வாட் வரியை குறைக்காவிட்டால் திமுகவே சட்ட திருத்தத்தை கொண்டுவரும்: ஸ்டாலின் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெறவில்லை என்றால் வருகின்ற பட்ஜெட்டில் இந்த வரியை குறைப்பதற்கான திருத்தத்தை திமுக கொண்டுவரும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "பெட்ரோல், டீசல் விலையை இதுவரை மத்தியில் உள்ள அரசுகள் ஏற்றிக் கொண்டிருந்த நிலை மாறி இந்த முறை மாநிலத்தில் ஊழலில் திளைக்கும் அதிமுக பினாமி அரசே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருக்கிறது.

அதற்காக தமிழ்நாடு மதிப்புக்கூட்டுவரிச் சட்டத்தில் 3.3.2017 அன்று ஒரு "மக்கள் விரோத" திருத்தம் கொண்டு வந்து அராஜகமான பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வித்திட்டிருக்கிறது.

உலக சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்து விட்ட நிலையிலும் மத்தியில் உள்ள பா.ஜ.க. தலைமையிலான அரசு அதன் பயன்களை இதுவரை மக்களுக்கு அளிக்க முன்வரவில்லை. மாறாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒவ்வொரு முறையும் ஏற்றி, கலால் வரியையும் வசூலித்து தாங்க முடியாத பாரத்தை மக்களின் தலையில் தூக்கி வைக்கும் காரியத்தை தொடர்ந்து மத்திய அரசு செய்து வருகிறது.

அதே பாணியில் இப்போது அதிமுக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தின் விளைவாக பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரி 27 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும், டீசலுக்கான மதிப்புக் கூட்டுவரி 21.43 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 78 பைசாவும், டீசல் விலை ஒரு ரூபாய் 76 பைசாவும் உயர்ந்துள்ளது. விலைவாசி விண்ணைத் தொடும் அளவிற்கு விஷம் போல் ஏறும். அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் பயன்படுத்தும் பேருந்து கட்டணம் அதைவிட அதிகரிக்கும் ஆபத்து உருவாகியிருக்கிறது.

ஏற்கனவே நிதி நிர்வாகச் சீர்குலைவு காரணமாக மாநில அரசின் நிதி நிலைமை மோசமாகி, மாநில வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வும், அதனால் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வும் தமிழகத்தின் வளர்ச்சியை மேலும் பாதிப்பதோடு தனிநபரின் செலவுகளும் எல்லையில்லாமல் போய் விடும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பே இது போன்ற வரி உயர்வை அதிமுக அரசு அறிவித்து, ஒரு அரசு தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையின் புனிதத்தையே புதைகுழிக்கு அனுப்பியிருக்கிறது.

கருணாநிதி ஆட்சியிலிருந்த போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினாலும், மாநில அரசின் சார்பில் இரு முறை 3.57 சதவீதம் "விற்பனை வரியை" குறைத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் தாக்கம் மக்களைப் பாதிக்காத அளவுக்குப் பாதுகாத்தார். கழக அரசு எப்போதும் மக்கள் நலன் காக்கும் அரசு என்பதும், அதிமுக அரசு மக்கள் விரோத அரசாக செயல்படுகிறது என்பதும் மற்றொருமுறை இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவரது ஆட்சி திறனை மக்களின் நலன் கருதிக் கூட பின்பற்ற முடியாத அதிமுக அரசு, மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலையை அப்படியே மக்கள் தலையில் சுமத்துவதோடு, தன் பங்கிற்கு புதிதாக பெட்ரோலுக்கு 3.78 பைசாவும், டீசலுக்கு 1 ரூபாய் 76 பைசாவும் உயர்த்தி மக்களை திணறடித்துள்ளது.

ஊழல் செய்வதிலும், அரசு பணத்தில் அடித்த கொள்ளையை கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்துக் கோடி கோடியாகவும் தங்கமாகவும் கொடுத்துக் கொண்டாடுவதிலும் ஆர்வமாக இருக்கும் அதிமுக அரசு, அப்பாவி மக்களிடம் இப்படியொரு வரிஉயர்வை செய்து அநியாய, அக்கிரம கொள்ளையில் ஈடுபட்டிருப்பதற்கு மிகக் கடுமையான எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களை மோசமாகவும், மாநில வளர்ச்சியை ஒட்டுமொத்தமாகவும் பாதிக்கும் இந்த பெட்ரோல், டீசல் வரி உயர்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

அப்படித் திரும்பப் பெறவில்லை என்றால் வருகின்ற நிதிநிலை அறிக்கையில் இந்த வரியை குறைப்பதற்கான திருத்தத்தை திராவிட முன்னேற்றக் கழகமே சட்டமன்றத்தில் கொண்டு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்