7 அமைச்சர்களை குற்றத்தில் ஈடுபட வைத்தார் தினகரன்: கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

7 அமைச்சர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் அளவுக்கு டிடிவி தினகரன் கொண்டு சென்றுவிட்டதாக கே.பி.முனுசாமி குற்றம்சாட்டினார்.

அதிமுக புரட்சித்தலைவி அம்மா சார்பில் இன்று சென்னை க்ரீன்வேஸ் சாலையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்தது தொடர்பான விளக்கத்தையும், இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் செய்தியாளர்களிடம் கே.பி.முனுசாமி கூறியதாவது:

''ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் மதுசூதனனின் உறுதியான வெற்றி என்பது தற்போது தள்ளிப்போய் இருக்கிறது. எனவே, ஆர்.கே.நகரில், இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும், மதுசூதனன் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், கழகத்தின் மீது கீழ்த்தரமான கருத்தை சொல்லியிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. அவர் உண்மைக்கு மாறான தகவலை சொல்லியிருப்பதை கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜனநாயக முறைப்படி, தேர்தல் ஆணைய சட்டதிட்டங்களுக்குட்பட்டே ஓ.பன்னீர்செல்வமும், மதுசூதனனும் பிரச்சாரம் செய்தனர்.

தினகரன் ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.4 ஆயிரம் பணம் கொடுத்தது நாடறிந்த உண்மை. அதே நேரத்தில், ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில், நாங்கள் பணம் கொடுத்திருக்கிறோம் என்று பொய் சொல்கிறார்.

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாகவும், தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் மக்கள் செல்வாக்குள்ளவர் ஓ. பன்னீர்செல்வம். அந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற ஆசை கொண்ட ஸ்டாலின், தனது கட்சி 2-ம் இடம், 4-வது இடத்துக்கு சென்றுவிடும் என்ற அச்சத்தில் வீண்பழி சுமத்தியிருக்கிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா செய்த திமுகவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் பல லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திமுகவினர் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை வாக்காளர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அதை மறைக்கப் பார்க்கிறார் ஸ்டாலின்.

தினகரனைப் பொறுத்தவரையில், ஜனநாயகத்தையே குழிதோண்டி புதைத்துவிட்டு, எப்படியாவது வெற்றிபெற்று, முதல்வராக வரவேண்டும். தனது குடும்பம் நிம்மதியாக இருக்கவேண்டும். தனது குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும் என்று தேர்தலில் போட்டியிடுகிறார்.

தமிழக மக்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டிருக்கிற ஒரே தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டியிருக்கிறார். தன்னை பொதுச்செயலாளராக ஆக்குவதாக சசிகலா கூறியதாக தினகரன் பொய் சொல்கிறார். தினகரனைத்தான் ஆக்க வேண்டும் என்று சொல்வது உண்மையென்றால், முதல்வராக ஆவதற்கும், பொதுச் செயலாளராக ஆவதற்கும் சசிகலா ஏன் முயற்சித்தார்?

ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணப் பட்டுவாடா செய்த குற்றவாளியான தினகரன், தன்னை சுற்றியுள்ளவர்களையும் குற்றத்தில் ஈடுபட வைத்து, தற்போது, 7 அமைச்சர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்றுவிட்டார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடைபெற்றிருந்தால், அவர்களது அரசியல் பயணம் முடிந்திருக்கும். தேர்தல் முடிவுக்குப் பின்னர், மீண்டும் புரட்சித்தலைவிவின் இயக்கம், ஒரே இயக்கமாக மாறியிருக்கும்.

எனவே, மீண்டும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும்போது, சசிகலா குடும்பம் நிச்சயம் வெளியேற்றப்படும். ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பேற்று, அவர்களது தலைமையில் மக்கள் விரும்பும் நல்லாட்சி அமையும்.

தினகரன் போன்ற சமூக விரோத சக்திகள் எவ்வளவு பெரிய குற்றத்தை செய்துவிட்டு பொய் சொல்கிறார்கள். இவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் எப்படி ஆட்சி நடத்துவார்கள்? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்

டாக்டர் பாலாஜி ரூ.5 லட்சம் வாங்கியது உண்மை என்று சொல்லியிருக்கிறார் என்றால், வருமானவரி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தில் இருந்த ரூ.89 கோடியும் உண்மை தானே. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.11 கோடியை பிரித்ததும் உண்மைதானே.

