தலித் இளைஞர் படுகொலை: கவுரவக் கொலைகளுக்கு எதிராக மக்கள் நலக் கூட்டணி உரத்த குரல்

By செய்திப்பிரிவு

சாதியின் பெயரால் உடுமலையில் நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு மக்கள் நலக் கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சாதிக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்(21). இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறி யியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர். இவர், பழநியைச் சேர்ந்த சின்னராஜின் மகளை காதலித்து 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகலில் இருவரும் உடுமலைக்கு வந்துள்ளனர். இவர்களின் வருகையை அறிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பொதுஇடத்தில் சரமாரியாக வெட்டியது.

இதில் மாணவருக்கு கழுத்து, கைகளில் பலத்த வெட்டு விழுந்தது. அவரை காப்பாற்ற சென்ற பெண்ணுக்கும் தலையில் வெட்டு விழுந்தது. மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக்கு எடுத்து செல்லும் வழியில் சங்கர் இறந்தார். விரிவான செய்திக்கு: | >உடுமலையில் காதல் திருமண தம்பதிக்கு வெட்டு: பொறியியல் மாணவர் பலி |

இச்சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது திருமாவளவன், "தமிழகத்தில் அண்மைக்காலத்தில் ஆணவக் கொலைகள் என்ற காட்டுமிராண்டித்தனம் அதிகரித்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் தென்மாவட்டங்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் இவ்வாறாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 70%க்கும் மேலான கொலைகள் ஆணவக் கொலைகள் என புள்ளிவிவரங்களை தெரிவிக்கின்றன.

இத்தகைய கொலைகளை தடுக்க தனிச் சட்டம் தேவை. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இனியாவது மத்திய, மாநில அரசுகள் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும். இச்சட்டம் கொண்டுவருவது வரலாற்றுத் தேவையாக இருக்கிறது" என்றார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் இடங்களில் எல்லாம் இதுபோன்ற கவுரவக் கொலைகள் நடைபெறுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இச்சம்பவம் மிகுந்த கண்டனத்துக்குரியது. இவ்விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறும்போது, "சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை கொலை செய்யும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிக்கிறது. இந்திய அரசும், மாநில அரசும் இத்தகைய கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதற்கிடையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், "தமிழகத்தில் ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆனால் இவற்றை தடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கவலையளிக்கிறது. இது தமிழகத்துக்கு பெரிய அவமானம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்