டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கருணாநிதி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலையில் நியாயம் கிடைத்து, உண்மை விவரங்கள் நாட்டுக்குத் தெரிய, இந்த வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "20-9-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில், உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி, தமிழக அரசின் காவல் துறை மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்த கருத்துக்கு இந்த ஆட்சியினரின் பதில் என்ன என்று கேட்டதோடு, திருச்செங்கோட்டில் பணியாற்றி வந்த 27 வயதான பெண் டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டது பற்றியும் அரசு விளக்கமளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

அதனையொட்டி இன்று நாளேடுகளில் பல்வேறு செய்திகள் வந்துள்ளன. விஷ்ணுபிரியாவின் தந்தையே, தன் மகள் தற்கொலை செய்து கொண்டு இறந்ததற்குக் குடும்பப் பிரச்சினை காரணம் அல்ல என்று தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் "இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடும் வரை விஷ்ணுபிரியாவின் உடலை வாங்க மாட்டோம்; எனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குக் கோழை

கிடையாது. அவரது மரணத்துக்கு உயர் அதிகாரிகளே காரணம். கோகுல்ராஜின் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் மிரட்டலும், அது தொடர்பான உயர் அதிகாரிகளின் நெருக்கடியும் இருப்பதாக விஷ்ணுப்பிரியா கூறி வந்தார்.

இந்த வழக்கை திசை திருப்பவே குடும்பப் பிரச்சினை எனப் போலீசார் கூறி வருகின்றனர். அவர் எழுதிய கடிதத்தில் 4 பக்கத்தை மட்டுமே போலீசார் காட்டினர். மீதியுள்ள பக்கங்களை மறைத்து விட்டனர். விஷ்ணுபிரியாவின் மடிக்கணினி, இரண்டு செல்லிடப் பேசிகள், கேமரா ஆகியவற்றைப் போலீசார் கைப்பற்றி உள்ளனர். செல்லிடப் பேசியில் உள்ள ஆதாரங்களைப் போலீசார் அழிக்க முயற்சிக்க வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் போலீசார் நடத்தும் விசாரண மீது நம்பிக்கை கிடையாது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.

மறைந்த விஷ்ணுபிரியாவின் தற்கொலையை அடுத்து, அவரது நெருங்கிய தோழியும், ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை டி.எஸ்.பி. யாகப் பணியாற்றி வருபவருமான மகேஸ்வரி, சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.48 மணியளவில் என்னைத் தொடர்பு கொண்டு விஷ்ணுபிரியா பேசிக் கொண்டிருந்தார். அப்போது, நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றொரு இணைப்பில் அழைப்பதாகக் கூறிவிட்டு எனது இணைப்பைத் துண்டித்தார். அதன் பிறகு விஷ்ணுபிரியாவின் செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டது. அதன் பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் தெரிய வந்தது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு முறையாக விசாரணை செய்யப்படவில்லை. இந்த வழக்கில் தொடர்பில்லாத சிலரை உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் கைது செய்து சிறையில் அடைத்ததுடன், அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்

என்றும் நிர்பந்தம் செய்யப்பட்டதாகவும் என்னிடம் தெரிவித்தார். விஷ்ணுபிரியா நேர்மையான அதிகாரி. உயர் அதிகாரிகளின் நெருக்கடி, ஒருமையில் பேசியது, போலீஸ் வேலைக்குத் தகுதி இல்லாதவர் என அவமரியாதையாகத் திட்டியது போன்ற காரணங்களால் அவர் தற்கொலைக்குத் துhண்டப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். உயர் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றெல்லாம் விரிவாகத் தெரிவித்திருக்கிறார்.

