ஆசிரியை, முதியவரை பலிகொண்ட சென்னை வழிப்பறி பயங்கரம் நடந்தது எப்படி?

வழிப்பறி கொள்ளை முயற்சியில் ஆசிரியை, முதியவர் உயிரிழந்த சம்பவம், சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவி பலத்த காயம் அடைந்தார். வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் அடித்து உதைத்து, அவரது பைக்கை தீ வைத்து கொளுத்தினர்.

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குடிசை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு, பெயின்டர். இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் நந்தினி (24). எம்.எஸ்சி பட்டதாரியான நந்தினி, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

அதே பகுதியில் வசிப்பவர் நந்தினியின் உறவினர் அப்சர்கான். இவரது மகள் நஜ்ஜூ (21), ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக நந்தினி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். அவருடன் நஜ்ஜூவும் சென்றார். 10.15 மணி அளவில் மந்தைவெளியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் ரூ.20 ஆயிரத்தை எடுத்து கைப்பையில் வைத்துக்கொண்டு இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வாகனத்தை நந்தினி ஓட்டி வந்தார்.

ஹெல்மெட் அணிந்த நபர்

அப்போது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் பைக்கில் இவர்களை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நந்தினி திரும்பியபோது, பின்னால் வந்த மர்ம நபர் நஜ்ஜூ கையில் மாட்டியிருந்த கைப்பையை பறிக்க முயன்றார். அதிர்ச்சி அடைந்த நந்தினி, வாகனத்தை வேகமாக ஓட்டினார். விரட்டிச் சென்ற மர்ம நபர் பட்டினப்பாக்கம் பணிமனை அருகே நஜ்ஜூவிடம் இருந்து கைப்பையை பறித்துக்கொண்டு வேகமாக சென்றார்.

நந்தினியும், நஜ்ஜுவும் 'திருடன் திருடன்' என்று சத்தம் போட்டுக்கொண்டே கொள்ளையனை விரட்டிச் சென்றனர். ஆத்திரமடைந்த கொள்ளையன், நந்தினி யின் வாகனத்தை காலால் உதைத்து தள்ளியுள்ளார். இதனால் நிலைதடுமாறி ஓடிய நந்தினியின் வாகனம், கடற்கரையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த சீனிவாச புரத்தைச் சேர்ந்த சாகர் (65) என்பவர் மீது பலமாக மோதிவிட்டு சாய்ந்தது.

2 பேர் உயிரிழப்பு

கீழே விழுந்ததில் கல்லில் மோதி நந்தினியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நந்தினியும் சாகரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். நஜ்ஜூ படுகாயத்துடன் மயங்கிக் கிடந்தார். நந்தினியின் வாகனத்தை உதைத்து தள்ளிவிட்டு தப்பிக்க முயன்றபோது, கொள்ளையனும் பைக்கில் இருந்து தடுமாறி விழுந்தான்.

இதை பார்த்ததும் அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். தப்பிக்க முயன்ற கொள்ளையனை சுற்றிவளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அவருடைய பைக்கை தீ வைத்து கொளுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டினப்பாக்கம் போலீஸார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நந்தினி, சாகர், நஜ்ஜூ ஆகியோரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளையனையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நந்தினி இறந்தார். உள்நோயா ளியாக அனுமதிக்கப்பட்ட சாகர், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். முகத்தில் காயங்களுடன், நஜ்ஜூ தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

பிடிபட்ட கொள்ளையன் செங்குன்றம் செங்காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கருணா என்ற கருணாகரன் (32) என்பது முதல்கட்ட விசார ணையில் தெரியவந்தது. குடிபோதையில் இருந்த கருணா, ஏடிஎம்மில் நந்தினி பணம் எடுத்ததை கவனித்துள்ளார். அவர்களை பின்தொடர்ந்து சென்று வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார்.

நஜ்ஜூ கொடுத்த புகாரின் அடிப்படையில் பட்டினப்பாக்கம் போலீஸார் கருணாகரன் மீது 392 (வழிப்பறி), 304-(2) (கொலையாகாத மரணம் விளைவிக்கும் குற்றம்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் ஆணையர் ஆய்வு

சென்னை மாநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன், சம்பவ இடத்தில் நேற்று காலை ஆய்வு நடத்தினார். சுவாதி கொலை சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், வழிப்பறி கொள்ளை முயற்சியில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்து வழிப்பறி செய்தது எத்தனை பேர்?

