பதவி பயத்தை விடுத்து மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துக: ஓபிஎஸ்-ஸுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி கவலைப்படாமல் மாநிலத்தில் நிலவும் மக்கள் பிரச்சினைகள், அண்டை மாநிலங்களால் தமிழகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள், மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசு திட்டங்கள், உதவிகள் போன்றவற்றில் தன் முழுக்கவனத்தை செலுத்த வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், "பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டியும், ஏற்கனவே இருக்கின்ற தடுப்பணைகளின் உயரத்தைக் கூட்டியும் சீமாந்திர மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளார்கள்.

விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்திற்கும் பேராபத்து ஏற்படுத்தி விட்டதாக கவலையடைந்துள்ளார்கள். சீமாந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியிலேயே இது போன்று தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிராக தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளதை தமிழக அரசும் கண்டு கொள்ளவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

1892- ஆம் ஆண்டு "சென்னை-மைசூர் ஒப்பந்தத்தில்" உள்ள அட்டவணை "A"-யில் குறிப்பிட்டுள்ளவாறு "பல மாநிலங்களுக்கு இடையில் பாயும் 15 முக்கிய நதிகளில் பாலாறும் ஒன்று. இந்த ஒப்பந்தப்படி பாலாற்று நீரை தேக்கவோ, அல்லது திருப்பவோ புதிய அணை, தடுப்பணை போன்றவற்றை ஆந்திர மாநில அரசு கட்டக்கூடாது என்பது தெளிவாக இருக்கிறது.

ஆனால் இதை சீமாந்திர மாநில அரசு சர்வ சாதாரணமாக மீறி, புதிய தடுப்பணைகளை கட்டி, உயரத்தை அதிகரிப்பதை அதிமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. சென்ற ஜூலை மாதம் இங்கு புதிய தடுப்பணைகள் கட்டும் பணி துவங்கப்பட்ட போது அதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தார்கள். தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த கனக நாச்சியம்மன் கோயில் அர்ச்சகரை அம்மாநில அறநிலையத்துறை அதிகாரிகள் விரட்டி அடித்தார்கள். இதையெல்லாம் கண்டித்து திமுக சார்பில் நான் தலைமை தாங்கி 19.7.2016 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தினேன். அந்த ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்டவுடன் அவசர அவசரமாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பாலாறு வழக்கில் ஒரு மனுவை தாக்கல் செய்து "புதிய தடுப்பணைகள் கட்டவோ, இருக்கின்ற தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கவோ சீமாந்திர மாநில அரசுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று ஒரு மனுவை மட்டும் தாக்கல் செய்து விட்டு இன்று வரை எந்த தடையுத்தரவும் பெறாமல் அதிமுக அரசு அமைதி காக்கிறது.

ஏற்கனவே கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டிக்கு 24.7.2016 அன்று கடிதம் எழுதியதோடு மட்டுமின்றி, என்னையும் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த பொன்முடியையும் 5.8.2006 அன்று ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்.

அதன்படி நாங்கள் அங்கு சென்று முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியை சந்தித்து புதிய தடுப்பணைகள் கட்டுவதால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை எடுத்துரைத்தோம். அதன் விளைவாக அவரும், "தமிழக நலனை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்" என்று அன்று எங்களிடம் உறுதியளித்தார்.

அதுமட்டுமின்றி உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின் படி தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய தடுப்பணைகள் கட்டுவதை தடுத்தார்.

ஆனாலும் 18.7.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் கோரிய தடையைப் பெறுவதற்கு இதுவரை அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றி எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டமன்றத்தில் பிரச்சினை எழுப்பிய போது பதிலளித்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வரும் வரை அவர்கள் தடுப்பணை கட்ட முடியாது" என்று பதிலளித்தார்.

ஆனால் நடைபெறும் நிகழ்வுகள் அவர் அளித்த பதிலுக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. சீமாந்திர மாநில அரசு தொடர்ந்து புதிய தடுப்பணை கட்டும் முயற்சிகளையும், ஏற்கனவே இருக்கின்ற தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்தும் வருகிறது.

பாலாறு தண்ணீர் தடுக்கப்படுவதால் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மட்டுமின்றி, கல்பாக்கம் அணு மின் நிலையமும் பாதிக்கப்படுகிறது. ஏறக்குறைய 4.50 லட்சம் ஏக்கரில் உள்ள விவசாயத்திற்கான நீர் ஆதாரம், குடிநீர் ஆதாரம் எல்லாம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக நலன்களை பாதுகாக்க அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதோடு அக்கறையும் காட்டவில்லை.

அதற்கு பதிலாக 'முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கி விட்டு, தான் முதலமைச்சராவது எப்படி என ஆட்சிக்கு வரத் துடிக்கும் அதிமுக தலைமைக்கும்', 'அதிமுக தலைமைக்கு விருப்பத்திற்கு மாறாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையின் கீழ் அதிகாரிகளும், ஆலோசகர்களும் செயல்பட முடியாத சூழ்நிலையும்' இன்றைக்கு தமிழக அரசு நிர்வாக இயந்திரத்தை நிலைகுலைய வைத்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் திடீரென்று பதவியிலிருந்து விலகியிருப்பது முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சிக்கும், அவர் சார்ந்திருக்கும் கட்சி தலைமைக்கும் ஏற்பட்டுள்ள பனிப்போரின் துவக்கமாகவே தெரிகிறது.

இப்படியொரு நிலையற்ற ஆட்சியில் பாலாறில் புதிய தடுப்பணைகள், சர்க்கரை மான்யம் ரத்து செய்யப்படும் ஆபத்து, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாமல் போனது, 'நீட் தேர்வு' சட்ட விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் குழப்பம், மெரினா புரட்சியான மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை காவல்துறை அதிகாரிகளே சீர்குலைத்த காட்சிகள் எல்லாம் ஒவ்வொன்றாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஆகவே முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி கவலைப்படாமல் மாநிலத்தில் நிலவும் மக்கள் பிரச்சினைகள், அண்டை மாநிலங்களால் தமிழகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள், மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசு திட்டங்கள், உதவிகள் போன்றவற்றில் தன் முழுக்கவனத்தை செலுத்தி, தமிழக நலனைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அரசு நிர்வாகம் தன் உத்தரவுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்