அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான மக்கள் நல்வாழ்வுத் துறை உயிர் பறிக்கும் துறையாகிவிட்டது: ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான மக்கள் நல்வாழ்வுத் துறை உயிர் பறிக்கும் துறையாகிவிட்டது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கொளத்தூர் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பணிகளை ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். மேலும், தொகுதி பொதுமக்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நேற்று கைத்தறித் துறையின் மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதேசமயம் கேரளாவில் பத்மநாபசாமி கோயில் அருகில் உள்ள கடைகளில் தமிழக அரசின் இலவச சேலைகளை விற்பனை செய்கிறார்கள். அது பற்றி அமைச்சரிடம் கேட்டால், 'எங்களுக்குப் புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம்' என்கிறார். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்த ஆட்சியில் கைத்தறித் துறையில் மட்டுமல்ல, பாலாக இருந்தாலும், அரிசியாக இருந்தாலும், குதிரை பேர விவகாரமாக இருந்தாலும், தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா விவகாரமாக இருந்தாலும், 'தகவல் வந்தால் நடவடிக்கை எடுப்போம்', என்கிறார்களே தவிர, முறையான நடவடிக்கைகள் எதையும் எடுப்பதில்லை. ஏனென்றால், இந்த அட்சி அவற்றைப் பற்றி கவலைப்படவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் வருமான வரித்துறையினரிடம் சிக்கிய விவகாரம், குட்கா விவகாரத்தில் 40 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததற்கான ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்த்து, சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர், உயர் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன். நேற்றைக்கு சட்டமன்றத்தில் இதுபற்றி பேசியபோது, சபாநாயகர் முழுமையாக அனுமதி தர மறுத்தாலும், ஓரளவுக்கு பேசி பதிவு செய்திருக்கிறேன்.

குட்கா விவகாரத்தை சட்டப்படி சந்திப்பேன் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். வருமான வரித்துறை நடத்திய சோதனையில், ஆர்.கே.நகர் தொகுதியில் 89 கோடி பணப் பட்டுவாடா நடத்திய ஆவணங்கள் கிடைத்திருப்பது குறித்து அவரது பதில் என்ன? அந்த செய்தி வெளியானபோது அவர் நீதிமன்றத்தை நாடினாரா? அல்லது என் மீது தவறான வதந்தி பரப்புகிறார்கள் என்று வழக்கு போட்டாரா? கிடையாது.

எப்போது அந்தச் செய்தி வெளியானதோ, அப்போதே வழக்கு போட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது வந்து சட்ட ரீதியாக சந்திப்பதாக சொல்கிறார். உள்ளபடியே அவர் குற்றவாளி இல்லை என்றால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆனால், எங்களைப் பொறுத்தவரையில் இது ஒரு கொலை குற்றத்துக்கு ஒப்பானது. ஏனெனில், குட்கா போதைப் பொருட்களை சாப்பிட்டால் உயிரே பறிபோகும் நிலை ஏற்படும். மக்கள் நல்வாழ்வுத்துறை என்பது மக்களின் உயிர்களைக் காக்கின்ற ஒரு துறை. ஆனால், இன்றைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அந்தத் துறை மக்களின் உயிர்களை எடுக்கின்ற துறையாக இருந்து கொண்டிருப்பது வேதனைப்பட வேண்டிய ஒன்று'' என்று ஸ்டாலின் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்