அண்ணா பல்கலை.க்கு துணைவேந்தர் நியமிக்கப்படாதது கல்வி வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்: அன்புமணி

By செய்திப்பிரிவு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 10 மாதங்களுக்கும் மேல் துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பது கல்வி வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் செயல்படாத பினாமி அரசின் அலட்சியம் காரணமாக 2017-18 ஆம் ஆண்டிற்கான பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை வழக்கமான அட்டவணைப்படி நடைபெறுமா? என்ற ஐயம் எழுந்துள்ளது. பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டிய அண்ணா பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தர் நியமிக்கப்படாதது தான் அத்தனைக் குழப்பங்களுக்கும் காரணமாகும்.

இந்தியாவின் மிகப் பெரிய மாணவர் சேர்க்கை நடைமுறையாக கருதப்படுவது தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கைதான். அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுவது தான் இதன் சிறப்பு ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்குவது வழக்கம். இதற்காக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் மாணவர் சேர்க்கைக் குழு அமைக்கப்பட்டு, அதில் தொழில்நுட்பக்கல்வி இயக்குனர், அரசுத் தேர்வுத்துறை இயக்குனர், மருத்துவக்கல்வி இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். இக்குழு டிசம்பர் மாதத்தில் கூடி அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணையை தீர்மானித்து பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடுவது வழக்கமாகும்.

கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அட்டவணை 13.02.2016 அன்று வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் ஜூன் 24-ம் தேதி கலந்தாய்வு தொடங்கி ஜூலை மாதம் முடிவடைந்தது. அதனடிப்படையில் பார்த்தால் அடுத்த வாரம் பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறும் பணி தொடங்க வேண்டும். ஆனால், இப்போது தான் மாணவர் சேர்க்கைக்குழுவே அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தாமதத்திற்கு காரணம் அண்ணா பல்கலைக்கு துணைவேந்தர் இன்னும் நியமிக்கப்படாதது தான்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஓய்வுபெற்று 10 மாதங்கள் ஆகின்றன. தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகும் நிலையில் இது குறித்து அவரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. தேசிய அளவில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 8-வது இடத்திலும், ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 13-வது இடத்திலும் உள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 10 மாதங்களுக்கும் மேல் துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பது கல்வி வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்.

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக தமிழகத்தில் உள்ள 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளை ஒருங்கிணைத்து, 2 லட்சம் மாணவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பெற்று கலந்தாய்வு நடத்துவது எளிதான விஷயமல்ல. அதற்கு விரிவான திட்டமிடல் தேவைப்படும் என்பதால் தான் மாணவர் சேர்க்கைக் குழு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் அமைக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்படுகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நடப்பாண்டில் துணை வேந்தர் இல்லாத நிலையில், அப்பொறுப்பை தற்காலிகமாக கவனித்து வரும் உயர் கல்வித்துறை செயலர், தொழில்நுட்பக்கல்வி இயக்குனர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோரில் ஒருவர் இதற்கான முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாதது அலட்சியத்தையே காட்டுகிறது. சசிகலாவை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என்பதற்காக போயஸ் தோட்டத்திற்கு படையெடுத்துச் சென்ற துணைவேந்தர்களைக் கொண்ட தமிழகத்தின் உயர்கல்வி கட்டமைப்பு, மாணவர்களின் தேவையை உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயல்படும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தை தான் தரும் போலிருக்கிறது.

வழக்கமாக +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மே மாதத் தொடக்கத்தில் தான் அறிவிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு +2 முடிவுகள் மே மாதம் 12-ம் தேதி வெளியாகும் என்று பிப்ரவரி 24-ம் தேதியே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துவிட்டார். அவ்வாறு இருக்கும் போது மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அட்டவணையை முன்கூட்டியே வெளியிட்டிருக்கலாம்.

ஆனால், அவ்வாறு செய்யத் தவறிய நிலையில், அனைத்து ஏற்பாடுகளையும் இதற்கு மேல் செய்தாலும் கூட அடுத்த வாரத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெற முடியுமா? என்பது தெரியவில்லை. துணைவேந்தரை நியமிக்காமல் அரசு செய்த தவறுக்கும், மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடுகளை செய்யாமல் பல்கலைக்கழகம் செய்த தவறுக்கும் மாணவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுமுடிவடைந்து விட்ட நிலையில், இனியும் தாமதிக்காமல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும். 10 மாதங்களுக்கும் மேலாக காலியாக கிடக்கும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்