பாஜகவின் எடுபிடிதான் அதிமுக அரசு: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஸ்டாலின் சரமாரி தாக்கு

By செய்திப்பிரிவு

"கையாளாகாத அதிமுக அரசு பதவியில் நீடிப்பதற்காகவும், அதிமுக அமைச்சர்களுக்கு எதிரான வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் மட்டுமே ஜல்லிக்கட்டு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது" என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், "எப்பாடு பட்டாவது தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படும் அதிமுக அரசு, மத்திய பா.ஜ.க. அரசின் எடுபிடியாக மட்டுமே மனமுவந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" என்று அவர் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தமிழர்களின் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ள அதிமுக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 2014-ம் ஆண்டு மே மாதமே ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தும், மூன்று வருடங்களாக கடிதம் எழுதுவது மட்டுமே "நிர்வாகம்" என்ற ரீதியில் அதிமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்பதோடு, ஆங்காங்கே தங்களின் பாரம்பரிய மற்றும் பண்பாட்டு உரிமைகளுக்காகப் போராடிய மாணவர்களையும், இளைஞர்களையும் கைது செய்தும், தடியடி நடத்தியும் அதிமுக அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கிறது.

"ஜல்லிக்கட்டு இந்த வருடம் நடத்தியே தீர வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த ஜனவரி 3-ம் தேதி அலங்காநல்லூரில் திமுக சார்பில் ஆர்பாட்டம் நடத்தினோம். அவசரச் சட்டம் கொண்டு வந்தோ, பிரதமரை சந்தித்தோ, ஜல்லிக்கட்டு நடத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த உணர்ச்சி மிக்க இளைஞர்கள் கூட்டத்தில் நின்று வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் அதுபற்றி அதிமுக அரசு கண்டு கொள்ளாமல் கடைசி வரை அமைதி காத்து, இன்றைக்கு தமிழகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் தங்கள் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் தமிழர்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எப்பாடு பட்டாவது தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படும் அதிமுக அரசு, மத்திய பா.ஜ.க. அரசின் எடுபிடியாக மட்டுமே மனமுவந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, மாநில உரிமைகளுக்காகவோ, தமிழர்களின் உரிமைக்காகவோ ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுப்பதற்கு அதிமுக அரசு தயாராக இல்லை என்பது ஜல்லிக்கட்டு பிரச்சினையில் வெளிப்படையாகவே அரங்கத்திற்கு வந்து விட்டது. ஊழலில் திளைக்கும் அதிமுக அரசு, மத்திய அரசிடம் வலுவாக கோரிக்கை வைக்கும் பலத்தை இழந்து, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழக நலன்களை எல்லாம் கூச்சமின்றி தாரை வார்த்து விட்டு தடுமாறி நிற்கிறது. முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்னும் எத்தனை நாளைக்கு பதவியில் இருக்கப்போகிறார் என்ற பிரச்சாரத்தை அதிமுகவினரே முன்மொழிந்து, இன்றைக்கு மத்திய அரசிடம், ஒரு மதிப்பு மிக்க தமிழக முதல்வர் பதவியை முற்றிலும் சிறுமைப்படுத்தி விட்டார்கள்.

மாநிலத்தில் ஒரு அரசு இருக்கிறது என்பதையோ, முதல்வர் ஒருவர் இருக்கிறார் என்பதையோ மத்திய அரசு துளியும் மதிக்கவில்லை. இந்த துரதிருஷ்டவசமான சூழ்நிலையால், தமிழக மக்களின் நலன்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு, இன்றைக்கு தொன்று தொட்ட தமிழர் கலாச்சாரத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டும் மூன்றாவது வருடமாக அதிமுக ஆட்சியில் நடத்த முடியவில்லை. தலையாட்டும் ஓர் அரசு தமிழகத்தில் இருக்கும் எண்ணத்தில் மத்திய பாஜக அரசும் தமிழர்களின் உணர்வுகளை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது.

காவிரி உரிமை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், வறட்சி நிவாரண நிதி ஒதுக்குதல், வர்தா புயல் நிவாரண நிதி வழங்குதல், ஜல்லிக்கட்டு என அனைத்திலும் மத்திய அரசு, தமிழக நலன் சார்ந்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. நாடாளுமன்றத்தில் உள்ள அதிமுகவின் 50 எம்.பி.க்களோ "சசிகலா முதல்வராக வேண்டும்" என்று கோரிக்கை வைப்பதில் தீவிர ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்" என்று மத்திய அரசை வலியுறுத்தவோ, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசவோ முடியவில்லை.

