ஜெயலலிதா கைது: முதல் முறையாக திமுக தலைவர் கருணாநிதி கருத்து

By செய்திப்பிரிவு

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டு, ஜெயலலிதா கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து திமுக தலைவர் கருணாநிதி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை:

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி தாங்கள் எதுவுமே கூறவில்லையே?

இந்தத் தீர்ப்பு பற்றி நான் கூறுவதை விட வார இதழ் ஒன்று வெளியிட்ட 'தீர்ப்பு தரும் பாடம்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட தலையங்கத்தில் சில பகுதிகளை மட்டும் குறிப்பிடுகிறேன். அது வருமாறு:

'இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு! நீதி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது; நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில், 'நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம், சொத்துக்கள் பறிமுதல்' என்ற பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தின் தீர்ப்பு, இந்திய அரசியல் வரலாற்றில் மிக மிக முக்கியமானது.

நீதிமன்றத் தீர்ப்பால் பதவி பறிக்கப்பட்டுள்ள 'முதல் முதலமைச்சர்' ஜெயலலிதா தான்! மாதம் ஒரு ரூபாய் வீதம் ஒருவர், 66 கோடி ரூபாய் எப்படிச் சம்பாதித்தார்? என்பதே ஜெயலலிதா மீதான இந்த வழக்கின் எளிய தர்க்கம்.

சாட்சிகள் மிகத் தெளிவாக உள்ள இதுபோன்ற வழக்கைக் கூட, ஒருவர் 17 ஆண்டுகளாக இழுத்தடிக்க முடியும் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. செயற்கையாக உண்டாக்கப்பட்ட இந்தக் கால தாமதம், 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற பழமொழிக்கு ஆகச் சிறந்த உதாரணம்!

சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடித்ததன் மூலம், ஜெயலலிதா தனக்கான அதிகபட்சத் தண்டனையை தானே வலியப் பெற்றிருக்கிறார். தீர்ப்பு வந்த நாளில், மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் தொற்றியது; பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன; கடைகள் இழுத்து மூடப்பட்டன. ஒரு நெருக்கடி நிலைக்கான பதற்றத்துடன் இருந்தது மாநிலம். இத்தகைய சூழல் ஏற்படும் என்பதைக் கணித்து, 'கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு எந்தத் தொந்தரவும் அளிக்கக் கூடாது' என்ற அமைதிப்படுத்தும் அறிக்கை கூட ஜெயலலிதா தரப்பில் இருந்து வெளிவரவில்லை. காவல் துறையினரோ, ஆளும் கட்சியினரின் வன்முறைகளை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்'. இதுவே அந்தத் தலையங்கம்.

முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் வேறு ஏதாவது உண்டா?

உச்ச நீதிமன்றம் பல வழக்குகளை வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவங்கள் உண்டு. ஏன், நான் ஆட்சிப் பொறுப்பில் முதலமைச்சராக இருந்தபோதே என் மகன் மு.க. அழகிரி மீதான வழக்கு, சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மீதான வழக்குகளை உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு மாற்றியது.

அண்மைக் காலத்திலேகூட அமித்ஷா பற்றிய வழக்குகளை குஜராத் மாநிலத்திலிருந்து மராட்டிய மாநிலத்திற்கு உச்ச நீதிமன்றம்தான் மாற்றியது. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியதுகூட, 2003ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் பாரபட்சமற்ற நியாயமான தீர்ப்புக் கிடைக்காது என்ற நிலையில் அன்பழகன் விடுத்த வேண்டுகோளின்படி, உச்ச நீதிமன்றமே நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வழக்கினை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியது. இந்த விவரங்களை எல்லாம் 'தி இந்து' நாளேடே வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், அவர் ஒரு பெண் என்றும், தனது வயது, உடல் உபாதைகள் ஆகியவைகளைத் தெரிவித்தும் ஜாமீன் கோரியபோது, கர்நாடக உயர் நீதிமன்றம் தாமதம் செய்ததாகச் சொல்லப்படுவதைப் பற்றி?

'தி இந்து' ஆங்கில நாளிதழில் சஞ்சய் ஹெக்டே என்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர், 'அதிகாரம் படைத்தோரின் பொறுமையின்மையால் ஏற்படும் ஆபத்துகள்' என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில், 'இப்போதுள்ள சூழலில் ஜெயலலிதா பெண் என்பதும், அவர் வயது, அவருக்கு இருக்கும் உபாதைகள் ஆகியவை அவருக்குச் சாதகமானவை தான் என்றாலும், மேல் முறையீட்டு நீதிமன்றம் 1,136 பக்கங்கள் கொண்ட விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது அவசரப்பட்டு உடனடியாக எந்த முடிவும் மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லை.

