விஷன் 2023-ன்படி 2 ஆண்டுகளில் தமிழக அரசு சாதித்தது என்ன?- ராமதாஸ்

By செய்திப்பிரிவு





இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ன் இரண்டாவது பகுதியை சென்னையில் ஆடம்பர விழா நடத்தி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருக்கிறார். அத்துடன், தமிழ்நாடு தொழில்கொள்கை, ஆட்டோ மொபைல் மற்றும் உதிரிபாகங்கள் கொள்கை, உயிரி தொழில்நுட்பக் கொள்கை ஆகியவற்றையும் வெளியிட்டதுடன் ரூ.5081 கோடி முதலீட்டுக்கான 16 ஒப்பந்தங்களையும் கையெழுத்திடச் செய்துள்ளார்.

தொலைநோக்குத் திட்டத்தின் இரண்டாவது பகுதியில் மின்சாரம், போக்குவரத்து, வேளாண்மை உள்ளிட்ட 6 துறைகளில் 217 உட்கட்டமைப்பு திட்டங்களை ரூ.15 லட்சம் கோடியில் செயல்படுத்துவது குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் மூலம் தொழில்துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா முயன்றிருக்கிறார்.

வரும் மக்களவைத் தேர்தலில், மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்குவதற்காக நடத்தப்படும் இந்நாடகம் வெற்றி பெறாது. முதல்வர் வெளியிட்ட தொலைநோக்குத் திட்டத்தின் இரு பகுதிகளையும் நான் முழுமையாக படித்தேன்; பொருளாதார வல்லுனர்களிடமும் இதுபற்றி ஆலோசனை நடத்தினேன். தொலைநோக்குத் திட்ட அறிக்கை வெறும் வாய்ப்பந்தல் தானே ஒழிய அதனால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படாது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. இலக்குகள் பெரிதாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை எட்டுவதற்கு சாத்தியமான செயல் திட்டங்களோ, திறனோ இந்த அரசிடம் இல்லை என்பதே உண்மை.

2011-ஆம் ஆண்டில் ஆட்சிப்பொறுப்பேற்ற ஜெயலலிதா 22.03.2012 ஆம் தேதி தொலைநோக்குத் திட்டம் 2023&ன் முதல் பகுதியை வெளியிட்டார். அந்த ஆவணம் வெளியிடப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், அதன் இலக்குகளை எட்டுவதில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ. 4.5 லட்சமாக உயர்த்தப்படும் என அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இலக்கை எட்டவேண்டுமானால், தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 15% வீதமும், பொருளாதார உற்பத்தி 11% வீதமும் வளர்ச்சியடைய வேண்டும். ஆனால், கடந்த 2000 ஆவது ஆண்டுகளின் தொடக்கத்தில் 17 முதல் 20% ஆக இருந்த தனிநபர் வருமானம் தற்போது 11% ஆகவும், 12% ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது 4.2% ஆகவும் குறைந்துவிட்டது. பொருளாதாரம் மற்றும் தனிநபர் வருமான வளர்ச்சிக்கு வகை செய்ய வேண்டிய முதல்வர் ஜெயலலிதா, அதன் வீழ்ச்சிக்கு வகை செய்துவிட்டு, தொலைநோக்குத் திட்ட இலக்குகளை எப்படி எட்டப் போகிறார் என்பது தெரியவில்லை.

2023 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தில் வறுமை ஒழிக்கப்பட்டுவிடும் என்று முதல்வர் வாக்குறுதி அளித்திருக்கிறார். அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் , படித்தவர்களுக்கு திறமைக்கேற்ற ஊதியத்துடன் வேலை ஆகியவை உறுதி செய்யப்படும்போது தான் வறுமை ஒழிந்ததாக கருதப்படும் என்று தொலைநோக்குத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அரசு சார்பில் பொங்கல் சமைப்பதற்காக அரிசி, சர்க்கரையுடன் ரூ.100 பணமும், உடுத்துவதற்காக வேட்டி - சேலையும் இலவசமாக கொடுத்தால் தான் பொங்கல் திருநாளை கொண்டாட முடியும் என்ற நிலைக்கு 92% குடும்பங்களை தள்ளிவிட்ட திராவிடக் கட்சிகளின் அரசுகள் வறுமையை ஒழிக்கப்போவதாக கூறுவது விந்தையாக இருக்கிறது.

