எப்படி இருக்கும் / இருக்க வேண்டும் ஸ்மார்ட் சிட்டி?

இந்தியாவில் இறுதி செய்யப்பட்ட 'ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் முதல் 20 நகரங்களின் பெயர்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தின் சென்னையும் கோவையும் இடம்பெற்றுள்ளன.

இந்த நகரங்கள் போதுமான குடிநீர், மின்சாரம், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, பொதுப் போக்குவரத்து, தொலைத் தொடர்பு, மின் ஆளுமை, பொதுமக்கள் பங்களிப்பு என அனைத்துவித கட்டமைப்புகள் உடையதாக மேம்படுத்தப்படும். இந்த முதற்கட்ட 20 நகரங்களின் பெயர்களைத் தொடர்ந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் தலா 40 நகரங்களின் பெயர்களை மத்திய அரசு அறிவிக்கும்.

இறுதிப் பட்டியலைப் பொறுத்தவரை, சென்னை மற்றும் கோவை நீங்கலாக, இன்னும் மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, தூத்துக்குடி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாகத் தரம் உயர்த்தப்படும் இந்திய நகரங்கள் பட்டியலில் உள்ளன.

சரி, ஏற்கெனவே ஸ்மார்ட் சிட்டியாக உள்ள நகரங்களில் என்னென்ன உள்கட்டமைப்புகளும், வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன?

வசதியும் திட்டமும்

"ஒரு மனிதன் வாழ எதிர்பாக்கும் வசதிகளைவிட எல்லா வசதிகளையும் ஏற்படுத்துவதான் ஸ்மார்ட் சிட்டியின் நோக்கம்" - ஸ்மார்ட் சிட்டி திட்டம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி இப்படித்தான் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதே ஸ்மார் சிட்டி. அனைவருக்கும் வீடு, பொருளாதார வளர்ச்சி, சுத்தமான காற்று, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளும் இதில் அடங்கும்.

ஸ்மார்ட் சிட்டிகளில் குடிநீர், மின்சார விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார வசதி, போக்குவரத்து வசதி, வீட்டு வசதி, குறிப்பாக ஏழைகளுக்கு வீட்டுவசதி, அனைத்து வளாகங்களிலும் தகவல் தொடர்பு வசதிகள், குழாயைத் திறந்ததும் தண்ணீர், கழிவு நீர் சுத்திகரிப்பு, சிக்கன நீர் மேலாண்மை, குறைந்த எரிபொருள் பயன்பாடு, தரமான சாலை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள், மாசு இல்லாத நகரியங்கள், குப்பைகள் இல்லாத வீதிகள் போன்ற உள்கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் குடிமக்களுக்குச் சிறந்த வாழ்க்கைத் தரம் உறுதி செய்யப் படுவதுடன், தூய்மை, நிலையான சுற்றுச்சூழல் மற்றும் நவீன வசதிகள் மேம்படுத்தப்படும். தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் மயம், மின் ஆளுமைத் திறன், குடிமக்களின் பங்களிப்பு, பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் கல்வி போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்றும் ஸ்மார்ட் சிட்டி பற்றி மத்திய அரசு கூறியுள்ளது. இருந்தாலும் ஸ்மார்ட் சிட்டி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி திட்ட அறிக்கைகளைத் தயாரிக்கக் குழுக்களையும் மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. ஒவ்வொரு நகரங்களிலும் திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் குழுக்கள் மூலமே என்னென்ன வசதிகள் வரும் என்பது பின்னர் முழுமையாகத் தெரிய வரும்.

கிப்ட் நகரம்...

இருந்தாலும், தற்போதைய நிலையில் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் 'கிப்ட்' என்ற பெயரில் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் ஒன்று கட்டமைக்கப்பட்டுவருகிறது. காந்திநகருக்கும் அகமதாபாதுக்கும் இடையே இந்நகரம் 886 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் பிரம்மாண்ட ஸ்மார்ட் சிட்டி இது என்று சொல்லலாம்.

இங்குச் சிறப்புப் பொருளாதார மண்டலம், சர்வதேசக் கல்வி மண்டலம், ஒருங்கிணைந்த நகரியம், பொழுதுபோக்கு மண்டலம், உணவகங்கள், பலதரப்பட்ட மையங்கள், சர்வதேசத் தொழில்நுட்பப் பூங்கா, மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா, பெரிய வணிக வளாகங்கள், பங்குச்சந்தை மையம் அமைக்கப்பட்டுவருகிறது. இந்நகரத்தின் திட்ட மதிப்பீடு சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், இப்போது அரசு உருவாக்கத் திட்டமிட்டுள்ள ஸ்மார்ட் சிட்டிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு 100 கோடி ரூபாய் வீதம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது அமைக்கப்பட உள்ள ஸ்மார்ட் சிட்டிகளில் கிப்ட் நகரம் அளவுக்குப் பணிகளை மேற்கொள்ள வாய்ப்பில்லை.

வெளிநாடுகளில் உள்ள ஸ்மார்ட் சிட்டி...

