உச்ச நீதிமன்றத் தடையால் இளைஞர்கள் எழுச்சி: 3 நாள்களில் 30 கிராமங்களில் ஜல்லிக்கட்டு

By கி.மகாராஜன்

இன்று அலங்காநல்லூர், சிராவயலில் குவிகின்றனர்



நீதிமன்றங்களின் கடும் நிபந்தனைகள், ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றால் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் மட்டும் நடைபெற்றுவந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, உச்ச நீதிமன்றம் விதித்த தடை காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்பு மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, திருச்சி, விருதுநகர், வேலூர், கரூர் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு விளையாட்டு தவறாமல் நடைபெற்று வந்தது.

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டத்தில் பொங்கல் மட்டுமின்றி கோயில் விழா, குல தெய்வ வழிபாடு, ஆடி மாத விழாக்களிலும் ஜல்லிக்கட்டு விளையாட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் என போன்றவை நடைபெறும். திண்டுக்கல்லில் தேவாலய விழாக்களிலும் பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெற்றுவந்தது. இவ்வாறு தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை 2006-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. பின்னர் உயர் நீதிமன்ற கிளை அமர்வு 18 நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது. இதையடுத்து சட்டச் சிக்கல் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக தமிழக அரசு 2009-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தை நிறைவேற்றியது.

35 ஆக குறைந்தது

அந்தச் சட்டத்தில், தொடர்ந்து 5 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்த கிராமங்களில்தான் இதை நடத்த அனுமதி வழங்க வேண்டும். சிறிய ஊர்களாக இருந்தால் ரூ.2 லட்சம், பெரிய ஊர்களாக இருந்தால் ரூ.5 லட்சம் முன்பணம் செலுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கடுமையான நிபந்தனைகள் சேர்க்கப்பட்டன.

இந்த நிபந்தனைகளால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் ஊர்களின் எண்ணிக்கை 300-ல் இருந்து 35 ஆகக் குறைந்தது.

பின்னர், டெபாசிட் கட்டுவதற்கு சிரமம் ஏற்பட்டதால் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதைக் கைவிட்டனர். இறுதியாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சிவகங்கை மாவட்டம் சிராவயல், திருச்சி சூரியூர் உள்ளிட்ட 13 இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இந்நிலையில், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் செல்லாது என 2014-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் நடத்த நிரந்தர தடை விதித்தது. காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கிய மத்திய அரசின் உத்தரவுக்கும் தடை விதித்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு எங்கும் நடைபெறவில்லை.

ஏமாற்றமே மிஞ்சியது

இந்தாண்டு கண்டிப்பாக நடைபெறும் என நம்பி இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து அரசியல், ஜாதி, மதங்களைக் கடந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தன்னார்வலர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இப்போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் முதல் முறையாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது.

இந்தாண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த பொதுமக்கள் முடிவு செய்ததுடன் களத்திலும் குதித்துள்ளனர். கடலூரில் தொடங்கிய தடையை மீறிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இப்போது பல மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது.

மதுரை மாவட்டம், அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த காளைகள் அழைத்துவரப்படும். இப்போது அதற்குப் பதிலாக அந்தந்த கிராமங்களிலேயே தரிசு நிலம், கண்மாய்களில் தற்காலிக வாடிவாசல் அமைத்து காளைகளை அவிழ்த்துவிட்டு பொதுமக்கள் ஜல்லிக்கட்டு நடத்திவருகின்றனர்.

இரு தினங்களுக்கு முன்பு மதுரை கரிசல்குளம், நேற்று முன்தினம் அவனியாபுரம், உசிலம்பட்டி, நேற்று அலங்காநல்லூர் அருகே பொதும்பு, பாலமேடு, முடக்கத்தான், ஆலங்குளம், தேனி கூடலூர், திண்டுக்கல் நல்லாம்பட்டி, பாறைப்பட்டி, சிவகங்கை பனங்காடி, ராமநாதபுரம் காஞ்சிரங்குடி, தத்தங்குடி, திருச்சி சூரியூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 3 நாட்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு மற்றும் எருதுகட்டும் விழாக்கள் நடத்தப்பட்டன. இதில் இளைஞர்கள், கிராமத்தினர் திரளாக பங்கேற்று காளைளை அடக்கினர்.

ஜல்லிக்கட்டுக்காக சங்கம் அமைத்து போராடி வருபவர்கள் யாரும் களத்துக்கு வராமலேயே போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு அஞ்சாமல் இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர். இன்று அலங்காநல்லூர், சிராவயலில் ஜல்லிக்கட்டு நடத்த இளைஞர்கள் தயராகி வருகின்றனர்.

மத்திய அரசின் தவறு:

ஜல்லிக்கட்டு வழக்குகளில் ஆஜராகிவரும் வழக்கறிஞர் எஸ்.காமேஸ்வரன் கூறுகையில், காட்சிப்படுத்தப்படாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கி, காட்சிப்படுத்தப்படும் பட்டியலில் 2011-ல் சேர்த்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதை உத்தரவாக பிறப்பிக்காமல் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 27-வது பிரிவில் திருத்தம் கொண்டு வந்திருக்க வேண்டும். விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் ராணுவத்தில் குதிரைகள், காவல்துறையில் நாய்களை பயன்படுத்தவும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த விலக்கு பட்டியலில் ஜல்லிக்கட்டில் காளைகளை பயன்படுத்துவதையும் சேர்த்து திருத்தம் கொண்டு வந்திருக்க வேண்டும். அப்படி திருத்தம் கொண்டு வந்திருந்தால், அதை உச்ச நீதிமன்றம் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டிருக்கும். ஜல்லிக்கட்டும் நடைபெற்றிருக்கும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்