தொலைநோக்குத் திட்டத்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்றும், கடந்த 33 மாதங்களில் 77 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும் முதல்வர் கூறியிருக்கிறார். உண்மையில், இதேகாலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை 68.05 லட்சத்திலிருந்து 84.38 லட்சமாக அதிகரித்திருக்கிறது. அதாவது வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை இப்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் மட்டும் 16.33 லட்சம் அதிகரித்திருக்கிறது.

அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்ய 25 லட்சம் வீடுகள் கட்டுப்படியாகும் விலையில் கட்டப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருகிறது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக நகர்ப்புறங்களில் ஒருவீடு கூட கட்டப்படவில்லை. ஆட்சிக்கு வந்த புதிதில் அறிவிக்கப்பட்ட திருமழிசை துணைநகரத் திட்டத்தைக் கூட இன்னும் நிறைவேற்ற முடியவில்லை.

தொழில் வளர்ச்சியைப் பெருக்குவதற்காக 2000 கி.மீ தொலைவுக்கு 6 முதல் 8 வழிச் சாலையும், 5000 கி.மீ 4 வழிச் சாலையும் அமைக்கப்பட வேண்டும். இதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாத தமிழக அரசு, மத்திய அரசின் மூலம் மேற்கொள்ளப்படவிருந்த மதுரவாயல் பறக்கும் பாலத்திற்கும், ரூ. 10,000 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வளர்ச்சிக்கு தடை போட்டுக்கொண்டிருக்கிறது.

அடுத்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் அனல் மின்சாரம், 10,000 மெகாவாட் மரபு சாரா மின்சாரம், 5000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஒரு புதிய மின்திட்டத்தைக் கூட உருவாக்காத தமிழக அரசு, ஏற்கனவே உருவாக்கப்பட்ட 12,000 மெகாவாட் திறன் கொண்ட மின்திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மழைக் காலத்தில் கூட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் அவல நிலை தான் தமிழகத்தில் நிலவுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் வேளாண்துறை கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடி உள்பட மொத்தம் 15 லட்சம் கோடி முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டுவரப்போவதாக எந்த நம்பிக்கையில் முதல்வர் கூறுகிறார் என்று தெரியவில்லை. ஒரு மாநிலத்திற்கு தொழில் முதலீடுகள் அதிக அளவில் வர வேண்டுமானால், அங்கு தடையற்ற மின்சாரம், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், ரயில் பாதைகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மிகவும் அவசியமாகும். ஆனால், இவை எதையும் மேம்படுத்தாததால் தான் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ரூ.12,000 கோடியை கர்நாடகத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் ரூ.26,625 கோடியில் 26 திட்டங்களைத் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக முதல்வர் கூறியுள்ளார். ஆனால், அவற்றில் ஒரு திட்டத்திற்கான பணி கூட இன்னும் தொடங்கவில்லை. முந்தைய தி.மு.க. ஆட்சியில் ரூ. 46,091 கோடியில் 25 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்தத் திட்டங்களின் மூலம் மொத்தம் 2.5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அதில் பத்தில் ஒரு பங்கு பேருக்காவது வேலை கிடைத்திருக்குமா? என்பது ஐயம் தான்.

தொலைநோக்குத் திட்ட இலக்குகளை எட்டுவதற்கான திசையில் தமிழகம் சரியாக பயணிக்கிறது என்றால் 2014-15 ஆம் நிதியாண்டிற்குள் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களில் ரூ. 2 லட்சத்து 13 ஆயிரத்து 258 கோடி முதலீடு செய்திருக்க வேண்டும். ஆனால், அதில் நான்கில் ஒரு பங்காவது முதலீடு செய்யப்பட்டிருக்குமா? என்பது ஐயம் தான்.

வளர்ச்சி இலக்குகளை நிர்ணயிப்பது பெரிய சாதனையல்ல. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை உணர்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவதற்கான குறைந்தபட்ச முயற்சிகளையாவது அரசு மேற்கொள்ள வேண்டும். ஆனால், அப்படி எந்த முயற்சியையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக வீண் விளம்பரங்களை செய்து மக்களை ஏமாற்றப்பார்க்கிறது.

தொலைநோக்குத் திட்டம் 2023-ன் இலக்குகளை எட்ட இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்