காரைக்கால் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: அரசியல் கட்சிகளின் கள்ள மெளனம் ஏன்?

By செய்திப்பிரிவு

காரைக்காலில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து அரசியல் கட்சிகள் மெளனம் காப்பது ஏன்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்ட நிலையில், அதைவிட பலமடங்கு கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு தமிழ்நாட்டு இளம் பெண் ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதைக் கண்டித்து குரல் கொடுக்க வேண்டிய அரசியல் கட்சிகள் அமைதி காப்பதுடன், இப்பிரச்சினையை திசை திருப்ப முயல்வது மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காரைக்காலில் உள்ள மதன் என்ற நண்பரை பார்க்க கடந்த 24 ஆம் தேதி காரைக்கால் சென்றுள்ளார். அவருக்கு துணையாக அவரது தோழியும் சென்றிருக்கிறார். அங்கு இளம்பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவம் பெற அப்பெண்ணும், அவரது தோழரும் நண்பரின் வீட்டுக்குச் சென்றனர்.

அந்த நேரத்தில் அப்பெண்ணின் தோழி தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது. பின்னர் அந்த கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட அப்பெண்ணை, 7 பேர் கொண்ட இன்னொரு கும்பல் கடத்திச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. நன்னிலம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை கற்பனை செய்து பார்க்கக் கூட முடியாத கொடூரமாகும்.

இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. காரைக்கால் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நாஜீமின் ஆதரவுடன் செயல்பட்டுவரும் அப்துல் நாசர் தலைமையிலான கும்பலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஜெயகாந்தன் தலைமையிலான கும்பலும் தான் இக்கொடூரத்தை அரங்கேற்றியுள்ளன.

காரைக்காலுக்கு வரும் பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்வதையே இந்த கும்பல்கள் தொழிலாக கொண்டுள்ளன. இவர்களில் ஜெயகாந்தன் மீது 2 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன; அப்துல் நாசர் ஏற்கனவே பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

நன்னிலத்தைச் சேர்ந்த இளம்பெண்களை காரைக்காலுக்கு அழைத்துவந்த மதன் என்பவர் காரைக்கால் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளரின் தம்பி என்றும், இவர் தான் அந்த இரு பெண்களையும் காதல் நாடகமாடி அழைத்து வந்து, அதுபற்றி தமது நண்பர்களுக்குத் தெரிவித்து பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது. இவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் இந்த சம்பவத்தையே காவல்துறை உதவியுடன் மூடி மறைக்க சில அரசியல் தலைவர்கள் முயன்றுள்ளனர். முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ் நேரடியாக தலையிட்டு விசாரித்ததால் தான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அந்த பெண்ணின் புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் காரைக்காலில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக உலகெங்கும் உள்ள ஊடகங்கள் பத்திபத்தியாக செய்தி வெளியிட்டுள்ளன. கலாச்சார பெருமைக்கு பெயர் போன இந்தியா 'கூட்டுக் கற்பழிப்பின்' தலைநகராக மாறி வருவதாக உலக ஊடகங்கள் காறி உமிழ்கின்றன. ஆனால், தமிழகத்தின் முற்போக்கு சிந்தனையாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்பவர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காக்கின்றனர். ஏன் இந்த கள்ள மவுனம்?

மது அருந்திவிட்டு ரயிலில் பாய்ந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்ட போதும், ஆதிக்க சாதி வன்னியர்கள் தான் இதற்கு காரணம் என்று கொதித்து எழுந்து குற்றஞ்சாற்றியோரும், உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி பொய் அறிக்கை தாக்கல் செய்தோரும் இப்போது எங்கு போனார்கள்?

வன்னியர்கள் தவறு செய்யாதபோதும் அவர்களை சிலுவையில் அறைந்தவர்கள் இப்போது இஸ்லாமிய மற்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் தவறு செய்தது உறுதிசெய்யப்பட்ட பிறகும் வாய் திறக்க மறுப்பது ஏன்? தலித்துகள் பாதிக்கப்படாத போதே அவர்களுக்காக குரல் கொடுக்கும் போலி முற்போக்குவாதிகள் இப்போது முதலியார் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணுக்கு பெருங்கொடுமை இழைக்கப்பட்டிருக்கும் நிலையில் அமைதிகாப்பது ஏன்? இது எந்த வகையான முற்போக்கு வாதம்?

என்னைப் பொறுத்தவரை யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவு காட்ட வேண்டும்; யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்லும் இளம்பெண்களும் நிம்மதியாக நடமாட முடியாத நிலை காணப்படுகிறது.

காதல் நாடகமாடி இளம் பெண்களை கடத்திச் செல்வதும் தொடர்கிறது. இதையெல்லாம் ஒரு தொழிலாகவே செய்துவருவது தலித் மக்களை காப்பதாக கூறி ஏமாற்றிவரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் தான். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்திய போதெல்லாம் சாதி உணர்வுடன் பேசுவதாக கூறி என்னை விமர்சித்த போலி முற்போக்குவாதிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டிக்கவில்லை. அதன்விளைவு தான் ஒரு இளம்பெண்ணை இரு குழுக்களைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகும்.

எனவே, முற்போக்கு வாதம் பேசுபவர்கள் தங்களின் வேடங்களை கலைத்து விட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களை கண்டிக்க முன்வர வேண்டும்.

அதேபோல், காரைக்கால் பாலியல் வன்கொடுமையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு காப்பாற்ற முயன்ற அரசியல்வாதிகள் யார், யார்? என்பதை காவல்துறை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை மற்றும் நிதி உதவியை புதுவை அரசு வழங்க வேண்டும்" என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்