தமிழர் பகுதிகளில் படைகளை விலக்க இலங்கை மறுப்பு: இந்திய நிலை என்ன? - ராமதாஸ் அறிக்கை

By செய்திப்பிரிவு

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள சிங்களப் படையினரைத் திரும்பப் பெற முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. இதனையடுத்து இந்தியாவின் நிலை என்ன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள சிங்களப் படையினரைத் திரும்பப் பெற முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. ஈழத் தமிழர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தும் நோக்கம் கொண்ட சிங்கள அரசின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்றப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையாக கருதப்படும் இப்படுகொலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்திய போதிலும், குறிப்பிடத்தக்க வகையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாநிலத்தில் இலங்கை இராணுவத்தினரை அதிக எண்ணிக்கையில் நிறுத்தி அங்குள்ள தமிழர்களை அச்சுறுத்தும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது. தமிழர்கள் நிம்மதியாக வாழும் வகையில் வட மாநிலத்திலிருந்து இலங்கை இராணுவம் திரும்பப்பெறப்பட வேண்டும் என கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியிருந்தார்.

இலங்கை வடக்கு மாகாண அரசின் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ள இலங்கை இராணுவத்தின் வட பிராந்தியத் தளபதி மகேஷ் சேனநாயக, ‘‘ வடக்கு மாகாணத்தில் தனிநாடு கோரிக்கை எழாமல் தடுப்பது தான் இராணுவத்தின் நோக்கம். வட மாநிலத்திலிருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டால், தமிழர்கள் தனி ஈழ கோரிக்கையை கையில் எடுத்து விடுவார்கள். எனவே, வர மாநிலத்திலிருந்து சிங்களப் படைகளை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை’’ என்று கூறியிருக்கிறார். ஈழத்தமிழர்களை தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாக வைத்திருக்கவே இலங்கை அரசு விரும்புகிறது, தமிழர்களுக்கு எந்தவித உரிமையையும் வழங்க சிங்கள அரசு தயாராக இல்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

இலங்கையில் அமைதி திரும்பி சுமூகமான சூழல் நிலவ வேண்டுமானால், அதற்காக மேற்கொள்ளப் பட வேண்டிய முதல் நடவடிக்கையே வடக்கு மாநிலத்திலிருந்து சிங்களப் படைகளை திரும்பப்பெறுவது தான். அப்போது தான் அங்குள்ள தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாநிலப் பகுதிகளில் 6 தமிழருக்கு ஒரு வீரர் என்ற விகிதத்தில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு ராணுவ வீரர் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளார். 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாலும், எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தினாலும் தமிழர்களால் நிம்மதியாக வாழ முடிவதில்லை. ஒரு வீட்டில் இருப்பவர்கள் அடுத்த வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றாலும், குடும்ப நிகழ்வுகளுக்காக ஒன்று கூட விரும்பினாலும் அதற்கு இராணுவத்தின் அனுமதி தேவை. மொத்தத்தில் ஈழத் தமிழர்கள் திறந்தவெளி இராணுவச் சிறைகளில் அடைக்கப்பட்டது போன்ற உணர்வில் தான் வாழ்கின்றனர். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இது உதவாது.

இலங்கை ஆட்சியாளர்கள் தமிழரை சுதந்திரமாக வாழ அனுமதிக்க மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதனால் தான் இனப்படுகொலைக்காக இலங்கையை தண்டிக்கவும், தமிழீழம் அமைப்பது குறித்து ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை பாமக வலியுறுத்தியது; இப்போதுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்தியாவை ஆளும் அரசுகள் தமிழர்களின் உணர்வுகளை புறக்கணித்து விட்டு, இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவதால் தான் ஈழத்தமிழர்களை அடக்கி, ஒடுக்கும் பணிகளில் சிங்கள அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணை நடத்தப்பட்டு, அது குறித்த அறிக்கை கடந்த ஆண்டு மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; வட மாநிலத்திலிருந்து படைகளை திரும்ப பெற வேண்டும் என்பது தான் மனித உரிமை ஆணையம் இலங்கைக்கு பிறப்பித்த ஆணையாகும். இதை இந்தியாவும் ஆதரித்தது. ஆனால், மனித உரிமை ஆணையத்தின் இந்த இரு உத்தரவுகளையுமே இலங்கை பின்பற்றவில்லை. இதன்மூலம் இந்தியாவையும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தையும் இலங்கை அவமதித்துவிட்டது. இந்த நிலையில் இந்தியா என்ன செய்யப்போகிறது என்பது தான் உலகத் தமிழர்களின் வினாவாகும்.

ஈழத்தமிழர்களுக்கு எந்த உரிமையையும் இலங்கை வழங்காது; எந்த பன்னாட்டு அமைப்பின் உத்தரவையும் இலங்கை மதிக்காது என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாற்று உறுதியாகிவிட்டது. ஈழத்தமிழருக்கு இலங்கை நீதி வழங்கும் என இனியும் நம்புவது முட்டாள்தனமாகவே இருக்கும். எனவே, ஜெனிவாவில் இன்று தொடங்கியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தில், இலங்கையின் செயல்பாடு குறித்து புகார் செய்வதுடன்,, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தில் இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானத்தை இந்தியா கொண்டு வர வேண்டும். அதுமட்டுமின்றி, தனித்தமிழீழம் அமைப்பது குறித்து ஐ.நா. மூலம் உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்