தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.யின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு அதிமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்: ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு அதிமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவிலேயே முதன்முறையாக, திமுக தலைவர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இன்றைக்கு அதிமுக ஆட்சியில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தின் அங்கீகாரத்தை இழந்து நிற்பதைப் பார்த்து மிகுந்த மன வேதனைப்படுகிறேன்.

புகழ்பெற்ற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 கல்லூரிகள், 8 பட்டய படிப்பு நிறுவனங்கள், 39 வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன என்பதும், 13 இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு, 39 முதுகலை அறிவியல் பட்டப்படிப்பு உள்ளிட்ட முதுகலை அறிவியல் முனைவர் பட்டயப்படிப்பு, மற்றும் பகுதி நேர ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டப்படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகள் மூலம் வேளாண் கல்வி வழங்குதல் அனைத்தும், தமிழகத்திற்கு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

வேளாண் முன்னேற்றத்திற்காக, மகசூல் அதிகரிக்கும் ரகங்கள் பற்றிய ஆராய்ச்சி, சீரான சாகுபடி முறை குறித்த வழி காட்டல், உர மேலாண்மை, களை மற்றும் பூச்சி போன்வற்றிலிருந்து வேளாண் பயிர்களை மீட்பது, உழவு, விதைப்பு, களையெடுப்பது, அறுவடை செய்வது உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தும் இயந்திரங்களை வடிவமைத்தல், வேளாண் ஆராய்ச்சிப் பணிகள் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

விவசாயிகள் நலனுக்காக பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடும் இந்தப் பல்கலைக்கழகம் அங்கீகாரத்தை இழப்பதற்கு பல காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை பத்திரிகை செய்திகளாகவும் வெளிவந்திருக்கின்றன. அவற்றுள் முக்கியமான முதல் காரணம், இந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் விதிமுறைகளுக்கு மாறாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர், தேர்வு கட்டுப்பாடு அதிகாரி, அந்த பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரி முதல்வர்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவரும் பொறுப்பு அதிகாரிகளாகவே நியமிக்கப்பட்டதும், அடிக்கடி அவர்கள் மாற்றப்பட்டதுமாகும்.

உட்கட்டமைப்பு வசதிகள் ஏதும் இல்லாமல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது இரண்டாவது காரணமாகும். பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் மனையியல் கல்லூரி பாடதிட்டத்தை தன்னிச்சையாக மாற்றியது மூன்றாவது காரணமாகும்.

நான்காவதாக பல்கலைக்கழகத்தில் 2014 ஆம் ஆண்டில் இருந்து தன்னிச்சையாக முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களின் பாடதிட்டத்தை இரு பருவமுறையில் இருந்து முப்பருவ முறைக்கு மாற்றியுள்ளது இந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் விதிகளுக்கு முற்றிலும் முரணானது என்ற காரணமாகும்.

இதுபோன்ற காரணங்களின் அடிப்படையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் அங்கீகாரம் இரு வருடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 50 அதிமுக எம்.பி.க்கள் டெல்லியில் இருந்தும், இப்படியொரு அசாதாரண நிலை தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு உருவாகியிருக்கிறது என்பதை எண்ணும் போது கவலையளிக்கிறது.

இந்திய அளவில் புகழ்பெற்ற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு இப்படியொரு தலைகுனிவு ஏற்பட்டதற்கு அதிமுக அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஏனென்றால் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு தகுதிமிக்க பேராசிரியர்கள் பலர் இருந்தும், இருமுறை கே.ராமசாமி என்பவரை அதிமுக அரசு நியமித்ததே இந்தப் பல்கலைக்கழக நிர்வாகக் குளறுபடிகளுக்கு எல்லாம் காரணம் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

அங்கீகாரம் தொடர்பாக மட்டுமின்றி பல்கலைக்கழக நிர்வாகத்திலும் அதிமுக ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதற்குச் சான்றாக பணி நியமனங்கள், பணியிட மாறுதல்கள், உதவி பேராசிரியர்கள் நியமனக் குளறுபடிகள், பதிவாளர், டீன், டைரக்டர் போன்ற பதவிகளை நிரப்பாமல், தற்காலிகமாக பொறுப்பு அதிகாரிகளாகவே வைத்தது போன்ற நிர்வாக சீர்குலைவு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கீகாரமே நிறுத்தி வைக்கப்படும் தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகிவிட்டது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டு அந்தப் பல்கலைக்கழக ஊழியர்களும், விஞ்ஞானிகளும், மாணவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

ஆனால் முதல்வரும் கண்டு கொள்ளவில்லை. அதிமுக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சரும் கவலைப்படவில்லை. தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் நடைபெறும் முறைகேடுகள், வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் அங்கீகாரத்தை இரண்டு வருடங்கள் நிறுத்தி வைத்தது எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை உடனடியாகக் களைந்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை திரும்பப் பெற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடுகள், நிர்வாக குளறுபடிகள் போன்றவை குறித்து விசாரணை செய்ய சிறந்த கல்வியாளர்கள் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து அறிக்கை பெற்று, அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

விளையாட்டு

56 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

மேலும்