ரூ.5 லட்சம் வாங்கியதாக டாக்டர் பாலாஜியே ஒப்புக்கொண்டுள்ளார். இவர் வாங்கியது உண்மைதான் என்றால், எல்லாவிதமான ஆவணங்களும் உண்மைதான். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது நிரூபணமாகியுள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதியில் பணத்தை பட்டுவாடா செய்கின்ற போது, காவல் துறையினர், இரண்டு பக்கமாக நின்று கொண்டு, பாதுகாப்பு என்ற போர்வையில் பணப் பட்டுவாடா செய்ய உதவியாக இருந்துள்ளனர். காவல்துறை, ஏவல்துறையாக மாறியிருப்பது உண்மை.

தினகரன் ரூ.89 கோடியை வாக்காளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் என்று கொடுத்தது மட்டுமல்லாமல், எங்களுடைய கட்சிக்காரர்களுக்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பேரம் பேசியுள்ளனர். அவர்களைத் தேர்தல் வேலை செய்யவிடாமல் பேரம் பேசியுள்ளார். இதுவரை மொத்தம் ரூ.150 கோடி வரை செலவு செய்துள்ளார். இவர்கள் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை செய்ய முடியாமல் அவமானப்பட்டிருக்கிறார்கள். மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரையை மக்கள் விரட்டியடித்துள்ளார்கள்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த ஆதாரங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றும் அளவுக்கு, இந்தியாவிலேயே எந்த வேட்பாளரும் செய்யாத காரியத்தை தினகரன் செய்திருக்கிறார். ஒரு முதல்வரே பணம் கொடுத்தார் என்று வருமானவரி பறிமுதல் செய்த ஆவணத்தில் இருப்பது, தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.

ஒரு முதல்வர் வாக்குக்கு பணம் கொடுத்தார் என்ற ஆவணம் வெளியாகி இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கீழ்த்தரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைமையில் செயல்பட்ட எடப்பாடி கே. பழனிசாமி, இன்று தினகரனின் தவறான வழிகாட்டுதலின் பேரில் தகுதியில்லாத அணியில் சேர்ந்து தகுதியை இழந்திருக்கிறார். ஒரு கெட்ட தலைவராக தினகரன் உருவாகி வருகிறார் என்பதற்கு ஆர்.கே.நகர் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்த நிகழ்வே சான்றாகும்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, சம்பவ இடத்திலேயே இல்லாத ஓ. பன்னீர்செல்வத்தின் மகன், சகோதரர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் மக்கள் செல்வாக்குமிக்க அமைதியான, நேர்மையான தலைவர். அவர்களின் வழிகாட்டுதலில் பணபலம், படைபலத்துக்கு மத்தியில், எங்களது தொண்டர்கள் வெற்றிபெறக்கூடிய தொண்டர்களாக மாறியுள்ளார்கள்.

பணப் பட்டுவாடா செய்த வேட்பாளர் தினகரனை, தேர்தல் ஆணையம் சட்ட திட்டத்திற்குப்பட்டு தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கை நாட்டுக்கே முன்னுதாரணமாக இருக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது. எனவே, மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் அறிவுப்பூர்வமாக ஆய்வு செய்து, தவறுகளை தடுப்பதற்கான புதிய சட்டத் திட்டங்களை கொண்டு வரவேண்டும். எப்படியெல்லாம் தவறுகள் நடந்துள்ளன என்பதை கண்டறிந்து, அவற்றை களைந்த பின்னரே தேர்தல் ஆணையம் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும்.

மீண்டும் நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் தேர்தலில், ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வகையில், மதுசூதனனை மக்கள் வெற்றிபெற வைப்பார்கள்'' என்று கே.பி.முனுசாமி கூறினார்.







VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

8 mins ago

சினிமா

16 mins ago

தமிழகம்

27 mins ago

இந்தியா

20 mins ago

விளையாட்டு

36 mins ago

வாழ்வியல்

45 mins ago

ஓடிடி களம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்