தொடரும் ஆழ்துளைக் கிணறு மரணங்கள்

By வி.தேவதாசன்

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் சிறுவர், சிறுமியர் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இத்தகைய மரணங்களைத் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது பெரும் கவலையாகவே உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

தமிழகத்தில் தொடரும் நிகழ்வுகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மூடப்படாத ஆழ்துளைக் கிணறு, தேவி என்ற 4 வயதுச் சிறுமியின் உயிரைப் பறித்துள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுபோல், கரூர் அருகே முத்துலட்சுமி என்ற 7 வயதுச் சிறுமி ஆழ்துளை கிணற்றில் கடந்த ஏப்ரல் மாதம் விழுந்து உயிரிழந்தாள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள கும்மாளத்தூர் கிராமத்தில் குணா என்ற 3 வயதுச் சிறுவன் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுமார் 6 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டான்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கைலாசநாதபுரம் கிராமத்தில் கடந்த 2011-ம் ஆண்டு மாதம் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது சுதர்சன் என்ற 5 வயதுச் சிறுவன் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தான்.

இதுபோல் நாடு முழுவதிலும் ஏதும் அறியாத சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள் பலர் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து உயிரை விடும் துயரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஏன் இந்த மரணங்கள்?

விவசாயத் தேவைகளுக்கு மட்டுமின்றி பல்வேறு காரணங்களுக்காக இன்று நிலத்தடி நீர் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைந்து பல பகுதிகளில் குடிநீர் மற்றும் விவசாயத்துக்குக் கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோன்ற பகுதிகளில் பயன்படுத்தப்படாத மற்றும் தண்ணீர் இல்லாத ஆழ்துளை கிணறுகளை சிலர் அப்படியே விட்டு விடுகின்றனர்.

லட்சக்கணக்கில் செலவு செய்து தோண்டப்படும் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகளுக்கு, அந்த கிணறுகளை மூட வேண்டுமானால் மேலும் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் பலர் அப்படியே விட்டு விட்டு செல்கின்றனர். வயல்வெளிகளில் விளையாடச் செல்லும் குழந்தைகள் இதுபோன்ற மூடப்படாத கிணறுகளில் தவறி விழுந்து உயிரை விடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

அரசின் கடமை

இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மேலும் தொடராமல் இருக்க, பயன்படுத்தப்படாமல் மற்றும் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து, அவற்றை மூடுவதற்கு குறிப்பிட்ட துறையினரை பொறுப்பாக்க அரசு முன்வரவேண்டும். மரணங்கள் நிகழும் நேரத்தில் மட்டும் அதிரடியாக நடவடிக்கை எடுப்பதும், பின்னர் அதுபோன்ற கிணறுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதும் சிறுவர் மரணங்கள் தொடர காரணமாக உள்ளன. கிணறுகளை மூடாத நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுத் தரவேண்டும்.

கண்டுகொள்ளப்படாத உச்ச நீதிமன்ற உத்தரவு

ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டும்போது அது தொடர்பான விவரங்களை தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கு, நில உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும்.

வெளியாட்கள் யாரும் அருகில் செல்ல முடியாத வகையில் ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். அவற்றை திறந்து வைக்காமல், உரிய அளவிலான மூடியைக் கொண்டு மூடி வைக்க வேண்டும். பயன்படுத்தப்படாத அல்லது கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மண்ணைக் கொண்டு மூடி விட வேண்டும் என பல வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.

எனினும் இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்திட தொடர்புடையவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காத வரை, தேவியைப் போன்ற சிறுவர், சிறுமியருக்கான ஆபத்து தொடரவே செய்யும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்