தும், எதிர்கால அமைப்பு குறித்தும், அரசியல் சட்ட வரைவினைத் தயாரித்துக் கொடுத்த பெருமகன் ஆவார்.

உலக நாடுகளின் தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதியோடு, உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ் அமைப்புகளை ஊக்குவித்து அவரே முன்னின்று இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவும், இந்த ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அவர் பங்கேற்று, ஈழத்தமிழர்களின் நீதிக்காக வலுவான குரல்

கொடுப்பதும் இன்றைய காலகட்டத்தின் முக்கியத் தேவை எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

என்று கூறியுள்ளார் வைகோ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்