அதிமுக அரசின் நிலையும், மத்திய அரசின் நிலையும் இப்படியென்றால் மத்திய அமைச்சரவையில் இருக்கும் தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் "ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும்" என்று தொடர்ந்து தமிழக மக்களை நம்ப வைத்தார். தலைவர் கருணாநிதியையும் நம்ப வைத்தார். ஏன் என்னையே நம்ப வைத்து, அதனால் நான் கூட முதலில் நடத்தவிருந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்தாமல் தள்ளி வைத்தேன். ஆனால் இன்றைக்கு "ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஒரே வரியில் அவர் தனது பொறுப்பை தட்டிக் கழித்து விட்டார்.

எத்தனையோ பிரச்சினைகளில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வீட்டிற்கே கூட சென்று உத்தரவுகளைப் பெற்ற சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி ஜல்லிக்கட்டு பிரச்சினையிலும் முன்கூட்டியே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டு தீர்ப்பு வெளிவர முயற்சி செய்திருக்கலாம் ஆனால். அப்படி உச்சநீதிமன்றத்தை அணுக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மனமில்லை என்றால் தங்களது சொந்த அதிகாரத்தை, அதாவது நாடாளுமன்றத்திற்கு உள்ள சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்நேரம் ஜல்லிக்கட்டு நடத்த ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கலாம்.

சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் நான் கூறியபடி எவ்வளவோ அவசரச்சட்டங்களை ஏற்கெனவே கொண்டு வந்திருக்கும் மத்திய அரசு, ஜல்லிக்கட்டுக்காக ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வருவது மிக மிக சுலபமானது. ஆனால் எல்லாவற்றையும், உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கின் மீது பழி போட்டு, தன் பொறுப்பிலிருந்து விலகி நிற்கிறது மத்திய பா.ஜ.க., அரசு. தமிழர்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு மத்திய பா.ஜ.க அரசுக்கு ஏராளமான மார்க்கமிருந்தும் மனமில்லை என்ற ஒரே காரணத்தால் ஜல்லிக்கட்டு தடைபட்டு விட்டது.

அதிமுக அரசின் அலட்சியத்தினால், இந்த வருடம் பொங்கல் திருநாளில் ஜாம், ஜாம் என்று நடக்க வேண்டிய ஜல்லிக்கட்டு தடைபட்டு நிற்பது மட்டுமின்றி, "போலீஸ் கைது", "போலீஸ் தடியடி", என்று அரசின் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. வீடுகளில் தோரணம் கட்டி பொங்கல் வைப்பதைக் கூட விட்டு விட்டு அணி வகுத்து நின்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், சர்க்கரை பொங்கலுடன் கொண்டாட வேண்டிய ஜல்லிக்கட்டு விளையாட்டு எந்தளவிற்கு தமிழர்களின் ஊனோடும், உயிரோடும் இரண்டறக் கலந்திருக்கிறது என்பதை பறைசாற்றுகிறது.

கையாளாகாத அதிமுக அரசு பதவியில் நீடிப்பதற்காகவும், அதிமுக அமைச்சர்களுக்கு எதிரான வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் மட்டுமே இன்றைக்கு ஜல்லிக்கட்டு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் கலாச்சார உரிமைகளை தரணியில் நிலைநாட்ட வீறு கொண்டு எழுந்து நிற்கும் உணர்ச்சிமயமான இளைஞர்களைப் பார்க்கும்போது, அந்த உணர்ச்சியை துளியும் மதிக்காத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறதே என்ற தாங்கமுடியாத வேதனைதான் ஏற்படுகிறது.

தமிழக நலன்களைப் புறக்கணிக்கும் அதிமுக அரசின் இது போன்ற செயல்பாடுகளை தமிழக மக்கள் வெகு காலம் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உலகத்தையே ஈர்க்கும் "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு" களையிழந்து நிற்பதைப் பார்த்து ஒவ்வொரு தமிழனும் கண்ணீர் சிந்துகிறான் என்றால், அப்படி தமிழன் இன்று சிந்தும் கண்ணீர் வீண் போகாது என்பதை மட்டும் மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும். தமிழக மண்ணின் மாண்பைப் போற்றும் வீரமிக்க இந்த ஜல்லிக்கட்டு நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையும், இந்த ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு எடுக்க, திராவிட முன்னேற்றக் கழகம் எரிமலையாக குமுறிக் கொண்டிருக்கும் இளைஞர் சமுதாயத்திற்கு என்றைக்கும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 mins ago

ஜோதிடம்

22 mins ago

ஜோதிடம்

35 mins ago

வாழ்வியல்

40 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

56 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்