அண்ணா உருவாக்கிய காஞ்சிபுரம் ஜரிகை நிறுவனம்: நவீன காலத்துக்கு ஏற்ப மேம்படுத்தப்படாததால் மதிப்பிழப்பு - சந்தை வாய்ப்புகள் இருந்தும் அதிகாரிகள் மெத்தனம்

By ச.கார்த்திகேயன்

அறிஞர் அண்ணா உருவாக்கிய காஞ்சிபுரம் ஜரிகை நிறுவனத்தை நவீனப்படுத்தாததால் மதிப்பை இழந்துள்ளது. தரமான ஜரிகைக்கு சந்தை வாய்ப்புகள் இருந்தும், கைத்தறித் துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நெசவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பட்டுப் புடவைகளுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரத்தில் கைத்தறி கூட்டுறவு சங்கங்களை தோற்றுவித்தவர் சுதந்திரப் போராட்ட தியாகி கே.எஸ்.பார்த்தசாரதி. அறிஞர் அண்ணா வின் நெருங்கிய நண்பர் இவர். இவரது கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா காஞ்சிபுரத்தில் ஜரிகை உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 1971-ல் காஞ்சிபுரம் ஓரிக்கை தொழிற்பேட்டையில் தமிழ்நாடு ஜரிகை நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்திய அளவில் அரசு சார்பில் தொடங்கப்பட்ட ஒரே ஜரிகை உற்பத்தி நிறுவனமாக இன்றும் திகழ்கிறது. இது, தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை யால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் 1996 2001 காலகட்டத்தில், ஆண்டுக்கு ரூ.1 கோடியே 40 லட்சம் வரை லாபம் ஈட்டப்பட்டுள்ளது. அப்போது 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் இருந்தனர். மாதத்துக்கு 7 ஆயிரம் மார்க் (ஒரு மார்க் = 242 கிராம்) ஜரிகை உற்பத்தி செய்யப்பட்டது. தினமும் 2 ஷிப்ட் வேலை நடைபெற்றது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு இந்நிறுவனம் மேம் படுத்தப்படாததால், அங்கு தொழிலாளர்களின் எண் ணிக்கை தற்போது 80 ஆக குறைந்துள்ளதுடன், தினமும் ஒரு ஷிப்ட்தான் இயக்கப்படுகிறது. அதில் பல தொழிலாளர்களுக்கு வேலையும் கொடுக்க முடிய வில்லை. கடந்த சில ஆண்டுகளாக லாபம் ரூ.40 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மாதத்துக்கு 3 ஆயிரம் மார்க்குகள்தான் உற்பத்தி செய்ய முடிகிறது. கடும் சிரமத்துக்கு நடுவில் லாபக் கணக்கு காட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த லாபங்கள் கூட, பட்டு கூட்டுறவு நிறுவனங்களிடம் ஜரிகையை நிர்ப்பந்தித்து விற்பதால் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், ஆரணி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான பட்டு நெசவாளர்கள், ஜரிகையை பயன்படுத்துகின்றனர். தமிழ்நாடு ஜரிகை நிறுவன ஜரிகையில் தரம் இல்லை எனக்கூறி, சூரத்திலிருந்து வரவழைக்கப்படும் ஜரிகையையே நெசவாளர்கள் விரும்பி வாங்குகின்றனர். பட்டு கூட்டுறவு சங்கங்கள், தாங்கள் கொள்முதல் செய்யும் மொத்த ஜரிகையில் 40 சதவீதத்தை கட்டாயம், தமிழ்நாடு ஜரிகை நிறுவனத்திலிருந்து வாங்க வேண்டும் என்று அரசு நிர்ப்பந்தித்து வருகிறது. தரம் குறைந்த ஜரிகையை பயன்படுத்துவதால், பட்டுப் புடவைகளின் தரமும் குறைவதாக நெசவாளர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் ஏ.முத்துக்குமார் கூறியதாவது:

தமிழ்நாடு ஜரிகை நிறுவன ஜரிகையில் தங்க நிறம் மங்கிய நிலையில் உள்ளது. சில ஆண்டு களில் தங்க முலாம் உதிர்ந்து விடுகிறது. இந்த தொழிற்சாலை யில் காலம் காலமாக வெள்ளி இழையை வெளியில் வாங்கி, செம்பு, பட்டு நூல் ஆகியவற்றை முறுக்கேற்றி, அதன் மீது தங்க முலாம் பூசி, ஜரிகையை உற்பத்தி செய்கின்றனர். ஜரிகையை உற்பத்தி செய்வதற்கான அனைத்து பணிகளும் இங்கு மேற்கொள்ளப்படுவதில்லை. இந்த ஜரிகை நிறுவனம் சந்தை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நவீனப்படுத்தப்படவில்லை. இதற்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ள நிலையில், அதை அதிகாரிகள் பயன்படுத்திக்கொள்வதில்லை. அதிகாரிகளின் மெத்தனப் போக்காலேயே, அந்நிறுவனம் நலிவடைந்துவிட்டது.

மலிவு விலை ஜரிகை

மலிவு விலை ஜரிகை பயன்பாடு தற்போது அதிகரித்துவிட்ட நிலையில், அதைக்கூட அந்நிறுவனத்தில் தயாரிக்கலாம். இதன் மூலம் வேலைவாய்ப்பும், அரசுக்கு வருவாயும் கிடைக்கும். கைத்தறி துறையில் புதுப்புது செயலர்கள் பொறுப்பேற்கின்றனர். ஜரிகை நிறுவனத்தைப் பார்வை யிடுகின்றனர். மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கின்றனர். ஆனால், இந்த நிறுவனத்தில் எந்த மேம்பாடும் இதுவரை ஏற்படவில்லை. இவ்வாறு முத்துக்குமார் கூறினார்.

இது தொடர்பாக கைத்தறித் துறையில் கேட்டபோது, “வெள்ளி இழையை இங்கேயே தயாரிக்க, ஹைதராபாத்தில் உள்ள துருப்பிடிக்காத பொருட்கள் தொழில்நுட்ப மேம்பாட்டு மைய ஆலோசனையின்படி மேற்கொண்ட முயற்சி, தோல்வி யடைந்தது.

இந்நிறுவனத்தை மேம்படுத்து வதற்காக சூரத்திலிருந்து புதிய இயந்திரங்களை வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 mins ago

சினிமா

23 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்