பொதுமக்கள் பிடித்துக் கொடுத்த கொள்ளையன் கருணா என்கிற கருணாகரன் (24) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, "மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வழிப்பறியில் ஈடுபட முயன்றனர். கீழே விழுந்ததில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். ஒருவரை மட்டுமே எங்களால் பிடிக்க முடிந்தது. பிடிபட்ட நபரை போலீஸில் ஒப்படைத்தோம்" என்று தெரிவிக்கின்றனர்.

ஆனால் போலீஸ் அதிகாரிகள், "முதலில் மோட்டார் சைக்கிளில் வந்து வழிப்பறியில் ஈடுபட்டது 2 பேர் என்றுதான் தகவல் வந்தது. தற்போது ஒருவர்தான் வழிப்பறியில் ஈடுபட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

உயிரிழந்த முதியவர் ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை ஊழியர்

பட்டினப்பாக்கத்தில் வழிப்பறி முயற்சியின்போது பைக் மோதியதில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த முதியவர் சாகர் (65) என்பவர் உயிரிழந்தார். பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் 35 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரது மனைவி உமாமகேஸ்வரி (55). குழந்தை இல்லை. தினமும் இரவில் சாப்பிட்டுவிட்டு கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவும் 10 மணிக்கு சாப்பிட்டு முடித்ததும் நடைப்பயிற்சிக்காக கடற்கரைக்கு சென்றார். அப்போதுதான் பைக் மோதியதில் சாகர் இறந்துள்ளார்.

அமாவாசை என்பதால் நந்தினியை காப்பாற்ற முடியவில்லை: மீனவர்கள் வருத்தம்

அமாவாசை என்பதால் விபத்து நடந்த இடத்தில் நாங்கள் இல்லை. இருந்திருந்தால் நந்தினியை காப்பாற்றியிருப்போம் என்று பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த மீனவர்கள் கூறினர்.

லூப் சாலையும், பட்டினப்பாக்கம் கடற் கரை சாலையும் இணையும் இடத்தில்தான் நந்தினி பலியானார். வழக்கமாக அந்த இடத்தில் வலைகளைக் காய வைப்பது, மீன்களைப் பிரிப்பது போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவர். ஆனால் விபத்து நடந்த நேரத்தில் அங்கே மீனவர்கள் யாரும் இல்லை. இதுபற்றி இ.மகேந்திரன் என்ற மீனவர் கூறியதாவது:

நந்தினியின் இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளான இடத்தில் உயரமான மின் விளக்கு கம்பம் உள்ளது. வழக்கமாக நாங்கள் இரவு 1 மணி வரை அங்கே இருந்து வலைகளை சரி செய்வோம். ஆனால், சம்பவம் நடந்த நேற்று முன்தினம் இரவு அமாவாசை. அன்றைய தினம், கடலில் அலைகள் அதிகமாக இருந்ததாலும், கடந்த சில நாட்களாக அதிகமான மீன்கள் கிடைக்காததாலும் அன்று இரவு 9 மணிக்கே கடற்கரையிலிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டோம்.

நாங்கள் அங்கே இருந்திருந்தால் நந்தினி நிச்சயம் வண்டியை நிறுத்திவிட்டு எங்களை உதவிக்கு அழைத்திருப்பார். அல்லது, நாங்களே அந்த கொள்ளையனை மடக்கி யிருப்போம். நந்தினியின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.

சம்பவ இடத்துக்கு உடனே வராத தொகுதி எம்.எல்.ஏ.

ஆசிரியை நந்தினியிடம் கொள்ளையன் ஒருவன் வழிப்பறி செய்ய முயன்றபோது, அவர் உயிரிழந்தார். பட்டினப்பாக்கத்தில் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடப்பதாகக் கூறப்படுகிறது. பட்டினப்பாக்கம் மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதி யாகும். இந்த சம்பவத்துக்கு பிறகு அப்பகுதி பதற்றமாக இருந்தது. போலீஸாரும் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வான முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ் சம்பவ இடத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை வரவில்லை. போலீஸ் துறையில் முக்கிய பதவியில் இருந்தவர். தனது அனுபவத்தின் மூலம் அங்கு அப்போது நிலவிய சூழ்நிலை யில் மக்களிடம் பேசி பதற்றத்தை தணித்தி ருக்கலாம்.

இதுகுறித்து ஆர்.நடராஜிடம் தொலை பேசியில் கேட்டபோது, ‘இந்த சம்பவம் தொடர்பாக நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆசிரியை நந்தினி கொலை தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள னர். குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்