"இஞ்சினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு குறித்து ஆரம்பத்தில் இருந்தே, முக்கிய குற்றவாளிகள் தப்புவதற்கு உயர் அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகப் புகார் எழுந்தது. போலியான குற்றவாளிகளை ஆஜர்படுத்தினால்தான், உண்மையான குற்றவாளிகள் தப்ப முடியும். இதனால் சென்னையில் இருந்து ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் இந்த வழக்கு குறித்து எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி. யிடம் தொடர்ந்து நாங்கள் சொல்வது போல செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏ.டி.ஜி.பி.யை வேறு யாராவது வற்புறுத்தினார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இதற்குப் பின்னால் பெரிய சதி வலை இருக்கலாம். குறிப்பாக அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென்று போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது" என்றும் ஏடுகளில் எழுதப்பட்டுள்ளது.

முன்னாள் டி.ஜி.பி., திலகவதி கூறுகையில், "விஷ்ணுப்பிரியாவின் மரணம் மர்மம் நிறைந்தது. விசாரணையின் முடிவில் தான் உண்மை வெளி வரும். டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை விவகாரத்தில் சி.பி., சி.ஐ.டி. விசாரணை அமைக்கப்பட்டுள்ளது. அது நேர்மையாக இருக்காது. காரணம் அது தமிழக அரசின் கீழுள்ள போலீஸ். ஆகவே சி.பி.ஐ. விசாரணை அமைத்தால் மட்டுமே உண்மை வெளி வரும்" என்றெல்லாம் கருத்து தெரிவித்திருக்கிறார்.

விஷ்ணுபிரியாவின் தந்தையும், ஏனையோரும் இந்த வழக்கு குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் அலட்சியப்படுத்தப்படக் கூடியவையல்ல. ஜெயலலிதா ஆட்சியிலே அதிகாரிகள் தற்கொலைகளும், அதிலே உண்மைச் சம்பவங்களை மனசாட்சி சிறிதுமின்றி மறைக்கின்ற முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. யாரும் கோரிக்கை வைப்பதற்கு முன், அ.தி.மு.க. அரசு அவசர அவசரமாக சி.பி.,சி.ஐ.டி., விசாரணை என்று அறிவித்திருப்பதிலிருந்தே, இந்த வழக்கில் உண்மைச் சம்பவங்களை மறைப்பதற்கான முயற்சி நடைபெறுகிறதோ என்று தான் சந்தேதிக்க வேண்டியுள்ளது.

எனவே விஷ்ணுபிரியாவின் தற்கொலையில் நியாயம் கிடைத்து, உண்மை விவரங்கள் நாட்டுக்குத் தெரிய, பல்வேறு தரப்பிலும் கேட்டுக் கொண்டுள்ளபடி இந்த வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். மேலும் சென்னை உயர் நீதிமன்றமும் மாண்டவர் ஒரு பெண் போலீஸ் அதிகாரி என்ற வகையிலும்; செயின் பறிப்பு, தாலிப் பறிப்பு, பள்ளி - கல்லூரிகளிலும் - பணியாற்றும் தொழிற் கூடங்கள் மற்றும் அலுவலகங்களிலும் பாலியல் வன்முறை போன்ற கொடுமைகளிலிருந்து பெண்களைப் பாதுகாத்திடத் தவறிய தமிழ்நாடு

காவல் துறை, தற்போது அத்துறையிலுள்ள பெண் அதிகாரிகளைக் கூடப் பாதுகாத்திட முடியவில்லை என்பதாலும்; இந்தப் பிரச்சினையைத் தானாகவே முன்வந்து கையிலே எடுத்துக் கொண்டு, இது கொலையா அல்லது தற்கொலையா; இதன் பின்னணியிலே உயர் போலீஸ் அதிகாரிகளும், அமைச்சர்களும் இருக்கிறார்களா; எனப் பரவலாக எழுப்பப்பட்டுள்ள வினாக்கள் பற்றி குறிப்பிட்ட ஒரு காலவரையறைக்குள் விரிவாக விசாரணை செய்து உண்மையை நாட்டிற்குத் தெரிவித்திடத் தொடர்ந்து கண்காணித்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

11 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்