பொது வாழ்க்கையில் உள்ள தலைவர்களும், அவர்களுடைய வழக்கறிஞர்களும் மிகை நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். மருத்துவர்களைப் போல வழக்கறிஞர்கள் எடுத்த எடுப்பிலேயே தீமை நேர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நல்ல வருமானம் கிடைக்கும் என்பதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ எளிதில் நிறைவேறாத கோரிக்கைகளுக்காக அவசரப்பட்டு நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்யக் கூடாது. பொது வாழ்க்கையில் உள்ள தலைவர்கள் அவர்களுடைய முக்கியத்துவமே, அவர்களுக்கு எதிராகப் போய் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் பொது வாழ்க்கையில் உள்ள தலைவர்கள் தங்களுடைய தொண்டர்கள் வெறி கொண்டு அலையாமல் இருக்கத்தக்க அறிவுரை வழங்க வேண்டும். சட்டம், ஒழுங்கு நிலை சீர்கெடுமானால் மேல்முறையீட்டு விசாரணை மேலும் ஒத்திவைக்கப் படலாம். ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் எழுப்பும் கூச்சல் ஜெயலலிதாவுக்கு எந்த வகையிலும் உதவிடாது. அவருடைய ஆதரவாளர்கள் இப்போது தான் அடக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மாறாக ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு கூச்சல் போட்டு ஒப்பாரி வைக்கக்கூடாது. ஊழல் வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் தனது மேல் முறையீட்டு மனுவை உடனடியாக எடுத்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று நீதிமன்றத்திற்குக் கட்டளையிட முடியாது. பிரதமர் முதல் சாதாரண போலீஸ்காரர் வரை - செருப்பு தைக்கும் தொழிலாளி முதல் சக்கரவர்த்தி வரை சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்தாலும், சட்டம் என்பது எப்போதும் உங்களை விட உயர்ந்தது என்பதை உணர வேண்டும்' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்தக் கருத்துகள் என்னுடையதல்ல; உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே என்பவர் எழுதி, 'தி இந்து' நாளிதழ் வெளியிட்ட கட்டுரையில் உள்ளவை.

ஜெயலலிதா மீதான 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கில், சொத்துக்களை எல்லாம் அதிக அளவுக்கு மதிப்பிட்டதாக ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்களே?

'பிரன்ட் லைன்' இதழில், டி.எஸ். சுப்பிரமணியன் எழுதிய ஒரு கட்டுரையிலேயே இது பற்றிக் கூறும்போது, 'தீய நோக்கம் என்று யாரும் குறை சொல்லாமல் இருந்திடும் வகையில் புலனாய்வு செய்யும் அதிகாரிகள் ஜெயலலிதா மற்றும் குற்றம்சாட்டப்பட்டோரின் சொத்துக்களை மதிப்பிடும்போது, மிகையாக மதிப்பிட்டு விடக் கூடாது என்று தி.மு.கழக அரசு தெளிவாக அறிவுறுத்தியிருந்தது. இதுதான் வழக்கை வலிமையாக்கியிருக்கிறது' என்று தெரிவித்திருப்பது உண்மையைத் தெளிவாக்கும்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்ட பிறகு அ.தி.மு.க.வினர் ஈடுபட்டு வரும் வன்முறை நடவடிக்கைகளால் ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை அந்தக் கட்சியின் தலைமையிட மிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கருத்துத் தெரிவித்திருக்கிறாரே?

உண்மையில் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துத்தான் அது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கைச் சீரழிக்கும் வண்ணமும், வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட அ.தி.மு.க.வைத் தடை செய்யவும் தயங்கக் கூடாது என்றும் ஆளுநருக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

13-5-2013 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா, "பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச் சொத்துக் களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கைச் சீரழிக்கும் வண்ணமும், வன்முறைச் செயல்களில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அந்தக் கட்சியைத் தடை செய்ய இந்த அரசு தயங்காது, நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களைத் தூண்டுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்போர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்ததை மனதிலே கொண்டுதான் ராமதாஸ் தற்போது அதனை நினைவுபடுத்தியிருக்கிறார்.

29-4-2013 அன்று தமிழகச் சட்டப்பேரவையிலே பேசும்போது கூட ஜெயலலிதா, "சட்டம், ஒழுங்கு பராமரிப்பிற்கு ஊறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்தவிதக் கருணையும் இன்றிச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வன்முறையில் ஈடுபடுவோர் மீதும், பொது அமைதிக்கு ஊறு விளைவிப்போர் மீதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் இந்த அரசு தயங்காது' என்று பேசியதையும் நினைவூட்டிட விரும்புகிறேன்.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் நடக்கும்போது, தி.மு.க உறுப்பினர்கள் தாக்கப்பட்டது குறித்து?

திட்டமிட்டு சென்னை மாநகராட்சியில் இந்தத் தாக்குதல் நடந்ததாக ஏடுகள் தெரிவிக்கின்றன. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகத் திறம்படப் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துருவே இந்தச் சம்பவம் பற்றிக்கூறும்போது, "அது தலைக்குனிவை ஏற்படுத்தக் கூடியது" என்று தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்