சீனா மற்றும் ஐரோப்பிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டிகள் பல உள்ளன. இங்கேல்லாம் என்னென்ன வசதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கின்றன?

சிறப்பான நெரிசல் இல்லாத போக்குவரத்து மேலாண்மை, மேம்பட்ட குடிநீர் மற்றும் மின் இணைப்புகள், பொதுமக்கள் பாதுகாப்பு வசதிகள், சுகாதாரத் தீர்வு மையங்கள், திறன்மிகு கல்வி மையங்கள், ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம் நவீனமயமாக்கல், பொது இடங்களில் மின் விளக்கு வசதி, குற்றத் தடுப்பு, பொது நிர்வாகம், வேலை வாய்ப்பு உருவாக்கம், உள்ளூர் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம், தொழில்நுட்பப் பெருக்கம், தொலைத்தொடர்பு அகன்ற வரிசை இணைப்பு, மேம்பட்ட இணைய வசதி, பொருட்களைச் சந்தைப்படுத்தும் மையங்கள் எனப் பலதரப்பட்ட வசதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு ஸ்மார்ட் சிட்டிகளில் மின்சார கிரிட்களிலிருந்து சாக்கடை செல்லும் பைப்புகள் வரை அனைத்தும் ஒரு நெட்வொர்க்கில் இணைக்கப் பட்டிருக்கின்றன. கேமராக்கள், வயர்லெஸ் கருவிகள், தகவல் மையங்கள் என ஆங்காங்கே அமைக்கப் பட்டிருக்கின்றன. ஸ்மார்ட் சிட்டிகளில் பல முன்னனி நிறுவனங்கள் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கப் பல சாப்ட்வேர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்தியாவில் இவையெல்லாம் எந்தளவுக்கு சாத்தியம் என்பது ஸ்மார்ட் சிட்டி திட்டம் அமைக்கப்படும்போது தெரிந்துவிடும்.

என்ன சொல்கிறார் டேவிட் எப் ஹேமென்?

டேவிட் எப் ஹேமென், அமெரிக்க அரசில் பல்வேறு துறைகளில் உயர் பொறுப்புகளில் பணியாற்றியவர். ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்திலும் மிக முக்கிய பங்கு வகித்தவர்.

சில மாதங்களுக்கு முன்பு இவரிடம் 'தி இந்து' பேட்டி கண்டபோது, ஸ்மார்ட் சிட்டி குறித்து அவர் தெரிவித்த கருத்துகளை இங்கே மீண்டும் பகிர்வது பொருத்தமாக இருக்கும்.

ஸ்மார்ட் சிட்டி அமைக்க இந்திய அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது. இதில் அமெரிக்க நிறுவனங்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கும்?

இந்திய அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதுவரையில் எந்த நாட்டிலும் ஸ்மார்ட் சிட்டி குறிப்பிடத் தக்க அளவுக்கு உருவாக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் இந்தியாதான் முன்னோடியாக இருக்கும். அதிலும் 100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கம் என்பது மிகப் பெரிய விஷயம். ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் ஒத்துழைக்கத் தயார் என்று அதிபர் ஒபாமா டெல்லி வந்திருந்தபோது கூறினார். அந்த வகையில் அமெரிக்க நிறுவனங்களின் பங்களிப்பு கணிசமாக இருக்கும்.

ஸ்மார்ட் சிட்டி அவசியமானதா?

2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கு மக்கள் நகரங்களில்தான் வசிப்பர். அதிகரித்து வரும் மக்கள் தொகையைத் தாங்கும் அளவுக்கு நகரங்கள் விரிவாக்கப்பட வேண்டியது அவசியம். இது பெரும்பாலான நாடுகளுக்கு மிகவும் சவாலான விஷயம்தான்.

தொற்று நோய் பரவல், குற்றங்கள் பெருகுதல், சுற்றுச் சூழல் பாதிப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு உள்ளது. இவற்றுடன் பொருளாதார வளர்ச்சியையும் பார்க்க வேண்டும். மேலும் அரசின் சேவைகள் குறைந்த செலவில் விரைவாகக் கிடைக்க வேண்டும் என்று மக்கள் விரும்பு வர். குறைவான வளங்களுடன் தொழில்நுட்பத் திறன் மூலம் இதை அளிக்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவதால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். கல்வி மற்றும் வேலைக்காக பயணம் செய்வது குறையும். இதனால் கரியமில வாயு வெளியேற்றம் பெருமளவு குறையும். மேலும் அரசின் சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகும். இத்தகைய ஸ்மார்ட் சிட்டி-யில் எந்த இடத்தில் எந்த அளவு இடம் காலியாக உள்ளது. காரை நிறுத்த எந்த இடம் காலியாக இருக்கிறது என்பதைக் கூட ஸ்மார்ட்போனில் அறிந்து கொள்ள முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

15 mins ago

விளையாட்டு

8 mins ago

தமிழகம்

35 mins ago

க்ரைம்

46 mins ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்