முதல்வரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க அனுமதி மறுத்ததால் திமுக வெளிநடப்பு

By செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பி.தங்கமணி, ‘‘1971-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த உண்மைகள் எல்லாம் அனைவருக்கும் தெரியும். எனவே, அது குறித்து நான் பேச விரும்பவில்லை’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட முதல் வர் ஜெயலலிதா, ‘‘தமிழகத்தில் மதுவிலக்கை ரத்து செய்து மதுக்கடைகளை திறந்தது கருணாநிதி என்பது இன்றைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டும். எனவே, அதுபற்றி அமைச்சர் விளக்கமாக பேச வேண்டும்’’ என்றார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கோஷ மிட்டனர். இதனால், அவை யில் கூச்சல் குழப்பம் ஏற்பட் டது. முதல்வரின் குற்றச் சாட்டுக்கு பதிலளிக்க தங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கோரிக்கை விடுத் தார்.

அதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர், ‘‘இப்பிரச் சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்து விட்டார். அமைச்சர் பேசி முடித்ததும் உங்களுக்கு அனுமதி தருகிறேன். எனவே, அவையை நடத்த ஒத்துழைப்பு தரவேண்டும்’’ என்றார்.

ஆனால், முதல்வரின் குற்றச் சாட்டுக்கு பதிலளிக்க அனு மதிக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுக்கவே துரைமுருகன் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பேரவைத் தலைவர் கண்டனம்

பின்னர் பேசிய பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘அமைச்சர் பேசி முடித்ததும் வாய்ப்பு தருகிறேன் என பலமுறை கூறியும் முதல்வரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வெளிநடப்பு செய்துள்ளனர். அவையின் நேரத்தை திட்டமிட்டு வீணடித்து வருகின்றனர். திமுக உறுப்பினர்களின் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது’’ என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, ‘‘முன் பெல்லாம் பேரவையில் ரகளை செய்யும் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டுமானால் அவைக் காவலர்களை பேரவைத் தலைவர் அழைப்பார். அவர்கள் சிரமப்பட்டு திமுக உறுப்பினர்களை வெளியேற்றுவர். ஆனால், இப்போது இதுவெல்லாம் தேவை யில்லை. மதுவிலக்கு ரத்து, கச்சத்தீவு மீட்பு ஆகிய பிரச்சினைகளைப் பற்றி பேசினால் திமுகவினர் தாங்களாகவே வெளியே சென்றுவிடுகின்றனர். இன்று பேரவைத் தலைவரின் பணியை நான் எளிதாக்கி இருக்கிறேன்’’ என்றார். அதற்கு பேரவைத் தலைவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

திமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தால் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந் திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வது வழக்கம். ஆனால், நேற்று இவர்கள் வெளிநடப்பு செய்யாமல் பேரவை நட வடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்றனர்.

துரைமுருகன் பேட்டி

வெளிநடப்பு செய்த பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் நிருபர்களிடம் துரைமுருகன் கூறும் போது, ‘‘மதுவிலக்கை ரத்து செய் தது கருணாநிதிதான் என முதல் வரும், அமைச்சரும் குற்றம்சாட்டி னர். மதுவிலக்கு ரத்து செய்யப் பட்ட ஒரே ஆண்டில் மீண்டும் திமுக ஆட்சியிலேயே மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது. இதைப்பற்றி பேச எங்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது. எங்களின் கைகளை கட்டிவிட்டு ஆளுங்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். இதைக் கண்டித்து வெளிநடப்பு செய் தோம்’’ என்றார்.

மீண்டும் பேரவைக்கு..

சிறிது நேரத்தில் திமுக உறுப்பினர்கள் மீண்டும் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

வாழ்வியல்

17 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்