கரும்பு விவசாயிகளுக்கான நிலுவையை அரசு உடனடியாக பெற்றுத் தர வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இனிக்கும் கரும்பை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கை தமிழகத்தில் கசப்பாக மாறி விட்டது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான தொகையை சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் வழங்க மறுக்கின்றன. அதை வசூலித்துத் தர வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு என்ற போதிலும், இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்யும் கரும்புக்கான விலையை மத்திய அரசு நிர்ணயிக்கும். அத்துடன் மாநில அரசு அதன் பங்காக பரிந்துரை விலை நிர்ணயித்து, இறுதி கொள்முதல் விலையை அறிவிக்கும். மாநில அரசால் அறிவிக்கப்படும் விலையை சர்க்கரை ஆலைகள் வழங்குவது வழக்கம்.

ஆனால், கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கொள்முதல் விலை நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகங்கள் வழங்க மறுக்கின்றன. உழைத்தவனின் வியர்வை காயும் முன் அவனுக்குரிய ஊதியத்தை வழங்கிவிட வேண்டும் என்பது கரும்பு விவசாயிகளுக்கும் பொருந்தும். ஆனால், அவர்களுக்கு திட்டமிட்டு துரோகம் இழைக்கப்படுகிறது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் உணவுத்துறை இணை அமைச்சர் சி.ஆர். சவுத்ரி வெளியிட்ட புள்ளி விவரத்தில், விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை அதிகம் வைத்துள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.3046 கோடி நிலுவை வைத்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1589 கோடி நிலுவைத் தொகை வைத்திருக்கின்றன. இது இதுவரை இல்லாத அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

2013-14 ஆம் ஆண்டில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.273 கோடி நிலுவை வைத்திருந்தன. 2014-15 ஆம் ஆண்டில் இது ரூ.286 கோடி அதிகரித்து ரூ.559 கோடியாக உயர்ந்தது. 2015-16 ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.1030 கோடியை சர்க்கரை ஆலைகள் பாக்கி வைத்ததால் தான் நிலுவைத் தொகை இந்த அளவுக்கு உயர்ந்தன.

தமிழக அரசு நினைத்தால், இந்த நிலுவைத் தொகையை தமிழக அரசு ஒரு வாரத்தில் வசூலித்து விவசாயிகளுக்கு வழங்க முடியும். ஆனால், விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்காமல் ஏமாற்றி விட வேண்டும் என்று சர்க்கரை ஆலை நிர்வாகங்களும், சர்க்கரை ஆலை நிர்வாகங்களின் நலனை மட்டும் பாதுகாத்தால் போதுமானது என்று தமிழக அரசும் நினைப்பது தான் இன்றைய அவல நிலைக்கு காரணம் ஆகும்.

உலகச் சந்தையில் சர்க்கரை விலை குறைந்துவிட்டதால் தான் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க முடியவில்லை என்று சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் கூறுவதை ஏற்க முடியாது. உண்மையில் அனைத்து சர்க்கரை ஆலைகளும் நல்ல லாபத்தில் தான் இயங்குகின்றன. ஆனாலும், விவசாயிகளுக்கு மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட விலையை வழங்கக்கூடாது என்பதற்காகவே சர்க்கரை ஆலைகள் முழு விலையையும் வழங்காமல் ஒரு குறிப்பிட்ட தொகையை பாக்கி வைக்கின்றன.

உதாரணமாக, கடந்த 2015-16 ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையாக 2300 ரூபாயை மத்திய அரசு நிர்ணயித்தது. அத்துடன் மாநில அரசு பரிந்துரை விலையாக ரூ.550 சேர்த்து ரூ.2850 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலையை வழங்க மறுத்துவிட்ட சர்க்கரை ஆலைகள், மத்திய அரசு நிர்ணயித்த டன்னுக்கு ரூ.2300 என்ற விலையை மட்டுமே வழங்குவதால் தான் நிலுவைத்தொகை அதிகரித்துள்ளது.

2011 சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையில்,''கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக அரசு மற்றும் தனியார் அரசு ஆலைகள் கொள்முதல் விலையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலை அதிபர்கள் பணப் பட்டுவாடாவை நிலுவையில் வைக்க அனுமதிக்கப்பட மாட்டாது'' என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை என்பது தான் உண்மை. விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வசூலித்துத் தர வேண்டிய தமிழக ஆட்சியாளர்களின் கடமை ஆகும். இந்தக் கடமையிலிருந்து தமிழக ஆட்சியாளர்கள் தவறியதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, தமிழகத்தில் கரும்பு பயிரிடப்படும் நிலப் பரப்பு கிட்டத்தட்ட பாதியாக குறைந்திருக்கிறது. இது ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையில் கசப்பை நீக்கி இனிப்பை நிறைக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். அக்கடமையை நிறைவேற்றும் வகையில், சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க, தமிழக அரசு அறிவிக்கும் கரும்புக்கான பரிந்துரை விலை சட்டப்படி செல்லுபடியாகும் ஒன்றாக மாற்றப்பட வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்