ஆசிரியர் பிரச்சினையிலும் அலட்சியமா?- திமுக தலைவர் கருணாநிதி கண்டனம்

By செய்திப்பிரிவு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் முறையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பிரச்சினையிலும் தமிழக அரசு அலட்சியம் காடட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்று சரிபார்ப்பும் நடத்தப்பட்டாகி விட்டது. கடந்த மாதம் பட்டியல் வெளியிட்டார்கள். அதன்படி 14,700 பேர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றதாகக் கூறப்பட்டது.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், கல்லூரிகளில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றை தமிழக அரசு தான் தந்துள்ளது. தமிழக அரசு இவ்வாறு சான்றிதழ் கொடுத்தவர்களுக்கே, மீண்டும் ஒரு தகுதித் தேர்வை நடத்துவது என்பது ஏன் என்று தான் புரியவில்லை. அதிலும் "வெயிட்டேஜ்" என்ற பெயரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பிலும், பயிற்சிப் பள்ளித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பிலும், கல்லூரித் தேர்விலும், பயிற்சிக் கல்லூரித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வழங்கப்படுகிற மதிப்பெண்களை "வெயிட்டேஜ்" மதிப்பெண்களாகத் தந்து, தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களோடு கூட்டி வரும் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் பணி நியமனம் தற்போது நடைபெறுகிறது.

இந்த "வெயிட்டேஜ்" மதிப்பெண்ணை கூடுதலாக கிராமப்புறங்களில் வாழ்வோர், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் ஆகியோரில் 90 சதவிகிதம் பேர் பெறவே முடியாது என்பதையும் அதற்கான சூழ்நிலைகளையும் அனைவரும் அறிவர்.

"வெயிட்டேஜ்" மதிப்பெண்கள் முறையால், 1988-2000 வரை படித்தவர்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. இதற்குக் காரணம் அப்போதைய காலக் கட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மட்டும் படித்து 600 முதல் 800 மதிப்பெண்கள் வரை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் தற்போது 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே பள்ளியில் நூற்று மேற்பட்டோர் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.

பல்வேறு பல்கலைக் கழகங்களில், பல்வேறு பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும் வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. இந்த "வெயிட்டேஜ்" மதிப்பெண் காரணமாக 30 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த பின்னரும் வேலை கிடைக்காத சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

அதனால் தான் இந்த "வெயிட்டேஜ்" முறையை ரத்து செய்யக் கோரி கடந்த சில நாட்களாகத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி உண்ணாவிரதத்தை நடத்தி முடித்து, முதல் அமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்து முறையிட முயற்சித்து, கைதாகி பின்னர் விடுதலையானார்கள். அவர்களுடைய கோரிக்கை ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

"வெயிட்டேஜ்" முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்பது தான். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்றையதினம் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட நான்கு பேர் குளிர்பானத்தில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து குடித்து, அவர்களைக் காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. அவர்களுடைய போராட்டம் பற்றி அரசாங்கம் இதுவரை அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.

அனைத்துப் பிரச்சினைகளிலும் அலட்சியம் காட்டுவது போல இல்லாமல், ஆசிரியர் பிரச்சினை தலையானது என்பதை மனதிலே கொண்டு, தமிழக அரசு, குறிப்பாக முதலமைச்சரோ அல்லது அந்தத் துறையின் அமைச்சர் என்று இருப்பவரோ போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி, சுமூகமாக ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

4 mins ago

சினிமா

10 mins ago

கருத்துப் பேழை

25 secs ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்