ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: சாட்சிகளின் பட்டியல் எங்கே? நீதிபதி கேள்வி

By இரா.வினோத்

தமிழக‌ முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவின் மீது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது,‘சாட்சிகளின் பட்டியல் எங்கே’ என‌ நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கேள்வி எழுப்பினார். மெடோ அக்ரோ நிறுவனம் சாட்சிகளின் பட்டியலை சமர்ப்பிக்காததால், அம்மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை வருகிற 15-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ஜெயலலிதா,அவரது தோழி சசிகலா,வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் மணி சங்கரும், அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங், திமுக பொதுசெயலாளர் அன்பழகனின் சார்பாக தர்மபுரி எம்.பி.யும், வழக்கறிஞருமான தாமரை செல்வன் மற்றும் அக்ரோ நிறுவனத்தின் சார்பாக வழக்கறிஞர் தியாகராஜன் ஆகியோர் ஆஜரானார்கள்.

இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட‌ நால்வரும் ஆஜராகவில்லை. எனவே குற்றவியல் நடைமுறைச்சட்டம் 317-ம் பிரிவின்படி குற்றம் சாட்டப் பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்குகோரும் மனுவை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் மணிசங்கர் தாக்கல் செய்தார். அதனை அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆட்சேபிக்காததால், நீதிபதி டி'குன்ஹா அம்மனுக்களை ஏற்றுக்கொண்டார்.

மெடோ அக்ரோவின் மனு மீது விசாரணை

இதனைத் தொடர்ந்து கடந்த 31-ம் தேதி மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சண்முகம் தாக்கல் செய்த ம‌னு மீதான விசாரணை தொடங்கியது. அவர் சார்பாக வழக்கறிஞர் தியாகராஜன் ஆஜராகி வாதிட்டார். அவர் பேசுகையில்,''ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் முதல்கட்ட விசாரணையின் போது, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பல்வேறு தனியார் நிறுவனங்களை ஜெயலலிதாவுக்கு சொந்தமான நிறுவனம் என தவறாக இவ்வழக்கில் இணைத்தனர். இந்த வரிசையில் எங்களுடைய மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்தையும் இவ்வழக்கில் இணைத்து, நிறுவனத்தை 1997-ம் ஆண்டு ஜப்தி செய்தனர்.

மெடோ அக்ரோ நிறுவனம் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான நிறுவனம் அல்ல. அவர்கள் இந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக மட்டுமே செயல்பட்டனர். ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார் இந்நிறுவனம், அவர்களுக்கு சொந்தமான நிறுவனம் என இவ்வழக்கில் பதிவு செய்துள்ளனர்.

இதனை எதிர்த்து 1999-ம் ஆண்டு மெடோ அக்ரோ நிறுவனத்தின் சார்பாக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு (வழக்கு எண் 37/99) செய்தோம். அப்போது,'இந்நிறுவனத்தில் பலர் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவர் வழக்கில் சிக்கினால், அந்த நிறுவனத்தையே ஜப்தி செய்வது எவ்வகையில் நியாயம்?' என கேள்வி எழுப்பினோம். அந்த வழக்கு சென்னை நீதிமன்றத்தில் இன்னும் விசாரணையில் இருக்கிறது.

எங்களுடைய மெடோ ஆக்ரோ ஃபார்ம் நிறுவனம் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு சொந்தமானதா? அல்லது எங்களுக்கு சொந்தமானதா? என தீர்ப்பு அளிக்கும் வரும் வரை சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க கூடாது. வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்''என்றார்.

சாட்சிப் பட்டியல் எங்கே?

இதனிடையே குறுக்கிட்ட‌ நீதிபதி டி'குன்ஹா,'மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனம் சண்முகம் என்பவருக்கு மட்டுமே சொந்தமானதா? அப்படியென்றால் அதற்கு ஆதாரமான சாட்சிகளின் பட்டியலை ஏன் நீங்கள் (மெடோ அக்ரோ நிறுவனம்) தாக்கல் செய்ய‌வில்லை?'என வழக்கறிஞர் தியாகராஜனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘சாட்சிகளின் பட்டியலை விரைவில் தாக்கல் செய்கிறேன்' அவர் பதிலளித்தார்.

மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் மனுவுக்கு உங்களுடைய பதில் என்ன அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீதிபதி டி'குன்ஹா கேட்டார்.'மெடோ அக்ரோ நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க கூடாது' என்றார் பவானி சிங். எனவே நீதிபதி டி'குன்ஹா இம்மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

6 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்