கோடானுகோடி மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா உயிர் பிரிந்தது: கண்ணீரில் மிதக்கிறது தமிழகம்

By செய்திப்பிரிவு

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அவருக்கு வயது 68.

முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒட்டுமொத்தமே தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடைபெற்ற பிறகு, அங்கிருந்து ராஜாஜி ஹாலில் செவ்வாய்க்கிழமை மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10 மணிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

முதலில் முதல்வர் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அக்டோபர் 1-ம் தேதி தமிழக ஆளுநர் (பொறுப்பு) சி.எச்.வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வர் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றார். அப்போது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று இருப்பதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியிடப்பட்டது.

நுரையீரல் தொற்றை நீக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டார். அவர் முதல்வருக்கு நுரையீரல் தொற்றை நீக்குவதற்கான சிகிச்சை அளித்தார். இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் நிபுணர் ஜி.கில்நானி, மயக்கவியல் நிபுணர் அஞ்சன் டிரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர்.

எய்ம்ஸ் மருத்துவர்கள், அமெரிக்க மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆகியோர் அவ்வப்போது வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்துச் சென்றனர். அவர்களது ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் குழு, முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது.

தொடர் சிகிச்சை காரணமாக நுரையீரல் தொற்று குறைந்து, முதல்வரின் உடல்நிலை சீராகி வருவதாகவும், எனினும் அவர் மருத்துவமனையில் நீண்ட நாள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் அக்டோபர் 6-ம் தேதி அப்போலோ நிர்வாகம் அறிவித்தது. அக்டோபர் 7-ம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மருத்துவமனைக்கு வந்து முதல்வர் உடல்நிலை குறித்து அமைச்சர்கள், மருத்துவர்களிடம் விசாரித்தார்.

அக்டோபர் 7 -ம் தேதி, தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்துப் பேசினார். அக்டோபர் 8-ம் தேதி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், 10-ம் தேதி கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து விசாரித்து சென்றனர்.

இந்நிலையில், அக்டோபர் 11-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா கவனித்துவந்த உள்துறை உள்ளிட்ட இலாகாக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். முதல்வர் ஜெயலலிதா முதல்வராகவே தொடர்வார் என்றும் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 12-ம் தேதி பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, அக்டோபர் 13-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் ஆகியோர் அப்போலோ மருத்துவமனை சென்று முதல்வர் உடல்நலம் தொடர்பாக விசாரித்தார்.

அக்டோபர் 22-ம் தேதி ஆளுநர் 2-வது முறையாக அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி மற்றும் மருத்துவ குழுவினரிடம் விசாரித்தறிந்தார். இதற்கிடையே முதல்வர் பூரண நலம் பெற வேண்டி அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், கட்சியினர் தமிழகம் முழுவதும் கோயில்களில் யாகம், பூஜைகள் நடத்தினர். இதையடுத்து முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறிது சிறிதாக நீக்கப்பட்டு, இயற்கையாக சுவாசிக்கும் நிலைக்கு வந்தார். அவருக்கு சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்த மேரி, சீமா ஆகியோர் பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர்.

சில தினங்களுக்கு முன்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண பிரிவுக்கு முதல்வரை மாற்றினர். அப்போது, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறும்போது, "முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் விரும்பும்போது வீட்டுக்குச் செல்லலாம்" என்றார்.

மாரடைப்பு

முதல்வர் எப்போது வீட்டுக்குச் செல்வார், எப்போது மீண்டும் பணிக்கு வருவார் என கட்சியினரும் தமிழக மக்களும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் மருத்துவமனையில் அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் மருத்துவமனைக்கு வந்தனர்.

முதல்வர் உடல்நிலை தொடர்பான செய்திகளால் பதற்றம் நிலவியதால், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், 'முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு இதய நோய், நுரையீரல் மற்றும் அவசர சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை அளித்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்' என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், முதல்வர் உடல்நிலை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் இருந்து அவர் நேற்று முன்தினம் இரவு 11.27 மணிக்கு சென்னை வந்தார். ராஜ்பவனில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு அப்போலோ மருத்துவமனை வந்தார். முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை, அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை ஆகியவற்றை அறிந்துகொண்டு, மீண்டும் ராஜ்பவன் திரும்பினார்.

இந்நிலையில், திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பை நீக்க முதல்வருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த தகவல் வெளியானதும், அதிமுக பிரமுகர்கள், வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். பகல் 12.30 மணிக்கு மீண்டும் ஒரு அறிக்கையை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. அதில், 'முதல்வருக்கு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு எக்மோ (ECMO) என்ற கருவி மூலம், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என தெரிவித்தது.

