இலங்கை அரசுடன் செய்து கொண்ட படகுகள் பறிமுதல் தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்க: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வேண்டுமெனில், இலங்கை அரசுடன் செய்து கொண்ட படகுகள் பறிமுதல் தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இலங்கையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 49 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள் இன்றோ அல்லது நாளையோ சொந்த ஊர் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை சிறைகளில் பல வாரங்களாக அடைக்கப்பட்டுக் கிடந்த இந்த மீனவர்களின் விடுதலை அவர்களின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளித்திருக்கும் என்பதில் எந்த ஐயமில்லை.

ஆனால், இந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் அனைத்து மீனவர்கள் குடும்பங்களுக்கும் ஏற்பட வேண்டும்; அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பது தான் பாமகவின் நோக்கமும், விருப்பமும், கோரிக்கையுமாகும்.

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த மே மாதம் 30ஆம் தேதி முதன்முறையாக தமிழக மீனவர்களில் மீன்பிடிக்கச் சென்ற போதே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அன்று தொடங்கி கடந்த 15 ஆம் தேதி வரை மொத்தம் 77 தமிழக மீனவர்களை இலங்கை படையினர் கைது செய்தனர். அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 102 மீன்பிடி விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு பல மாதங்களாக துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை ஊர்க்காவல்துறை, பருத்தித் துறை நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்ட 49 பேர் தவிர மீதமுள்ள மீனவர்கள் அடுத்த ஓரிரு நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. எனினும், தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகளை விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் முதல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரை கூறி வருகின்றனர். இப்போது பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள 102 படகுகளும் விடுவிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. மீனவர்களை விடுதலை செய்துவிட்டு அவர்களுக்கு சோறு போடும் படகுகளை பறிமுதல் செய்து வைப்பது, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து உயிருடன் கொல்வதற்கு சமமானதாகும்.

ஒரு விசைப்படகின் மூலம் 20 குடும்பங்கள் அதாவது 100 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். மீனவர்களுக்குச் சொந்தமான 102 படகுகளை பறிமுதல் செய்திருப்பதன் மூலம் 10,200 பேரின் வயிற்றில் இலங்கை அரசு அடித்திருக்கிறது. இரு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத் தக்கதாகும்.

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 5 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் மத்தியஅரசு வரும் 29ஆம் தேதி பேச்சு நடத்த உள்ளது. ஆனால், இதில் எதிலும் சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல் தமிழக அரசு தனித்து நிற்கிறது.

தமிழக மீனவர்கள் இலங்கை படையால் கைது செய்யப்பட்டாலோ, படகுகள் பறிமுதல் செய்யப்பட்டாலோ அவற்றை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதி விட்டால் கடமை முடிந்தது என்று முதல்வர் ஜெயலலிதா கருதுவது தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும்.

மீனவர்களின் படகுகளை மீட்கும் விஷயத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு நெருக்கடி தந்திருந்தால் இப்போது நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆனால், அதைச் செய்ய தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. உண்மையில் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதற்கு இலங்கையுடன் இந்திய அரசு 13ஆண்டுகளுக்கு முன் செய்து கொண்ட ஒப்பந்தம் தான் காரணமாகும்.

இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கும், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே 21.10.2003 அன்று டெல்லியில் நடைபெற்ற பேச்சுக்களுக்கு பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்,"இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களின் படகுகளை மட்டும் வழக்கு முடியும் வரை பறிமுதல் செய்து வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் வரை இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதை தடுக்க முடியாது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வேண்டுமெனில், இலங்கை அரசுடன் செய்து கொண்ட படகுகள் பறிமுதல் தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

மத்திய அரசுக்கும், மீனவர்களுக்கும் 29-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள பேச்சுக்களில் தமிழக அரசும் பங்கேற்று இக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

கருத்துப் பேழை

28 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்