‘இலங்கை மலையகத் தமிழர்களிடம் காட்டும் பரிவை எங்களிடமும் காட்டுங்கள்’: பிரதமருக்கு கோரிக்கை விடுக்கும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள்

By கா.சு.வேலாயுதன்

இலங்கை சென்ற பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காகவும் பரிந்து பேசியுள்ளார். அவர்களின் நலன், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இந்திய அரசு உதவும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார். அதேபோல, நீலகிரி மலையில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களிடம் பரிவுகாட்ட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் இருந்து 1815-ல் பிரிட்டிஷாரால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள், அங்கு காபி, தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். தமிழக கிராமங்களில் வறட்சி, வறுமை, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த பழங்குடியின, தலித் மக்களே இவ்வாறு இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், இலங்கை தலைமன்னார் சென்றவர்களுக்கு, பல்வேறு சோதனைகள் காத்திருந்தன.

தலைமன்னாரிலிருந்து கண்டி சென்ற பலர், செல்லும் வழியில் வன விலங்குகள், நச்சுப் பாம்புகளால் உயிரிழந்தனர். கடும் குளிர், மழையிலும் மிகுந்த சிரமப்பட்டு, தேயிலை, காபி தோட்டங்களை உருவாக்கினர்.

இவர்களது குடும்பங்கள் பெருகிய நிலையில், ஒரு கட்டத்தில் இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் இவர்கள் மாறினர். இதனால் உள்நாட்டுக் கலவரங்கள், இன மோதல்கள் ஏற்பட்டன. பலரின் உயிர், உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அவர்கள் இலங்கையிலேயே நிரந்தரமாக வாழும் வகையில் குடியுரிமை வழங்கி, பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

ஆனால், அரசியல் காரணமாக 1964-ல் மாவோ-சாஸ்திரி, 1974-ல் இந்திரா-மாவோ ஆகியோர் மேற்கொண்ட ஒப்பந்தங்களால், 6 லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் இந்தியாவில் குடியேற்றப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் பிறந்து, வளர்ந்தவர்கள். இவர்கள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மறுவாழ்வுத் திட்டங்கள் என்ற பெயரில் குடியேற்றம் செய்யப்பட்டனர். எனினும், 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் நிம்மதியாக வாழ முடியவில்லை என்கின்றனர் நீலகிரி மாவட்டத்தில் வாழும் வம்சாவளித் தமிழர்கள்.

இதுகுறித்து, இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.செல்வராஜ் கூறியதாவது: சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்குச் சென்ற பலரின் வாரிசுகள் தமிழகத்தில் குடி அமர்த்தப்பட்டபோது, பலருக்கும் இங்குள்ள தட்பவெப்ப நிலை ஒத்துவர வில்லை. இதனால் பலர் இறந்தனர்.

பின்னர், இலங்கையைப் போன்ற தட்பவெப்ப நிலை கொண்ட, நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை மலைப் பகுதிகளுக்கு அவர்கள் குடியேறினர். மலையகத் தமிழர்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்கள் மூலம் நிலம், வேலை, வீடு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், உறுதியளித்தபடி உரிய வசதிகள் செய்துதரப்படவில்லை. அவர்கள் சாதாரண கீற்றுக் கொட்டகையில் தங்க வைக்கப்பட்டனர்.

தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் (டேன்டீ), தாயகம் திரும்பிய இந்திய வம்சாவளியினருக்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால், அதில் கூலிகளாக மட்டுமே மலையகத் தமிழகர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். மேலும், பலர் கொத்தடிமைகளைப்போல நடத்தப்பட்டனர்.

இதேபோல, மத்திய அரசின் உள்துறை செயலகத்தின் கீழ் இயங்கும் ரெப்கோ வங்கி, மலையகத் தமிழர்களுக்கு தொழிற் கடன், வேலைவாய்ப்பு வழங்குவதற் காகவே உருவாக்கப்பட்டது. அந்த வங்கி யும் முதலாளிகளுக்கு கடன் வழங்கியதே தவிர, தொழிலாளர்கள் மீது கவனம் செலுத்தவில்லை.

ஏறத்தாழ 40 வருடங்களாக காபி, தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்தவர்களை, குதிரை லாயம் போன்ற குடியிருப்புகளில் தங்கவைத்து, ஓய்வு பெற்ற பின்னர் அங்கிருந்து வெளியே அனுப்பும் நிலையே நீடிக்கிறது. மேலும், நிலப் பட்டாவும் தரவில்லை. இதனால், இவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.

தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள் சுமார் 20 லட்சம் பேர் தென்னிந்தி யாவில் வசிக்கின்றனர். தமிழகத்தில் 6 லட்சம் பேர் வரை உள்ளனர். குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கூடலூர், உதகை பகுதிகளில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் வசிக்கின்றனர். அவர்கள்தான், 3 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வெற்றியை நிர்ணயிப்பவர்களாகவும் உள்ளனர். எனினும், அன்றாட வாழ்க்கையை நடத்துவதே சிரமம் என்ற நிலையில்தான் அவர்கள் வாழ்கின்றனர்.

இந்த நிலையில், ஓராண்டுக்கு முன் இலங்கை சென்ற பிரதமர் மோடி, “இங்கு இலங்கைத் தமிழர்கள்தான் உள்ளனர் எனக் கருதினேன். இங்கு வந்து பார்த்த பின்னர்தான், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இருப்பதே தெரிந்தது. உங்களின் நலன்களை காக்க கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.

தற்போதும் இலங்கை சென்ற மோடி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, மலையகத் தமிழர்கள் 10 ஆயிரம் பேர் திரண்ட கூட்டத்தில் பேசியுள்ளார். “நான் டீக்கடையில்தான் வாழ்வைத் தொடங்கினேன். நீங்களும் தேயிலைக்குத்தான் வாழ்வையே ஒப்படைத்திருக்கிறீர்கள். உங்களின் சுக, துக்கங்களை நான் அறிவேன்” என்றெல்லாம் உருக்கமாகப் பேசியுள்ளார்.

அவர், இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட மலையகத் தமிழர்களின் நிலையையும் கருத்தில்கொள்ள வேண்டும். மலையகத் தமிழர்கள் பணியாற்றும் ரப்பர், தேயிலைத் தோட்டங்கள் நலிவடைந்து வருவதுடன், அவை மீண்டும் காடாக மாறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலிருந்து அரசு தேயிலைத் தோட்டக் கழகங்களை மீட்டு, அவை மீண்டும் சிறப்பாக நடக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தாயகம் திரும்பிய தமிழர்கள் மறுவாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்ட தேயிலைத் தோட்டக் கழகங்களின் நிலங்களை, தாயகம் திரும்பிய குடும்பங்களுக்கு பிரித்து அளிக்க வேண்டும். கூட்டுறவு அடிப்படையில் தேயிலைத் தோட்டங்கள் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமர், தமிழக முதல்வருக்கு பலமுறை கோரிக்கைகளை அனுப்பியுள்ளோம். எனினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்