முதல்வர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியானதும், அதிமுகவினர் அதிர்ச்சியில் உறைந்தனர். மருத்துவமனை வளாகமே பரபரப்பானது. பதற்றத்தை தணிக்க போலீஸார் குவிக்கப்பட்டனர். அமைச்சர்கள், அரசு செயலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் என பலரும் மருத்துவமனைக்கு வந்தனர்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி முதல்வரின் உயிர் 11.30 மணிக்கு பிரிந்ததாக நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது.

இதைக் கேட்டதும் மருத்துவமனை முன்பு திரண்டிருந்த அதிமுகவினர் 'அம்மா' என்று கதறித் துடித்தனர். பெண்கள் மார்பில் அடித்துக்கொண்டு அழுதனர்.

முன்னதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும் மருத்துவமனைக்கு வந்து சென்றார்.

செப்டம்பர் 22-ம் தேதி முதல்... 73 நாட்கள்:

செப்டம்பர் 22-ம் தேதி: தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செப்டம்பர் 23-ம் தேதி: "ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது. வழக்கமான உணவுகளை உட்கொள்கிறார்" என அப்போலோ மருத்துவமனை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து அனுப்பினார்.

செப்டம்பர் 25-ம் தேதி: சமூக வலைத்தளங்களில் பல்வேறான வதந்திகள் பரவிவந்த நிலையில் அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்லப்படுவார் என கூறப்படுகிறது. ஆனால், அவை பொய்யானவை அடிப்படை ஆதாரமற்றவை" எனத் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 27-ம் தேதி: காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் உச்ச நீதிமன்ற உத்தரவு தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியதாக அதிமுக-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 29-ம் தேதி: "தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது. ஆனால், இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும்" என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

அக்டோபர் 1-ம் தேதி: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

அக்டோபர் 2-ம் தேதி: அப்போலோ மருத்துவமனை மேலும் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "முதல்வர் ஜெயலலிதா மருத்துவ சிகிச்சைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும்" எனத் தெரிவித்தது.

அக்டோபர் 6--ம் தேதி: அப்போலோ மருத்துவமனை முதன்முறையாக மிக விரிவான மருத்துவ செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், முதல்வர் ஜெயலலிதா செயற்கை சுவாசக் கருவி உதவியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுதவிர, நுரையீரல் தொற்று நீங்க சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அக்டோபர் 9-ம் தேதி: திமுக பொருளாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து தமிழக முதல்வர் நலன் விசாரித்துச் சென்றார்.

அக்டோபர் 12-ம் தேதி: தமிழக முதல்வர் ஜெயலலிதா கவனித்துவந்த துறைகளை கூடுதலாக ஓ.பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அக்டோபர் 22-ம் தேதி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் படுக்கையில் இருந்து எழுந்து அமர முடிகிறது. அவரால் சைகையால் தொடர்பு கொள்ள முடிவதாகவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்தது.

அக்டோபர் 29-ம் தேதி: அதிமுக வேட்பாளர்கள் மற்றும் மாற்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த படிவம்-ஏ மற்றும் படிவம்-பி ஆகியவற்றில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை. அவருடைய பெருவிரல் ரேகை மட்டும் பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் கையெழுத்து போடாமல், பெருவிரல் ரேகையை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நவம்பர் 16-ம் தேதி: "மக்களின் பிரார்த்தனை காரணமான நான் மறுபிறவி எடுத்துள்ளேன்" என முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.

நவம்பர் 18-ம் தேதி: முதல்வர் ஜெயலலிதா செயற்கை சுவாசக் கருவிகள் உதவியில்லாமல் இயற்கையாகவே சுவாசிப்பதாக அப்போலோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார். மேலும், முதல்வர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம் எனக் கூறினார்.

டிசம்பர் 4-ம் தேதி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கைக் குறிப்பு:

கர்நாடக மாநிலம் மைசூரில் ஜெயராம் - சந்தியா தம்பதியருக்கு 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பிறந்தார் ஜெயலலிதா. இளம் வயதில் சென்னையில் கல்வி பயின்றார். பின்னர், திரைப்படங்களில் நடித்தார். 1982-ம் ஆண்டு அதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்ட அவர், அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக உயர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பேசும் திறன்கொண்டவர் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக அரசியலில் கருணாநிதிக்கு மாற்றான மிகப்பெரிய அரசியல் சக்தியாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்.

1991-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக முதன் முறையாக பொறுப்பேற்றார்.

2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதையடுத்து முதலமைச்சராக பதவியேற்றார் ஜெயலலிதா. ஆனால், நான்கு தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத் தீர்ப்பையடுத்து அவர் பதவி விலகினார். பின்னர் நடைபெற்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலை‌யில் 2002-ம் ஆண்டு 3-வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்றார்‌.

2006-ல் அதிமுக ஆட்சியை இழந்தது. 2011-ம் ஆண்டு மீண்டும் முதல்வரானார். 2014-ல் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததால், முதல்வர் பதவியை அவர் இழந்தார். தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து 5-வது முறையாக முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். ஆர்.கே.நகரில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்