குடிசைவாசிகளுக்கு ரூ.117 கோடியில் 1,472 அடுக்குமாடி குடியிருப்புகள்: ஜெயலலிதா ஒப்புதல்

By செய்திப்பிரிவு

சென்னை குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காக, குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.117 கோடியே 15 லட்சம் செலவில் 1,472 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "குடிசைவாழ் ஏழை மக்களின் நலனுக்காக, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட உருவாக்கப்பட்டது தான் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம். இந்த வாரியத்தின் மூலம் இதுவரை 1.31 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

மாறுபட்ட தட்பவெப்ப நிலை, குடியிருப்புகளை உபயோகிக்கும் தன்மை, சுற்றுப்புறச் சூழல், குடியிருப்பு தாரர்களால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் மாற்றம் மற்றும் ஆக்ரமணங்கள், மழை மற்றும் இயற்கைச் சீற்றம், பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்மை போன்ற காரணங்களால் சில குடியிருப்புகள் பழுதடைந்துள்ளன.

பழுதடைந்துள்ள குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்காக, அவற்றில் பழுதுப்பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணி களை உடனடியாக மேற் கொள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இக்குடியிருப்புகளில் உள்ள மாடிப்படிகளை சீர் செய்தல், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் மற்றும் கழிப்பறை பீங்கான்களை புதுப்பித்தல், தரை மற்றும் சுவர்களுக்கு பூச்சு வேலைகள், வர்ணம் பூசுதல், மழைநீர் கசிவுகளை தடுக்க ஓடுகள் பதித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள இந்த ஆண்டிற்கு (2013-14) 10 கோடி ரூபாயும் அடுத்த ஆண்டிற்கு (2014-15) 15 கோடியே 77 லட்சம் ரூபாயும் என மொத்தம் 25 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 177 திட்டப் பகுதிகளில் உள்ள 29,028 குடியிருப்புகளில் உள்ள பழுதுகள் சரிபார்க்கும் பணிகள் நிறைவேற்றப்படும்.

குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் சென்னை நகரில் ஆட்சேபகரமான பகுதிகளில் அமைந்துள்ள குடிசைப்பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு திட்டம் வாயிலாக மாற்றிடத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்யும் பொருட்டு, ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் திட்டப்பகுதியில் இதுவரை 15,656 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் இதே திட்டப்பகுதியில் 8,048 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

தற்பொழுது இப்பகுதியில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், இங்கு வாழும் மக்கள் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்வதற்கு உரிய போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியது அவசிய மாகும்.

எனவே ஒக்கியம் துரைப் பாக்கம், கண்ணகி நகரில் வாழும் மக்களின் நலனுக்காக அதிக அளவு அரசு போக்கு வரத்து பேருந்துகளை இயக்குவதற்காக, தற்பொழுது கண்ணகி நகரில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தை மேம்படுத்தி 20 பேருந்துகள் நிறுத்துவதற்கு ஏற்ப தளங்கள், பயணிகளுக்கான இடவசதி, நிர்வாகக் கட்டடம், நேரக் காப்பாளர் அலுவலகம், பயணிகள் மற்றும் அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகளுடன் கூடிய பணிமனையுடன் கூடிய பேருந்து முனையத்தை கட்டுவதற்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களை மறு குடியமர்வு செய்ய அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி வார்டு எண்.96 கக்கன்ஜி நகரிலுள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு மாற்று குடியமர்வு திட்டமாக 84 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதி-1 திட்டத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக 1,056 அடுக்குமாடிக் குடியிருப்புகள், அத்திப்பட்டு பகுதி-2 திட்டத்தில் 32 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் 416 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 117 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் 1,472 அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், மாநில அரசின் மானியமாக அத்திப்பட்டு பகுதி-1 திட்டத்திற்கு 31 கோடியே 5 லட்சம் ரூபாயும், அத்திப்பட்டு பகுதி-2 திட்டத்திற்கு 11 கோடியே 63 லட்சம் என 42 கோடியே 68 லட்சம் வழங்குவதற்கும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் 271 சதுர அடி தரைப்பரப்பளவு கொண்டதாகவும், இரு அறைகள், சமையலறை, பால்கனி மற்றும் கழிவறையுடனும் அமைக்கப்படும்" என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

21 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

53 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்